யாழ்ப்பாணத்தில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடாத்தி வரும் மஹிந்த ஹத்துருசிங்க பாவமன்னிப்பு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நாவாந்துறையில் தனது இராணுவ காடையர் குழுவைக் கொண்டு பொதுமக்கள் மீது காட்டுத் தாக்குதல் நடத்தி மீண்டும் ஒருமுறை சிங்கள வல்லாதிக்கத்துக்கு தமிழர்கள் என்றும் அடிமைகளே என்று நிரூபித்தார் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க.
இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த தமிழ்மக்களை இராணுவக் காடையர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் சேர்க்காமல் தடை விதித்து சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துப்பாக்கிய நிலைமை யாவரும் அறிந்ததே.
இன்றைய தினம் அதற்கு பிராயச் சித்தம் தேடும் முகமாக ஒருநாள் முன்னதாகவே அவசரப்பட்டு நல்லூர் கந்தனின் கந்தனின் தேர்த் திருவிழாவில் தனது அதே இராணுவ காடையர் குழுவைக் கொண்டு ஹெலி கொப்டரில் பூமாரி பொழிந்தார்.
வழமையாக தீர்த்த உற்சவம் அன்று தீர்த்தக் கேணியில் பூமாரி பொழிவது தான் இந்த காடையர்களின் வழக்கம்.
ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் ஹெலியில் பூமாரி பொழிந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் உண்மையில் கடுப்பாகி தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
நாவாந்துறையில் தாக்கப்பட்டவர்களின் காயம் கூட ஆறாத நிலையில் பூமாரி பொழிந்து மக்களை என்ன ஏமாற்றுகிறார்களா? என்று கோபத்துடன் பேசிக் கொண்டனர்.
முன்னர் குண்டுமழை பொழிந்து எத்தனை தமிழ் குடும்பங்களையே வேரோடு கருவறுத்தவர்கள் இப்பவும் அதே ஹெலியில் பூமழை பொழிவது மீளவும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற அவஸ்தையை ஏற்படுத்துகிறது.
இன்னமும் தங்களது இராணுவ வல்லாதிக்க அடக்கு முறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்கள் எத்தனை ஹெலியில் வந்து பூப் போட்டாலும் பிரயோசனம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
புலிகள் இல்லை என்ற நினைப்பில் நிராயுதபாணிகளாக உள்ள தமிழ் மக்களுடன் சண்டைபோட்டு உங்களின் வீர சாகசங்களை நிரூபிக்காதீர்கள்.
முதலில் தமிழர்களின் சொந்த மண்ணில் அவர்களை மரியாதையோடு நடத்துங்கள் அல்லது அந்த மண்ணை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்.. அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்.
தொடர்ந்து தமிழர்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். |
Geen opmerkingen:
Een reactie posten