திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்றார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நித்யானந்தா பின்னர் ஜாமீனில் வெளிவந்து ஆசிரம பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நித்யானந்தா ஆசிரமத்தின் தமிழக தலைவர் நித்யசிவானந்தா, மற்றும் பெங்களூர் ஆசிரமத்தின் மானேஜர் ஆத்ம பிரமானந்தா ஆகியோர் கமிஷனர் திரிபாதியிடம் தனித்தனியாக 2 புகார் மனுக்களை அளித்தனர்.
அதில் ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டது. பின்னர் ரூ.35 கோடி பணம் தரவேண்டும் என்று மிரட்டினார்கள். முதலில் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஆசிரம நிர்வாகிகளை சிறை வைத்து ரூ.30 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டனர் என்று கூறியிருந்தனர்.
இது தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆபாச படம் எடுத்த நித்யா னந்தாவின் சீடர் லெனின் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பரணிகுமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தா- ரஞ்சிதா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை ஏற்று நேற்று மாலை 3 மணிக்கு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நித்யானந்தா ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆபாச படம் வெளியானது மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மிரட்டல் சம்பவங்கள் குறித்து நித்யானந்தா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக தன்னால் புகார் கொடுக்க முடியாதது குறித்தும் ரஞ்சிதா எடுத்துக் கூறியுள்ளார். தன்னை யார்-யார் மிரட்டினார்கள் என்பது பற்றிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆபாச படத்தை காட்டி சீடர் லெனின் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று ரஞ்சிதா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்தும் பல்வேறு தகவல்களை ரஞ்சிதா கூறியுள்ளார். இதையடுத்து சீடர் லெனினிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இந்த வழக்கில் இவர் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சக்சேனா, அய்யப்பன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக 2 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச படவிவகாரம் 1.5 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சூடு பிடித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten