தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 augustus 2011

மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''

மகாகவி பாரதியாரின் கவிவரிகள் முணுமுணுக்கப்பட்ட காலம் மாறிப்போய் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கி, அன்றாட கடமைகளைக் கூட மறந்து ஏக்கம், பயம், பதற்றம், சந்தேகம் மட்டுமன்றி ஒருவகையான மனப்பிராந்தியில் வாழவேண்டிய நிலையே நாட்டின் சில பாகங்களில் நிலவுகின்றது.

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டு சுறுசுறுப்பான வாழ்க்கையை ஆரம்பித்து அதில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் "மர்ம மனிதன்' "கிறீஸ் மனிதன்" எனும் அச்சத்தினால் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் வேலைநேரத்திற்கு புறம்பாக மக்கள் மேலதிக வேலைகளை தேடியலைகின்ற இக்காலகட்டத்தில் இவ்வாறான பீதியினால் நேரகாலத்துடன் குடும்பத்தோடு வீட்டிற்குள்ளே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மர்ம மனிதர்களின் அச்சத்தினாலும் சந்தேகத்தினாலும் மக்கள் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

பெண்களை கண்டால் பேயும் இரங்கும் என்பார்கள் எனினும் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கின்ற கிறீஸ் மனிதன் அன்றேல் மர்ம மனிதன் பெண்களை மட்டுமே குறிவைப்பதில் இருக்கின்ற மர்மம் என்ன? சரி, யார் இந்த கிறீஸ் மனிதன்? தான் செய்கின்ற தவறுகளிலிருந்து தப்பிப்பதற்கும் மற்றவர்களிடம் அகப்பட்டு கொள்ளாமல் இருப்பதற்காக உள்ளாடை மட்டுமே அணிந்து உடல் முழுவதும் கிறீஸ் பூசிக்கொண்டிருப்பவனே கிறீஸ் மனிதனாவான் என்று கூறப்படுகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் கிலிகொள்ளும் செயற்பாடுகளில்அவன் ஈடுபடவும் இல்லை அச்சுறுத்தவும் இல்லை என்பது வெளியாகின்ற செய்திகளிலிருந்து புலனாகின்றது.

எனினும் வெளியாகியிருக்கின்ற தகவல்களின் பிரகாரம் தங்களை தாக்கவருகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை, தொப்பி அணிந்திருப்பதுடன் சப்பாத்தும் போட்டிருக்கின்றான். சில நேரங்களில் முகத்தை மூடி கறுப்புத் துணியினால் கட்டியும் இருக்கின்றான் அப்படியாயின் அவ்வாறானவன் கிறீஸ் மனிதன் அல்ல மர்ம மனிதனேயாவான்.

மர்ம மனிதன் தனது சேஷ்டைகளை பெண்கள் மட்டும் இருக்கின்ற வீடுகளிலேயே கூடுதலாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றான். அப்படியாயின் அந்த மர்ம மனிதன் வெளியிடத்திலிருந்து வந்தவனாக இருக்கமுடியாது. குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களினால் மட்டுமே இவ்வாறு அச்சுறுத்த முடியும்.

தாக்குதல், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் சில இடங்களில் வதந்திகளே பரப்பிவிடப்படுகின்றன. இதனால் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போலவே மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மர்ம மனிதர்களின் நடமாட்டம் எனும் போர்வையில் சிற்சில இடங்களில் தனிப்பட்ட குரோதமும் தீர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களை அச்சத்தின் பீதியில் வைத்திருப்பதற்கும் சிந்திக்காது விடுவதற்கும் இவ்வாறான புரளிகள் கிளப்பிவிடுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் , ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவிருக்கின்ற நிலையிலும் இவ்வாறான பயப்பீதி நாட்டின் கல்வி வளர்ச்சியில் சற்றேனும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் தனது சேஷ்டையை புரிந்த மர்ம மனிதன் வயது முதிர்ந்த எட்டு பெண்களை கொன்றொழித்தான். இதனால் இரத்தினபுரியில் மட்டுமின்றி முழு நாட்டிலும் பெரும் பீதி ஏற்பட்டிருந்தது. மக்களின் எதிர்ப்பலைகள் வெகுவாக அதிகரித்தன. நிலைமையை புரிந்து கொண்ட அரசாங்கம் விசேட அதிரடிப்படையினரை காவலுக்கு அனுப்பி இரண்டொருவரை கைது செய்தது.

மர்ம மனிதன் "காட்டுப்படை அணியை'' சேர்ந்தவன் என்றும் படையிலிருந்து தப்பியோடியவர்கள் என்றும் பரவலாக கருத்துக்கள் வெளியான போதிலும் மனநோயால் பாதிக்கப்பட்ட சிலரையே பொலிஸார் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தில் கைது செய்து பின்னர் விடுவித்தும் இருக்கின்றனர்.

இரத்தினபுரியில் தனது சேஷ்டையை ஆரம்பித்த மர்ம மனிதன் வடக்கு, தெற்கு மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் இன்றேல் இடங்களில் தனது மர்ம செயலை காட்டவில்லை இது ஏன்? என்ற சந்தேகமும் வலுப்பெறுகின்றது. எனினும் மர்ம மனிதனின் சேஷ்டைகள் மலையகத்தில் பொதுவாக பெருந்தோட்டப் புறங்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

முகத்திற்கு திரவத்தை வீசுதல், தலைமுடியை கத்திரித்தல், வருமாறு பற்றைக்காடுகளில் ஒழிந்திந்து கொண்டு பெண்களை கூப்பிடுதல், பெண்கள் கொழுந்து பறிக்கும் இடங்களில் மரங்களிலிருந்து விறு விறுவென்று இறங்கி அச்சுறுத்தல் போன்ற செய்திகளே அன்றாடம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதேபோன்று மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் செய்தியாகவே இடம்பிடித்துக் கொள்வதற்கு தவறவில்லை. எனினும் அதற்கு பின்னர் சட்டரீதியாக பொலிஸா ரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை.

இதனால் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதிக் கொண்டும் உள்ளனர். சட்டத்தை மக்கள் கையிலெடுக்க முடியாது. எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் காரணமாகவே சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தாம் கோரி நிற்பதாக மக்கள் விளக்கமளிக்கின்றனர்.

இந்நிலையில் அப்புத்தளை தொட்டுலாகலை தோட்டத்தில் நடமாடிய மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் இருவரும் படுகாயமடைந்து பலியாகியுள்ளனர். மர்ம மனிதனின் நடமாட்டம் என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டே இவ்விருவரும் பெண்களை பயமுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு உயிரையே இழந்துள்ளனர்.

மர்ம மனிதன் விவகாரத்தில் பொலிஸ் தரப்பு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் இவ்வாறான மனித உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்பது மட்டுமன்றி தங்களுடைய சொந்த இடங்களிளுக்கு வெளியே கடமையாற்றுபவர்கள் இரவில் மட்டுமன்றி பகல்வேளைகளிலும் கூட தங்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு அஞ்சும் அளவிற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தியுள்ளான் அல்லது வதந்தியினால் மக்கள் அஞ்சியுள்ளனர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களை புரிந்து விட்டு தலைமறைவாக வாழ்கின்ற குற்றவாளிகளை பொலிஸாரினால் கைது செய்ய முடியுமாயின் மர்ம நபர்களை மட்டும் ஏன் கைது செய்ய முடியாது? என்ற கேள்வி எழும்பத்தான் செய்கின்றது.

ஒவ்வொரு கிராமங்களிலும் இன்றேல் பெருந்தோட்டங்களிலும் இரண்டொரு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டால் பொது மக்களின் ஒத்துழைப்புடன் மர்ம மனிதனை கைது செய்வது கடினமான விடயமாக இருக்காது என்பது பலரினதும் அபிப்பிராயமாகும்.

மர்ம மனிதனின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க மர்ம மனிதன், கிறீஸ் மனிதனின் பெயரை பயன்படுத்தி சிலர் தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தியும் வருகின்றனர். பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளின் கதவுகளை தட்டி தங்களுடைய இச்சைகளை தீர்த்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளனர்.

பெருந்தோட்டங்களை பொறுத்தவரையில் தோட்டங்களுக்குள் வியாபாரத்தில் ஈடுபடும் வெளியிடங்களைச் சேர்ந்த நடமாடும் வியாபாரிகள் இவ்வாறான அச்சுறுத்தலில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பகல் வேளைகளில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் பெண்கள் மட்டுமே வாழ்கின்ற குடும்பத்தை இனங்கண்டு கொண்டு இரவு வேளைகளில் அச்சுறுத்துவதாகவும் அறிய முடிகின்றது. இதற்கு மத்தியில் சிலர் கையில் கிடைத்த எதனையாவது சூறையாடிக்கொள்வோம் என்ற நோக்கில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதற்றம்மிகுந்த சூழ்நிலையில் பொலிஸாரின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே மலையகத்திற்குள் கடமையில் ஈடுபடுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினர் அனுமதிக்கப்பட்டனர்.

ஓர் சம்பவம் இடம்பெறுகின்ற போது பொலிஸாரின் மீது குற்றஞ்சாட்டி அதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதன் பின்னரே இராணுவமோ அல்லது இதர படைகளோ மேலதிக பாதுகாப்பிற்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், மலையகத்தில் ஒரே இரவுக்குள் விசேட அதிரடிப்படையினர் கடமைக்கு அழைக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன.

விசேட அதிரடிப்படையினரால் மட்டும் தான் மர்ம மனிதனை பிடிக்க முடியும் என்றால் விசேட அதிரடிப்படையினரின் தளமாக இருக்கின்ற கிழக்கில் உலாவுகின்ற மர்ம மனிதனை அவ் விசேட அதிரடிப்படையினரால் ஏன் கைது செய்ய முடியவில்லை, அங்கு மர்ம மனிதனின் சேஷ்டையை ஏன் அப்படையினரால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

கிழக்கிலிருந்து விசேட அதிரடிப்படையினரை முழுமையாக விலக்கிக்கொண்டு வடக்கைப் போன்று கிழக்கிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தி மலையகத்தை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்து அதாவது சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பகுதிகளை படையினரின் கீழ் கொண்டுவருவதற்காக வகுக்கப்பட்ட முயற்சியா? என்பது வி�டகாணப்படாத வினாவாகும்.

இல்லையேல் பெருந்தோட்ட தொழில்துறை மீது அதிருப்தி கொண்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொழில்புரியும் இளைஞர்கள் மற்றும் குடும்பத் தலைவனை மீண்டும் தோட்டத்திற்குள் வரவழைத்தால் தான் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற வியூகத்தில் தொழிற்சங்கங்களினால் மர்ம மனிதன் ஏவி விடப்பட்டானா? என்பது மற்றுமொரு வினாவாகும்.

மர்ம மனிதனின் நடமாட்டம், சேஷ்டை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் பல்வேறு வினாக்கள் எழும்பியிருந்தாலும் எதிர்க்கட்சிகளின் பார்வையில் அவை வேறுவிதமாகவே தென்பட்டன. அவசரகாலச் சட்டத்தினை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போது அவசரகாலச்சட்டத்தை ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்காக அரசினால் ஏவி விடப்பட்ட மர்ம மனிதன் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வும் துட்டகைமுனு மன்னனின் பெறுமதிமிக்க "வாள்' "கிரீடம்" ஆகியவற்றை கண்டு பிடித்து நேர்த்திக்கடன் செய்துகொள்வதற்காவே மர்ம மனிதன் மக்களை அச்சுறுத்தி அவற்றை தேடி வருவதாக ஜனநாயக தேசியக்கூட்டணியும் தெரிவித்திருந்தன.

எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படுகின்ற சாதாரண குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் முண்டியடித்துக்கொண்டு பதிலளிக்கின்ற ஆளும் தரப்பினர் கிறீஸ் மனிதன் இன்றேல் மர்ம மனிதனின் அடாவடித்தன குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது மௌனிகளாகவே இருந்து விட்டனர். இந்நிலையிலேயே ஆளும் தரப்பு எம்.பி.யான வீ. இராதாகிருஷ்ணன் கிறீஸ் மனிதனின் பீதியில் மலையகத்திற்குள் படையினரை கொண்டுவர அரசியல் வாதிகள் முயற்சிப்பதாகவும் அது வடக்கில் ஏற்படுத்திய துயரத்தை மலையகத்திலும் ஏற்படுத்திவிடுமென எதிர்வு கூறியிருந்தார்.

அரசாங்கத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டும் மக்களை அச்சத்தில் உறைய வைப்பது ஏன்? என்பதெல்லாம் எதிர்காலம் பதிலளிக்கவேண்டிய கேள்வியாகும்.

எது எப்படியோ மர்ம மனிதன் மலையகத்தில் விசேட அதிரடிப்படையை ஊடுருவுவதற்கு வழிவகுத்துவிட்டான் அதற்கு மலையக கட்சிகளும் இடமளித்து விட்டன என்பது மட்டும் திண்ணம். மர்ம மனிதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அவதானத்துடனும் விழிப்போடும் இருந்தால் போதுமானதாக இருக்கும் என்பது மட்டுமே நிதர்சனம்.
16 Aug 2011

Geen opmerkingen:

Een reactie posten