தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 augustus 2011

தூக்குத் தண்டனையை நீக்க தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல! பெ. மணியரசன்

[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 09:51.18 AM GMT ]
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் அவர்களின் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது சரியல்ல.
அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு (3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை தெளிவுபட உறுதி செய்கின்றன. விதி 72 குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது.
அதே விதியின் உள் பிரிவு(3) குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும் மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தமக்குள்ள அதிகாரப்படி தனித்த முடிவை எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளது.
இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது.
இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வந்துள்ளார்கள்.
பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்று களுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்துள்ளது.
மேலே சொல்லப்பட்ட விவரங்கள் குறித்து உரியவாறு மறுப்பு விளக்கம் எதுவுமில்லாமல் குடியரசுத் தலைவர் நிராகரித்தப்பின் நிராகரித்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென்று கூறியுள்ளார்.
அத்துடன் அரசமைப்புச் சட்ட விதி 257 யும் அதன் உட்பிரிவு(2)யும் காரணம் காட்டி நடுவண் அரசு முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று கூறியுள்ளார்.
விதி 257 நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 57-ன் உட்பிரிவு(2) நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை, தொடர்வண்டிப்பாதை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றில் 257-யும் அதன் உட்பிரிவு(2)யும் இந்திய அரசின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு மேலே மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களையோ, மரண தண்டனையை நீக்கி கருணை மனுவை ஏற்கும் ஆளுநரின் அதிகாரத்தையோ, கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசுக்கு விதி 257-ம் அதன் உட்பிரிவுகளும் வழங்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் 1981ஆம் ஆண்டு மாரூர்ராம் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் கருணை மனுவை ஏற்பதில் ஆளுநரின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அது தனித்து செயல் படக்கூடிய அதிகாரம் என்று கூறியுள்ளார்.
நீதிபதி வீ.ஆர் கிருஷ்ண அய்யர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தப் பின் தமிழக அரசுக்கு (ஆளுநருக்கு) கருணை மனுவை ஏற்க அதிகாரமில்லை என்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது திரிபுவாதமாகும்.
கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள்.
அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். அதை விடுத்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று மொட்டையாகக் கூறி ஒதுங்கிக்கொள்வது அவருக்கு இந்த சிக்கலில் உள்ள அக்கறையைக் காட்டது.
15 நாட்களுக்கு முன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்று 3-பேர் தூக்குத் தண்டனை நீக்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை பேரவை தலைவரிடம் கொடுத்திருந்தார். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டது தமிழக அரசு. இதிலும் முதலமைச்சரின் அணுகுமுறை சரியானதல்ல.
மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அறிவிப்பை முதலமைச்சர் செல்வி செயலலிதா இன்று(29.8.2011) சட்டப்பேரவையில் விதி 110-கீழ் வெளியீட்டுள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்கக் கூடாது என்று தடுக்கும் விதியின் கீழ் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதுவும் மூன்று தமிழர் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் கையாளப்பட்ட உத்தியல்ல.
ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்கள் மற்றும் பன்னாட்டுத் தமிழர்களின் கோரிக்கையாக மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்கம் உருவாகியுள்ளதை கவனத்தில் கொண்டும், குற்றமிழைக்காத அப்பாவித் தமிழர்களின் உயிரைக் காப்பதில் அக்கறை காட்டியும் தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் தூக்குத் தண்டனையை நீக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Geen opmerkingen:

Een reactie posten