தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 augustus 2011

ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்ட தீர்மானம் - கோத்தாபய

 (வீடியோ இணைப்பு)










'யுத்தக் குற்றங்களுக்காக' சிறிலங்காத் தலைவர்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிரேரணை நிறைவேற்றியதை சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார்.

கடந்த காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், சிறுபான்மையினருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்படமாட்டாது என இந்திய ஊடகமான Headlines Today தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்களின் நலனில் அக்கறை இருந்தால், அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோருவது பயனற்றது. இவ்விசாரணையானது தமழ் மக்களுக்கு எதனைக் கொண்டுவந்து சேர்க்கும்?" என கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்ப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில், யுத்தக் குற்றங்களை மேற்கொள்ளத் துணைபோன சிறிலங்காத் தலைவர்களுக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழ்நாட்டு சட்டசபையால் பரிந்துரை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலகம் தடையுத்தரவு வழங்கவேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரியுள்ளார். "இது ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்டுள்ள பரிந்துரையாகும். இது நியாயமற்றது. ஏனெனில் நாங்கள் சிறிலங்கர்கள். ஏனையவர்களை விட எமது நாட்டுக் குடிமக்கள் தொடர்பாக நாம் மிகவும் கவலையடைகின்றோம். ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரை மற்றும் அவரது அறிக்கை என்பன உண்மைக்குப் புறம்பானது" என ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அதிக அக்கறை கொண்டிருந்தால் சிறிலங்காக் கடற்பரப்பிற்குள் குறிப்பாக சிறிலங்காத் தமிழர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்ற கடற்பரப்பிற்குள் நுழைகின்ற இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்" எனவும் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அவர்கள் தமிழ் மக்களின் நலன் தொடர்பாகக் கதைக்கமாட்டார்கள். உண்மையில் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுமிடத்து இவர்கள் தமது குரல்களைத் தாழ்த்திவிடுவார்கள். இந்த ரீதியில் தமிழ் மக்கள் தொடர்பாக ஜெயலலிதா தனது உண்மையான கரிசனையைக் காட்ட விரும்பினால் முதலில் மீனவர் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும்" எனவும் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கரிசனைத் காட்ட வேண்டும் எனவும் சிறிலங்கா அதிபரான மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரனான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வை மீள அபிவிருத்தி செய்து அவர்களுக்குத் தேவையான அடிக்கட்டுமானப் பணிகளை மேலும் முன்னேற்றி அவர்களது வாழ்வை மீளச்செப்பனிட்டுக் கொள்வதற்காக நாம் அந்த மக்களுக்கு நிறையச் செய்யவேண்டியுள்ளது" என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா உள்ளக ரீதியில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்களை அடையாளங்கண்டு நீதியின் முன் நிறுத்தத் தவறினால், அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 2009 ல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களின் விளைவாக, பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதில் எந்தவொரு நியாயப்பாடுகளும் இல்லை என ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"அனைத்துலகப் பொறிமுறை ஒன்று இறைமையுள்ள நாட்டில் எவ்வாறு விசாரணை ஒன்றை மேற்கொள்ள முடியும்? நாம் எந்தவொரு பிழைகளையும் செய்யவில்லை. இது அனைத்தலக சமூகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. இது ஒரு பிழையான விளக்கப்பாடாகும். ஒரு சில நாடுகள் மட்டுமே இதில் உள்ளடங்கும்" எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஏனைய உலக நாடுகள் எமக்கு ஆதரவாயுள்ளன. ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகள் என்பன எமக்கு ஆதரவாயுள்ளன. அனைத்துலக சமூகம் என்பது இதுதான். உலகிலுள்ள ஆகக்குறைந்த மக்களை அனைத்துலக சமூகம் எனச் சொல்ல முடியாது" எனவும் தனது நேர்காணலில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குப் போதுமானது. இவற்றை விடக் கூடுதலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே தமிழ் மக்களுக்கேற்ற தீர்வு வழங்கப்பட்டுள்ளது என நான் கருதுகிறேன். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ஆகவே இதனை விட வேறு தீர்வைக் கேட்கவேண்டிய தேவையில்லை என நான் கருதுகிறேன்" எனவும் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

"இவற்றை விட மேலதிகமான என்ன செய்யவேண்டும்? போதியளவு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கப்பால் செல்லவேண்டிய தேவையில்லை என நான் கருதுகிறேன்" என கோத்தபாய ராஜபக்சா தனது நேர்காணலின் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
09 Aug 2011

Geen opmerkingen:

Een reactie posten