தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 augustus 2011

இன்று முக்கியமான நாள்…!(மீரா பாரதி எழுதியது!!)

31.12. … …

அதிகாலை அமைதியின் மீது தாக்குதலை நடாத்தியது மணிக்கூட்டின் “எலாம்” சத்தம்.
அதிகாலை ஐந்து மணிக்கு…
இந்த சத்தம் என் காதை மட்டும் பிளக்கவில்லை….
அமைதியான காலைப் பொழுதையும் என் மனதையும் மாசுபடுத்தியது…
சத்தத்தைக் கேட்கும்போது எரிச்சலாக இருந்தது…
“ச்சே… காலையில சந்தோஸமாக நித்திரைவிட்டு எழும்புவதற்கு ஏற்றவாறு இனிமையான ஒரு “எலாம்” சத்தத்தை இன்னும் ஒருவர் கூட உருவாக்கமாலிருக்கின்றார்களே” என, இந்த “ஏலாம்” சத்தத்தை கேட்டும் ஒவ்வொரு முறையும்; என் மனதில் இந்த எண்ணம் தவறாமல் உருவாகும்.
தொடர்ந்தும் இந்த சத்தத்தை கேட்காமல் தப்பிக்க….
படுத்திருந்தபடியே… கண்ணை மூடிக்கொண்டு அவசர அவசரமாக மணிக்கூட்டைத் தேடி…
இல்லையில்லை…
(மனிதர்கள் வழமையாக செய்யும் செயலை எந்தவிதமான பிரக்ஞையுமின்றி சரியாகவே செய்வார்கள்…மாடுகள் வீடு வந்து சேர்வதைப் போல)…
எனது கை அதுவாகவே மணிக்கூட்டைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் அழுத்தி “எலாம்” சத்ததை நிறுத்தும்…அப்படியே மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் போடுவேன்…
சத்தத்தினால் உருவான எரிச்சலை என் மனதிலிருந்து இல்லாமல் ஆக்குவதற்காக…
இப்படி சொல்வது கூட ஒரு சாட்டுத்தான்….
இந்தக் குட்டித்தூக்கம் ஐந்து நிமிடமாகவும் இருக்கும் அல்லது ஒரு மணித்தியாலமாகவும் இருக்கும்…
இந்த நேரத்தில் கண் விழித்தால், உடம்மை கூனி…சுருட்டிக் கொண்டு, தலையிலிருந்து கால் வரை போர்வையால் போர்த்திக்கொண்டு, கண்ணை இறுக முடிக்கொண்டு, மீண்டும் படுப்பது
“ஆஹா”…ஒரு தனித்துவமான சுகமான அனுபவமே….
ஆனால் வழமையைப் போல இன்று செய்யப் பிடிக்கவில்லை…
இன்று முக்கியமான நாள்…
ஒவ்வொரு வருடமும் இப்படியான நாட்களில் குட்டித் தூக்கம் போடவே மாட்டேன் …துடிப்புடன் சந்தோஸமாக எழும்பிவிடுவேன்…
இன்று வழமையான வருடங்களைவிட மிகவும் முக்கியமான ஒரு நாள் எனக்கு….பல மடங்கு மகிழ்ச்சியான நாள்…கண்ட கனவு நனவாகப்போகும் நாள்….
உடலில் உற்சாகமான சக்தி இருந்ததாலும் முளை விழித்திருந்ததாலும்….
குட்டித்தூக்கம் எங்கோ ஓடிப்போய்விட்டது…

இன்று வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31…
இது எனது சந்தோஸமான மனநிலைக்கான காரணங்களில் ஒன்று….
நாளை பிறக்கப்போகும் புதுவருடத்திற்காக என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றறையும் சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நாள் இன்று…
புதுவருடத்தை ஒழுங்காக ஆரம்பித்தால் அந்த வருடம் முழுக்க ஓழுங்காக இருக்கும் என்பது சிறுவயது முதல் இருந்து வருகின்ற நம்பிக்கை…
நான் குப்பைதான்…ஆனால் இந்த நாளில் எப்படியாவது கஸ்டப்பட்டு எனது அறையை கூட்டி சுத்தம் செய்துவிடுவேன்…உடுப்புகளை கழுவி அடுக்கிவைத்துவிடுவேன்…சிறய கபேட்டில் உள்ள எனது புத்தகங்களை துசு தட்டி ஒழுங்காக அடுக்கிவிடுவேன்….இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவிட்டுத்தான் குளிக்கச் செல்வேன்….
ஆனால் இன்று உடல் மனம் எல்லாம் உற்சாகமாக இருந்தபோதும் இதையெல்லாம் செய்யவில்லை…
ஏனனில் ஒருவரை சந்திக்க வேண்டும்…
வழமையாக சந்திப்பவர் தான்….ஆனால் இன்று சந்திப்பதில் ஒரு விசேசம் இருக்கின்றது…
அதனால்;தான் வழமையான வருடங்களைவிட இன்று மிக முக்கியமான நாள் எனக்கு….
….

“ஏலாம்” சத்தத்தை மட்டும் நிப்பாட்டிவிட்டு கண்ணை விழித்து வைத்துக்கொண்டு படுத்தேயிருந்தேன்….
பக்கத்து அறையில் அம்மாவும் அப்பாவும் சத்தம் போடாமால் “குசு குசு” என கதைக்கும் சத்தம் கேட்டது…

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக,
வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கே அம்மாவும் அப்பாவும் எழும்பிவிடுவார்கள்…
அம்மா தனது சோம்பலையும் மீறி அல்லது அதை முறித்துக் கொண்டு நித்திரை விட்டு எழும்புவா…
பொறுப்புணர்வுடன்….விருப்பத்துடன் எழும்புகின்றாவா…
அல்லது மனைவி, தாய் என்ற தனது கடமையை நிறைவேற்றுவற்றுவதற்காக கட்டாயாமாக எழும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் எழும்புகின்றாவா என்று தெரியாது…
எதற்காக இப்படி எழுப்புகின்றா என இன்றுவரை அறியவோ புரியவோ முடியவில்லை…
ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமோ இல்லையோ சமூகத்தால் நம் மீது சுமத்தப்பட்ட கடமைகளை பொறுப்புணர்வுடன் செய்யவேண்டுமாக்கும்….
ஒருவரின் சுய விருப்பு வெறுப்புக்கு பெரிய முக்கியத்துவமில்லையாக்கும்….
அதற்கான ஜனநாயக மறுப்பு குடும்பத்திற்குள்ளேயே ஆரம்பித்துவிடுகின்றதுபோல…?
அம்மா என்னையும் இந்த நேரத்திற்கு வழமையாக எழுப்பிவிட்டுவிடுவா…
இதனால் அதிகாலையில் எழும்புவது எனது நாளாந்த பழக்கமாகி
இப்பொழுது என் இயல்பாகவே மாறிவிட்டது…
இப்பவெல்லாம், விடிய எழும்பாவிட்டால்; மனம் சோர்ந்துபோய்விடுகின்றது….
….
தக்கச்சிமாரை எழுப்புவினமோ இல்லையோ என்னை மட்டும் அம்மா என் சிறு வயதிலிருந்தே எழுப்பிவிடுவார்…
எல்லாம் அப்பாவின் கட்டளைதான்…
காலையில் எழும்பி படிப்பது நல்லது…நன்றாக மனதில் பதியும் என்பார்…
இது அவரது நம்பிக்கை?…அனுபவம்?…புரிதல்?….ஏதோ ஒன்று…
நான் இந்த நேரம் எழும்பி படிக்கின்றேனா… அல்லது எனது மண்டைக்குள் பதிகின்றதா…என்பது முக்கியமல்ல…நான் எழும்பி இருக்கவேண்டும் அவ்வளவுதான்…
புத்தகமோ விரிந்தபடி இருக்கும்…..இரண்டு வரிகள் வாசிப்பேன்…
என்னை அறியாமலே எனது தலை புத்தகத்தின் மீது விழும்…
உடனே சுதாகரித்துக் கொண்டு மீண்டும் எழுந்து கண்ணை நன்றாக திறந்து மீண்டும் வாசிக்க ஆரம்பிப்பேன்…
அல்லது மீண்டும் புத்தகம் தலையணையாக மாற ஒரு குட்டித் துர்க்கம் போடுவேன்…
சாத்துவாய் (வாயிலிருந்து வீணி) வடிந்து படிக்கின்ற பக்கங்களை நனைத்திருக்கும்….
சில நேரம் அதிலிருக்கின்ற எழுத்துக்கள் கரைந்து காணாமல் போயிருக்கும்
இப்படியாவது அவை என் மண்டைக்குள் சென்று ஓழிந்து கொண்டதா என்றால் அது சந்தேகமே….
இது காலையில் எழும்புவதால் வருகின்ற என் பிரச்சனை…
இதைவிட இப்படி என்னை எழுப்பி விடுவதால் இன்னுமொரு பிரச்சனையும் இருந்தது….
…..
என்னை மட்டும் காலையில் படிக்க எழுப்பியதில் இரண்டு தங்கச்சிமாறுக்கு அப்பா அம்மா மீது நிறைய கோவம் இருக்கின்றது….
“நாங்க பொம்பிளப்பிள்ளைகள் என்பதனால்தான் காலையில் படிக்கிறத்துக்கு எங்களை எழுப்பியதில்லை” என்று இப்பொழுதும் சண்டைபோடுவார்கள்…நிறைய கோவம் இருக்கின்றது போல…
நானும் அம்மா அப்பாவை விட்டுக்கொடுக்காது…
“அவர்கள் எழுப்பிவிடாட்டியும்; நீங்களே எழும்பி பழகியிருக்கலாம் தானே…. நீங்களாகப் படித்திருக்கலாம் தானே… ஆனால் நீங்கள் அதற்கு முயற்சிக்கவில்லை… சும்மா அவர்களைக் குறை மட்டும் சொல்லாதீங்க” என ஒரு ஆணாக எனக்கு கிடைத்த சலுகையை நியாயப்படுத்திவிடுவேன்…
ஆனால் மனதுக்குள்…
“தங்கச்சிமாரையும் என்னை எழும்பியதுபோல் காலையிலையே எழுப்பி பழக்கப்படுத்தியிருக்கலாம்…
படிக்க ஊக்குவித்திருக்கலாம்தான்…ஆனால் ஏன் அவர்கள் அதை செய்யவில்லை? இது பாரபட்சம்தானே?.” என் நினைப்பேன்… வெளியில் மட்டும் சொல்லமாட்டேன்…
இந்த நினைப்புடன்… ஒரு சந்தேகமும் எப்பொழுதும் இருந்துது…
அப்பா நம்புகின்ற மார்க்சியத்தில் அல்லது பின்பற்றிய கட்சியில் குடும்பத்திற்குள் வாழும் பெண்கள், மனைவி, பெண் பிள்ளைகள் பற்றியோ அவர்களது உரிமைகள் பற்றியோ ஒன்றும் மில்லையாக்கும்…அப்படி இருந்திருந்தாலும் அதைப் பின்பற்றி மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்பதும் சந்தேகமே….
இதைப் பற்றி அப்பாவுடன் விவாதிக்கும் தைரியம் ஒருபோதும் எனக்கிருந்ததில்லை…
…..
அம்மா என்னை எழுப்பிய பின் தேத்தண்ணி ஊத்தி அப்பாவிற்கும் கொடுத்து எனக்கும் கொடுத்துவிடுவா…
….
அம்மாவிற்கு, அப்பாதான் முதல் முக்கியம்…
புதுச் சோறு, முதற் சோறு கொடுப்பதிலிருந்து அப்பாவிற்கு தான் முதலிடம்…
அதன்பின்தான் நாங்கள், பிள்ளைகள்…
 ….
தேத்தண்ணி குடித்துக் கொண்டு, இருவரும் தமது நாளாந்த வாழ்க்கை பிரச்சனைகள் செலவுகள் வரவுகள்  மற்றும் மற்றவர்கள் பற்றிய பிரச்சனைகள் பற்றி மட்டுமல்ல தங்கள் கனவுகளையும் எங்களுக்கு (பிள்ளைகளுக்கு) கேட்காதவாறு காலையிலையே கதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இன்றும் அப்படித்தான் கதைத்துக்கொண்டிருந்தார்கள்…
அவர்கள் என்ன கதைக்கின்றார்கள் என்பது அரை குறையாகவே கேட்கும்…
சில நாட்களில் காதை முழுமையாக அதற்கு அhப்பணித்து கூர்ந்து கவனிப்பேன்…
ஆனால் இன்று அதைக் கேட்பதில் அக்கறையில்லாது இருந்தது…
….
….
இன்று அம்மா என்னை எழுப்பிவிடவில்லை…
எனக்கு இன்று முக்கியமான நாள் என்பதால் கொஞ்சம் சந்;தோஸமாகப் படுத்திருக்கட்டும் என விட்டுவிட்டாபோல….

யன்னல்களின் ஊடாக அறையினுள்ளே மெல்லிய அதிகாலை ஓளிக்;கீற்றுக்கள் வந்து விழுந்தன….
இதனால் அறையினுள் இருந்த இருட்டு எங்கோ சென்று ஓழிந்துகொண்டது…
எங்கே போய் இந்த இருட்டு ஒழிந்திருக்கும்…
வெளிச்சம் இல்லாது போகும் அந்தக் கணமே எங்கிருந்து என்றாலும் மீண்டும் ஓடிவந்துவிடும் இந்த இருட்டு….இரண்டும்; ஒழிந்து விளையாடுகின்றனவாக்கும்….
யார் யாரைக் கண்டு பிடிப்பார்கள்…எப்பவாவது வெளிச்சம் இருட்டை கண்டுபிடித்திருக்குமா?
இல்ல இருட்டுத்தான் வெளிச்சத்தைக் கண்டு பிடித்திருக்குமா?
அல்லது இவை இரண்டும் ஒருவரை ஒருவர் எப்பொழுதாவது சந்தித்திருப்பார்களா?
இல்ல இருட்டு வெளிச்சத்திற்குப் பயத்தில் அது போகும் மட்டும் ஓழிந்து பார்த்துக்கொண்டிருக்கின்றதா…
….
“சு;ச்;;ச….இருட்டைப் போல எனக்கும் ஓழிந்து கொள்ள முடிந்திருந்தால்…
அல்லது இருட்டை விரட்டும் ஆற்றல் ஓளிக்கு இருப்பதைப் போல எனக்கும் இருந்திருந்தால்..” என மனதின் ஒரு பகுதி நினைக்க மறுபகுதி….
“ஓன்றும் செய்திருக்கமாட்டாய்…இருக்கின்றதை கொண்டு என்ன செய்யலாம் எனப் பார்” என்றது
….
அறையினுள்ளே வந்த சூரிய வெளிச்சம் புத்தக அலுமாறியில் பட்டுத் தெறித்து எனது கண்களில் விழுந்தது…
சரிந்து படுத்திருந்த எனது கண்களில் சிறிய கப்போட்டிலிருந்த புத்தகங்கள் தெரிந்தது…
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மூவரும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்கள்…
“அவர்கள் முறைத்துப் பார்க்கின்றார்கள்” என என் மனம் தான் நினைக்கின்றதுபோல…
அவர்கள் ஏன் என்னைப் பார்த்து முறைக்க வேண்டும்…?
உலகத்தைப் பற்றி அவர்களது மன உலகத்தில் அவர்கள் சிந்தித்துகொண்டிருக்கின்றபோது எடுத்த புகைப்படங்களாக்கும் இவை..…
அல்லது….
புகைப்படங்கள் இயற்கையாக இருக்கவேண்டும் என நான் விரும்பினாலும்
சில புகைப்படங்களில் “நான் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்” போல செயற்பையாக “போஸ்” கொடுப்பேன்…அப்படி நானே என்னைப் படம் எடுத்த கணங்களும் உள்ளன…
இவர்களும் என்னைப் போல சிந்திப்பதுபோhல்; “போஸ்” கொடுத்த படங்களாக இருக்குமோ இவை?
பொய்யாக போஸ் கொடுத்தார்களோ இல்லையோ அவர்களது சிந்தனை தானே உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றது இப்பொழுதும் என்பதை ஏற்றுத்தானே ஆகவேண்டும்…
….
காலையிலையே மனதுக்குள் அரசியல் புகுந்துவிட்டது…
இதிலிருந்து எனது கவனத்தை திருப்ப…
சரிந்திருந்த உடம்பை நேராக நிமிர்த்தி…கால்களை நன்றாக நீட்டி விட்டு… கைகளை இரு புறமும் விரித்து சோம்பல் முறித்துக் கொண்டேன்….
காலடிப் பக்கம் இருந்த சைக்கிள் (துவிச்சக்கரவண்டி) கண்ணில் பட்டது…
“புதிய உறவு வந்தவுடன் என்னை கைவிட்டுவிட்டாயா?” என அது கேட்பதுபோல் இருந்தது எனக்கு…
இது மனதின் ஒரு மூலையில் சிறிய குற்ற உணர்வை ஏற்படுத்திய போதும்….
புதிய உறவின் நினைவுவர உற்சாகமாக எழுந்து….படுத்த பாயை சுருட்டி முலையில் வைத்துவத்தேன்.
….
கொழும்பு வந்த பின், எத்தனையோ தடைவை படுப்பதற்காக கட்டில் வாங்கித்தருவதாக அப்பா கேட்டும் “பாயிலையே படுக்கின்றேன்” எனக் கூறி மறுத்துவிடுவேன்.
எதிர்காலத்தில் புரட்சி செய்வதற்கு இப்பொழுதே என்னைத் தயார் செய்யவேண்டும்…
வசதிகளையும் வாய்ப்புகளையும் சொகுசுகளையும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்…இதனால் சிகரட், சாராயம் குடிப்பது, மசாலாப் படங்கள் பார்ப்பது என அனைத்தையும் புறக்கணிப்பதிலும் உறுதியாக இருந்து பரிசுத்தமான புரட்சியாளனாக இருக்க விரும்பினேன்…
“ஏன் கட்டில் வேண்டாம்” என்பதற்கு இந்த விளக்கத்தை அப்பாவிடம் சொல்லியிருந்தால் மதிப்பாரா? சிரிப்பாரா? அல்லது கோவம் வந்திருக்குமா? என்று தெரியாது…ஆனால் ஒரு போதும் சொல்லவில்லை சொல்வதற்கு தைரியம் வரவில்லை…
சிலநேரம் அவருக்குப் புரிந்திருக்கும்….கணக்கில் எடுக்காமல் விட்டிருப்பார் போல…
“இளம் பருவக் கோளாறு காலம் மாற மாறிவிடுவான்”….என அவரது அனுபவம் சொல்லியிருக்கும்….

….
எனது அறையிலிருந்து அப்பா அம்மாவினது அறையைத் கடந்துதான் முன் விறாந்தைக்கோ…குசினிக்கோ பாத்ருமுக்கோ செல்லவேண்டும்….
அவர்களின் அறையில் அப்பாவின்ட தங்கச்சியின்ட மகள் படுத்திருந்தா…பிறந்ததிலிருந்து அப்பா அம்மாவிடம்தான் வளர்கின்றா….
அந்த அறையையும் தாண்டி சாப்பாட்டு அறைக்குச் சென்றேன்…
முன்விறாந்தையில் சூரியனின் ஓளிக் கதிர்கள் நன்றாக விழுந்திருந்தது…
அது முன்அறையை பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றியிருந்தது…
அப்பா முன் விறாந்தையில் இருந்;தவாறு ஒரு கையில் தேத்தண்ணியையும் வைத்துக்கொண்டு மறுகையால் அன்றைய பத்திரிகையை ஆழந்து வாசித்துக் கொண்டிருந்தார்….
காலையிலையே பத்திரிகைகளை முக்கியமாக ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிக்க வேண்டும் அவருக்கு….
எங்களுக்கு (அவரது பிள்ளைகளுக்கு) காலையில் மட்டுமல்ல அன்று முழுவது சாப்பிடுவதற்கு சாப்பாடு இருக்குதோ இல்லையோ அவருக்கு பேப்பரும் ஒரு சிகரட்டும் வேண்டும்…
அம்மா இருக்கின்ற சில்லரைகளைக் தேடிப் பொறுக்கி அவருக்கு பேப்பர் வாங்கி வரச் சொல்வார்…
சின்ன வயதில் இவற்றை வாங்கி வருவது எனது முக்கியமான வேலைகளில் ஒன்று…
சிலநேரம் பழைய பேப்பர்களை விற்று கிடைக்கின்ற காசில் அப்பாவிற்கு பேப்பரும் எங்களுக்கு அரை றாத்தல் பாணும் வாங்கி வருவேன்…
பாண் வாங்க முடியா விட்டால் காலையிலையே சண்டைதான் அழுதுகொண்டுதான் பேப்பர் வாங்கபோவேன்…மனதிற்குள் அப்பாவை திட்ட தவறியதில்லை……
இப்ப நான் வளர்ந்து விட்டேன் என்பதால் என்னை கேட்பதில்லை…
ஆனால் பேப்பரை வீட்டுக்கே கொண்டு வந்து தரும்படி ஓழுங்கு செய்துவிட்டார்…
….
குசினியில் அம்மா புட்டு அவித்துக் கொண்டிருந்தா…
“அம்மா மத்தியானம் சமைக்கவேண்டாம்…பனானா லீவ்ல சிக்கின் புர்pயாணி வாங்கியனுப்புகிறேன்” என அப்பாவிற்கு கேட்காதபடி இரகசியமாகக் கூறிவிட்டு பின்னால் உள்ள பாத்துருமுக்குள் குளிக்கப் போனேன்…எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிடுவேன் நித்திரைக் கலக்கத்தையும் சோம்பலையும் விரட்டுவதற்கு…
….
….
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன்…தாடி கொஞ்சம் நீளமாக வளர்ந்து தாறுமாறாக இருந்தது….
என்னை நான் அதிகமாக அலங்கரிப்பதில்லை…
எப்பொழுதும்; இருப்பதைக் கொண்டு என் அழகை கொஞ்சம் மேலும் ஒப்பேத்திவிடுவேன்…
இயற்கையான அழகே உண்மையான அழகு என்பதும் இயற்கை மனித மணமே உண்மையான நறுணம் என்பது எனது நம்பிக்கை… போலி சென்டடித்து பொய்யான நறுமணத்தை உருவாக்க ஒரு நாளும் விருப்பியதில்லை…
ஒருவரை ஒருவரை விரும்பினாலும் இந்த இயற்கையான உண்மைக்காகத்தான் விரும்ப வேண்டும் என விரும்புகின்றேன்…செயற்கையான தோற்றத்திற்கும் மணத்திற்கும் விரும்பிவிட்டு பிறகு கவலைப்படக் கூடாது தானே…
இருந்தாலும் இன்று முகத்தை என்றாலும்; கொஞ்சமாவது அழகாக வைத்திருக்கவேண்டும் என் விரும்பினேன்…குளிப்பதற்கு முதல் தாடியை ஒரளவு ஒட்ட வெட்டினேன்…
இந்தத் தாடி மீது அப்படி என்ன விருப்பம் வந்ததோ தெரியவில்லை…
உயர்தரம் படிக்கும் பொழுது….
முடி வளராத கண்ணங்களை பிளேட்டினால் (சவரம் சேவ்) களவாக வளித்திருக்கின்றேன்…
அப்பொழுது ஏதோ ஒரு பத்திரிகையில் நடிகர்களை தேடுவதாக ஒரு விளம்பரம் வந்திருந்தது…அதற்காக முதன் முதலாக சேவ் எடுத்த பின் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரிக்கு பின்னாலிருக்கின்ற காண்ணாதிட்டி ரோட்டிலுள்ள ஞானம் ஸ்டுடியோவில் ஒரு படம் எடுத்து அனுப்பியது இப்பொழுதும் நல்ல ஞாபகம் ….

குளித்தபின் தலைமயிரையும் கமலைப் போல மேவி இழுத்துக்கொண்டேன்…
அப்பப்பா…இந்த தலைமயிரை மேவி இழுக்க நான் பட்டபாடு….
சொல்லி மாளாது…
சின்ன வயதிலிருந்தே அம்மா தலையில் எண்ணை வைத்து விட்டு….
தனது கையால் கன்னங்களை ஒரு பிடி பிடிப்பார்….
இதைத்தான் ஊடும்பு பிடி என்பார்களாக்கும்…தலையை அசைக்கவே முடியாது…
அப்படி ஒரு பிடிபிடித்து….கோண உச்சி பிரித்து இடப்பக்கமாக கொஞ்ச தலைமயிரை சரித்து இழுத்துவிட்டு..
மறுபக்க தலைமயிரை வலப்பக்கம் மேவி இழுத்துவிட்டு பின்பு முன்னால் கொஞ்சம் விட்டு விட்டு பின்பக்கமாக வலித்து இழுத்துவிடுவா….
அம்மாவின் கனவுக் காதலன் சிவாஜி பல படங்களில் இப்படித்தான் இழுத்திருப்பார்…
அதுபோல எனது தலை மயிரையும் சீவி விடுவார்…
அது அப்படியே நன்றாக படிந்து விட்டது…
நானோ  கமலின் இரசிகன்…
பலவருட போராட்டத்தின் பின் நான் விரும்பியவாறு என் தலைமயிர் ஸ்டையிலை கஸ்டப்பட்டு கமலைப் போல மாத்தினேன்…
இப்படி தலைமயிரை நான் கஸ்டப்பட்டு ஒழுங்காக மாற்றும் வரை
“என்ன முள்ளம் பன்டி மாதிரி தலையை வைத்திருக்கின்றாய்” என அப்பாவின் முறைப்பையும் திட்டடையும் பெறுவதற்குத் தவறியதே இல்லை….
அப்பாவிற்கு சரியான பயம்தான்…
ஆனாலும் ஒரு தையிரியத்தில் அவர் கூறுவதைக் கணக்கில் எடுக்காது அவரை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து தவிர்த்து தலைமயிர் ஸ்டையிலை மாற்றுவதை தொடர்ந்தும் முயற்சி செய்தேன்;…
எனது விடாமுயற்சியால் இப்பொழுது சில காலமாகத்தான் தலைமயிர் ஒழுங்காக நான் விரும்பியவாறு (கமலைப்போல என நான் சொல்லயில்லை….ஆனால் என் மனம் சொல்கின்றது) மேவி இழுக்கமுடிகிறது…..
….
குளித்து முடித்து வெளியே வந்தேன்…அம்மா காலை சாப்பாடு செய்து முடித்திருந்தா….
எனது அறைக்குச் சென்று இருக்கின்றதில் நல்ல சேட்டையும் ஜீன்சையும் போட்டு கொண்டு,
சாப்பிட வந்தேன்…
குசினிக்கும் முன் (அறை) விறாந்தைக்கு இடையில் இருக்கின்ற சாப்பாட்டு அறையிலிருந்த மேசையில் சாப்பாடு இருந்தது…சாப்பிட்டேன்….
அப்பா முன்விறாந்தையிலிருந்து சம்மணம் கட்டிக் கொண்டு இப்பொழுதும் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருந்தார்…முன் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை படித்து முடித்து விட்டுத்தான் குளிக்கவே செல்வார்…அப்படி என்னதான் வாசிக்கின்றாரோ என மனதிற்குள் மட்டும் நினைத்துக் கொள்வேன்….
“ஆங்கிலப் பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்கங்களை வாசி” என என்னை சின்ன வயசிலிருந்தே வற்புறுத்தினார்…நான் கேட்காதபோது திட்டினார்…
ம்ம்;… அறிவுறுத்தினார் என்று மட்டும் ஏன் சொல்;லாமாட்டேன் என்கின்றேன்…எனது ஆங்கில மொழி அறிவை வளர்ப்பதற்குதானே சொன்னார்…அது என்னவோ நான் அதை பின்னபற்றவே இல்லை…..
கடைசியல் அவரும் தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டார்… “திருந்த முடியாத கழுதை” என நினைத்திருப்பார்.

நான் வெளியே செல்வதற்கு தயாரான போது…கீழே சம்மணம் கட்டி இருந்தவாறே தனது தலையை நிமிர்த்தி…என்னைப் பார்த்து….
“இன்டைக்கு ஏன் கடையில சாப்பாடு வாங்கிறாய்…வீட்டுல சமைக்கலாம் தானே….மத்தியானம் சாப்பிட வா” என்றார் அப்பா …
 நான் குளித்து விட்டு வருவதற்குள் அம்மா அப்பாவிடம் நான் கூறிய விடயத்தை கூறிவிட்டாபோல…
இப்படித்தான் அம்மா எந்த விடயத்தையும் அப்பாவிற்கு உடனடியாக சொல்லிவிடுவா…
நான் அவரின் முகம் பார்க்காமால் (பயம்?…மரியாதை?)
“இன்டைக்கு அம்மா ஒன்றும் சமைக்கத்தேவையில்லை…நான் கடையில வாங்கி அனுப்பி விடுகின்றேன்;” எனக் கூறிவிட்டு தங்கையையும் கூட்டிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.….
ஏற்கனவே தங்கச்சியிடம் சொல்லியிருந்ததாhல் அவவும் வெளிக்கிட்டு இருந்தா…

எனது வீட்டாருக்கும் சில நண்பர்களுக்கும் இன்று மதியச் சாப்பாடு வாங்கித் தருவதாக நான் சொல்லியிருந்தேன்…
எனது பிறந்த நாளில் மற்றவர்கள் பரிசுப் பொருள் தருகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு நான் எதாவது செய்யவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக நினைப்பதாலும் இப்பொழுது உழைப்பதாலும் செய்கின்றேன். இதனால்தான் கடந்த வருடமும் இந்த நாளில் எனது பல்கலைக்கழ மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவரையும் அழைத்து பெரிய பிறந்த நாள் பாட்டியை எனக்காக நானே வைத்தேன்…
எனது வாழ்க்கையில் நானறிய முதன் முதலாக நடந்த பெரிய எனது பிறந்த நாள் கொண்டாட்டம் இதுதான்…
ஆம்! இன்று முக்கியமான நாள் எனக்கு…
எனது பிறந்த நாள்!…
இதுவே எனது மகிழ்ச்சிக்கான இன்னுமொரு காரணம்…

நாம் இருந்த வீடு தெகிவளை ரோபோட் வீதியில் இருந்தது…
போகும் வழியில் எனது நண்பர் இந்திரனையும் கூட்டிக்கொண்டு குவாரி ரோட்டால் நடந்து காலி வீதிக்கு வந்தோம்…
அந்த சந்தியிலிருந்த “சேச்” யடியில் ஒரு  ஓட்டோவை பிடித்துக்கொண்டு பம்பலப்பிட்டியை நோக்கிப் போனோம்….
வாகனங்கள் அதிகமில்லாத…காலி விதி அழகாக இருந்தது இன்று….
….
சூரியனும் பிரகாசமாக சிரித்துக்கொண்டேயிருந்தது…இது என் (மனதின்) மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது…எல்லாம் மனம் தானே தீர்மானிக்கின்றது…

இந்த சூரியன், இந்த நாட்டின் இன்னுமொரு பகுதியிலும்….வடக்கிலும் கிழக்கிலும்… இப்படித்தானே சிரித்துக் கொண்டிருக்கும்… அப்ப அங்கு வாழும் மனிதர்களது மனமும் மகிழ்ச்சியாக இருக்குமா?
அந்த சனத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமா?
இந்த நாளில் அங்கும் ஒருவர் பிறந்திருப்பார் தானே…அவரும் என்னைப்போல் மகிழ்ச்சியாக இருப்பாரா…
எனக்கு காதல் கைகூடியதுபோல்….அங்கும் ஒருவருக்கு இந்நாளில் காதல் கைகூடியிருக்கும் தானே…
இது அவரது சந்தோசத்தை மேலும் கூட்டுமா?
ஓரு புறம்…அவர்களது வீட்டு வாசல்களில்…கையில்; ஆயுதத்துடன் நிற்கின்ற இராணுவத்தினர்…
இது அந்த மனிதர்களைப் பயமுறுத்துக்கொண்டல்லா இருக்கும்;…
இன்னுமொரு புறம் உள்ளவர்கள்…அடிக்கடி வானத்தை பார்ப்பார்கள்…
நம்மைப் போல…சூரியனின் சிரிப்பை இரசிப்பதற்கல்ல…தம்;மைப் பாதுகாக்க…குண்டுகள் போடும் விமானங்களிலிருந்து…
சூரியன் சிரிப்பதாலோ…அழுவதாலோ… மாற்றங்கள் ஏற்பட்டு விடப்போகின்றதா?…
மனிதர்களின் வாழ்வில்? மனங்களில்?
எங்கு அழிவுகள் நடந்தாலும்…எந்த நாட்டில் போர்கள் நடைபெற்றாலும்…
நமது மகிழ்ச்சிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாதுதானே…நம்மை நேரடியாகப் பாதிக்காதவரை!
…..
பனானா லீவ் கடையின் முன்னால் இறங்கினோம்….
கிழக்கிலிருந்து வந்த சூரிய கதிர்கள் பனான லீவ் கடையின் கண்ணாடிகளில் பட்டு; “பளிச்சென்ட்டு” பிரகாசமாக் தெரித்தன….இதனால் அந்தக் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்கலிலிருந்த சாப்பாட்டு வகைகளும் நம்மை கடையைநோக்கி இழுத்தன…
அதைப்பார்க்கும் போதே, பசி இல்லா விட்டாலும் பசிப்பது போல் இருந்துது….
உள்ளே சென்றோம்….
சாப்பாட்டு மணம் பசியை இன்னும் அதிகமாகவே உருவாக்கியது….
கடைக்கு நாம் தாம் முதல் வாடிக்கையாளர்கள் போல….
புரியாணி பரைட்ரைஸ் மற்றும் சிக்கின், ரால் என பலவிதமான கறி வகைகள்.
ஒவ்வொன்று அழகாக இருந்தன…புதிதாக இருந்தன….புதிதாக இருப்பதால் அழகாக இருக்கின்றதா…? அழகாக இருப்பதால் புதிதாக இருக்கின்றதா…?
….
அவரவர்களுக்கு விருப்பமான உணவு வகைகைளை வாங்கி தங்கச்சியையும் நண்பரையும் ஓட்டோ பிடித்து விட்டுக்கு அனுப்பிவிட்டு…
155 இல. பஸ் பிடித்து கம்பஸ{க்கு போவதற்காக பம்பலப்பிட்டி பொலிஸ் ஸ்டேசனுக்கு அருகாமையில் இருக்கின்ற பஸ் தரிப்பை நோக்கி நடந்தேன்.
போய் சேரும் பொழுது 155 பஸ் வந்து நின்றது….அதில் ஏறிக் கொண்டேன்….
வருடத்தின் கடைசி நாள் என்பதால் வாகனங்கள் குறைவாக இருந்தன…
பயணிகளும் குறைவாக இருந்தனர்….
பஸ் ரைவர் பஸ்ஸை எடுப்பதுபோல் முன்னுக்கு இழுத்தார்…அப்படா பஸ் வெளிக்கிடப்போகின்றது என சந்தோஸப்படுவதற்குள் மீண்டும் பஸ் பின் வந்து நின்;றது….
நமது பொறுமையை சோதிக்க இந்த பஸ்ஸில் ஏறி இருந்தால் போதும்…..
இந்த பஸ் பயணத்தினால் ஏற்படும் மன எரிச்சi;லத் தவிர்ப்பதற்காகவே….
அப்பாவிடம் மன்றாடியதன் பயனாக… பழைய சைக்கிள் ஒன்றை எங்கிருந்தோ வாங்கித்தந்தார்….
இந்த சைக்கிள் போடும் சத்தம்;…வீதியில் போவோரை ஒருக்கா என்றாலும் “என்ன சத்தம்” எனத் திரும்பி பார்க்க வைக்கும்;….அப்படி அவர்கள் பார்ப்பது வெட்கமாக இருக்கும்…ஆனாலும் தெரியாத மாதிரி ஸ்டைலாக ஓடிக்கொண்டிருப்பேன்…பஸ் பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளுடன் ஒப்பிடும் பொழுது இவர்களது பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்பதால் அவர்களது பார்வையை பெரிதுபடுத்துவதில்லை….
காலையில் பஸ்ஸில் பயணம் செய்வதில் இன்னுமொரு கஸ்டம் உள்ளது…
ஆழகான இளம் பெண்கள் பஸ்ஸில் ஏறினால் அன்றைய பொழுது சரி….
அதுவும் சிலர் மல்லைகைப் பூச் சரத்தைக் தலைமுடியில் கட்டிக்கொண்டோ அல்லது நறுமணமுள்ள வாசனை திரவியங்களையோ அடித்துக் கொண்டு ஏறினால் சொல்லவே தேவையில்லை…
இந்த அவஸ்தையிலிருந்து தப்பிப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்யாது விடுவதே நல்லது தீர்மானித்தேன்…..
விளைவு சைக்கிள் பயணம்…. இந்த சத்தம் கேட்கும் சைக்கிளால் நான் மனதால் கஸ்டப்படுவதைப் அப்பா புரிந்ததாலோ என்னவோ புது சைக்கிள் வாங்கித்தந்தார்…..பிறகு கேட்கவா வேண்டும்…
பொதுவாக வார நாட்களில் காலி வீதியில் வாகனங்கள் மிகவும் அதிகமாக இருக்கும்…
ஒழுங்கு முறை என்பது பெயருக்கு மட்டுமே இருக்கின்றது…
இரு பாதை கொண்ட வழிதான்…ஆனால் வாகனங்கள் செல்வதைப் பார்த்தால் ஒரு வழியா இல்லை பல வழியா என்பதை அறிவது கடினமாகவே இருக்கும்…
ஓட்டுனர்கள் பொலிசை கண்டவுடன் பயத்தினால் மட்டும் ஒழுங்கை கடைபிடிப்பார்கள்….
நாம் ஒவ்வொருவரும் ஆதிகாரத்திற்கு பயந்து மட்டுமே சரியாக வாழ முயற்சிக்கின்றோம் என்பதை நமது வீதிப் பயணங்களே நமக்கு புரியவைக்கும்….ஆனால் நாம்; அதை அறிந்து கொண்;டபோதும் அதைப் புர்pந்துகொள்வதில்லை என அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்….
போலிஸ் இல்லாவிட்டால் ஒட்டுனர் தான்… தான் ஒடுகின்ற வீதியின் ராசா…ராணிமார் பயணிகள் மட்டுமே…
கடந்த நான்கு வருடங்களாக நானும் இந்த வீதியின் ராசா தான்…
….
ஒவ்வொரு நாளும் கம்பசுக்கு காலி விதியால்தான் சைக்கிளில் செல்வேன்…
தெகிவளையிலிருந்து கொழும்பு கம்பஸ்வரைதான் எனது வழமையான பயணம்…
ஊர்ந்து மெதுவாக செல்லும் இந்த வாகனங்களுக்கு இடையில் எனது சைக்கிளை லாவகமாக ஓட்டிக் கொண்டு செல்வேன்…ஒரு திரைப் பட நடிகனைப் போல…
கொழும்பு கம்பசுக்கு பல வாகனங்களில் வருவார்கள்…ஆனால் சைக்கிளில் வருகின்றவர் நான் மட்டும்தான்…
சைக்கிள் எந்தவிதமான புகையையும் வெளியேற்றி சூழலை மாசுபடுத்தாது…
ஆனால் இந்த வாகனங்கள் வெளியேற்றுகின்ற அவ்வளவு நச்சு வாயுக்களும் எனது முகத்திலும் மூக்கினுள்ளும் சட்டைகளிலும் எனது வியர்வையுடன் சேர்ந்து படிந்துவிடும்…
எப்பொழுதுதான் சைனாவைப்போல கொழும்பு நரகம் சைக்கிள் நகரமாக மாறுமோ…
இப்பதான் கொஞ்சக் காலமாக சைக்கிளிற்கு நானும் ஓய்வு கொடுத்துவிட்டேன்…
எல்லாம் காதல் வந்ததன் விளைவுதான்…
வாழ்வில் எத்தனையோ காதல் வந்தது…எல்லாம் ஒரு தலைக் காதல் தான்…
ஒரு தலைக் காதலாக இருந்தபோதும்….அவர்களைக் காண்பதற்காக ஒரு கண தரிசனத்திற்காக
எவ்வளவு நேரமும் காத்திருப்பேன்….
“காதலுக்காக காத்திருப்பது எப்படி” என புத்தகம் எழுதுமளவிற்கு அனுபவம் உண்டு…
ஒவ்வொரு காலத்தில்…. ஓவ்வொரு நேரத்தில்…. குறிப்பிட்ட இடங்களில்….ஒவ்வொருவருக்காகவும்…
காத்திருந்தது…ஒவ்வொன்றும் அழகான ஒரு அனுபவமே…
அவர்கள் வரும் வரை மனம் அங்கலாய்ந்த்துக் கொண்டிருக்கும்…வருவார்காள இல்லையா என…இடைக்கிடை வண்ண வண்ணக் கனவுகளும் வந்து செல்லும்….
அவர்கள் வருகின்ற வழமையான குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை எனின்…
நெஞ்சு மிக மோசமாக பட்க் பட்க் என அடிக்ககும்….நிறைய வலிக்கும்…
ஆனால் கண்டவுடனும் நெஞ்சு பட பட வென பட்டாம் பூச்சிகள் போல் மென்மையாகிவிடும்…பதை பதைப்பும் இருக்கும் ஆனால் வலிக்காது….ஆனால் கண்டவுடன் என்ன செய்வது என தெரியாமல் முழு உடம்பு உதற ஆரம்பித்துவிடும்…அவர்கள் வருவார்கள் சில நேரம் வந்து ஒரு “ஹாய்” சொல்லுவார்கள்…சிலநேரம் நான் இருப்பதே தெரியாத மாதிரி சென்று விடுவார்கள்…
எனது இவ்வளவு நேர தவிப்புக்கும் மன சஞ்சலத்திற்கு அர்த்தமில்லாது போன பின் அமைதியாக இருப்பேன்…காத்திருப்பேன் மீண்டும் இவ்வாறான இன்னுமொரு தருணத்திற்காக…
ஒரு மனிதருக்கு ஒரு தரம் தான் காதல் வரும் என்பது என்னளவில் பொய்யானது என்பதே எனது அனுபவம்…ஆனால் இந்தக் காதல்கள் எல்லாம் நாம் அடக்குகின்ற காமத்தின் வெளிப்பாட்டினால் ஏற்படும் ஈர்ப்பா …இல்ல உண்மையிலையே காதலா என்பது இன்னும்தான் புரியவில்லை…உண்மையான காதல் எப்படி இருக்கும்?
காமம் கலந்திருக்குமா…காமம் கலக்காதிருக்குமா?
இந்த விவாதம் ஒரு புறம் இருக்க…மறுபுறம்…. …
ஒரு தலைக் காதல்கள் உருவாகின்றபோது எல்லாம் எனக்குள் பகுத்தறிவு விவதாதம் நடைபெறும். அரசியலா? காதலா? என பட்டிமன்றம் நடந்து அரசியலே வெல்லும்….
அதனாலையே ஒருவரிடமும் என் காதலை தெரிவிக்கவில்லை…அல்லது அதை அடைவதற்காக முழுமுயற்சியிலும் இறங்கவில்லை…முதல் ஒரு தலைக் காதலை மட்டும் தவிர்த்து….
…இவர்களில் ஒருவராவது அவர்களின் காதலை என்னிடம் தெரிவித்திருந்தால் அரசியல் வென்றிருக்குமா என்பது கேள்விதான்?
ஆனாhல் இப்பொழுது ஏற்பட்ட காதலில் அந்த பகுத்தறிவுக் போட்டியை நான் எனக்குள் செய்யவில்லை…வருவது வரட்டும் என குதித்துவிட்டேன்…காதல்(?) எனும் சமுத்திரத்தில்…
அவ்வளவும் தான்…கடுமையான முயற்சியின் பின் ஒரு தலைக் காதல் இரு தலையாக மாறியது….
அதுதான் இன்று நான் அதிக சந்தோஸமாக இருப்பதற்கான இன்னுமொரு காரணம்;..
தலைமயிரின் ஸ்டைலை நான் விரும்பியவாறு வந்ததைப் போல…
நீண்ட கால தேடுதலின் பின் ஒரு காதல் கைகூடிவந்துள்ளது…
இப்படி என்னைப்போலக் கஸ்டப்பட்டு காதலை கண்டுபிடித்தவர்களுக்கு மட்மே இதன் அருமை புர்pயும்…
மற்றவர்களுக்கு “இவன் என்ன பெட்டைகளுக்குப் பின்னாhல் வெட்கமே இல்லாமல் அலைகிறான்” என தங்களது ஆண் அகம்பாவத்தை மட்டுமே வெளியில் காண்பிப்பார்கள்…ஆனால் தனிமையில் என்ன செய்கின்றார்கள் என அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்…..
ஆம்….
வாழ்வில் முதன் முதலாக…
என்; காதலை மதித்து ஏற்றுக்கொண்ட ஒருவருடன் நான் கொண்டாடப்போகும் என் முதலாவது பிறந்தநாள் இன்று….
இதனால்தான் இன்றைய நாள் வழமையைவிட கூடுதல் அழகானதாக இருந்தது…அல்லது இருப்பதுபோல் எனக்குத் தோன்;றியது…
என்னவோ நான் சந்தோஸமாக இருக்கின்றேன் என்பது உண்மை….இல்லை… இல்லை… என் மனம் மகிழ்ச்சியாக இருந்தது…
சரி ஏதோ ஒன்று ஆனால் என்னைச் சுற்றி மகிழ்ச்சி…சந்தோஸம்…ஆனந்தம்… ஜோய்…இப்படி எல்லாம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை தானே….
ஒரு மனிதருக்கு இது தானே தேவை…..
….
கம்பஸ் வாசலில் இறங்கி “ஓப்பன் கன்டீனுக்கு” சென்று காத்திருந்தேன்….
இன்றைய காத்திருப்பில் வழமையான உடல் மனம் பதபதைப்பு இருக்கவில்லை…
ஒருவர் வருவார் என்ற நம்பிக்கை அந்தப் பதைபதைப்பை இல்லாமல் செய்தது மட்டுமல்ல அவரைப் பற்றி சிந்திப்பதையே நிறுத்தியிருந்தது…எல்லாம் “ஓம்” என்று சொல்லும் மட்டும்தான்…
என் மனதைப்போல “ஓப்பன் கன்டீன்” மட்டுமல்ல கம்பஸ{ம் அமைதியாக இருந்தது…ஒரு சில மாணவர்களே இருந்தனர்…
மற்ற நாட்களில் என்றால்…எத்தனை காதல்கள் ….காதல் பிரிவுகள்…சண்டைகள் ஒரு புறம் அரங்கேற…
இன்னுமொரு புறம் ஜாதிக்க சிந்தனைக்கும்… “அல” என அழைக்கப்படும் அரசியல் ஈடுபாடு இல்லாதவர்களின் மாணவர் குழுவிற்கும் …இடதுசாரி அரசியல் செய்யும் நமது குழுவிற்கும் இடையில் காராசாரமான விவாதம் நடக்கும்…ஒவ்வொருவருக்கும் இதுதான் அவர்களது இடம் என ஒவ்வொரு இடம் தானாகவே ஒதுக்கப்பட்டு இருந்தது…
அரசியல் பக்கம் மேலும் சிந்திக்காது இருக்க காதல் வந்து கொண்டிருந்தது…
வழமையாகவென்றால் என்னைக் கொஞ்சநேரம் என்றாலும் காத்திருக்க விட்டுவிட்டு வருபர் இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தார்…
எனது பிறந்தநாள் என்பதால் ஒரு மரியாதையாக்கும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்…
ஏற்கனவே நாம் முடிவு செய்தபடி கம்கஸ{க்கு அருகில் உள்ள “ப்லோவர் ரம்” என்ற சீன உணவகத்தில் சாப்பிட்டோம்….வரும் வழியில் சொக்கலேட் கடையை கடந்து தான் வரவேண்டும்…அதில் நமக்கு விருப்பமான நட்ஸ் போட்ட சொக்லேட் உருண்டைகள் கொஞ்சம் வாங்கினோம்…நமது நண்பர்கள் யாராவது வந்திருந்தால் கொடுப்பதற்கு…கம்பஸ_க்கு சென்றபோது சில நண்பர்கள் ஏற்கனவே வந்து முன் மரத்தின் கீழிருந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்…அவர்களுடன் சோக்கலேட் உருண்டைகளைப் பகிர்ந்து விட்டு…
நாம் இருவரும் தனியே சென்றோம்…
கம்பஸ_க்குள் மட்டுமல்ல இலங்கையின் எந்த ஒரு நகரத்திலும் சரி, கிராமத்திலும் சரி காதலர்கள் தனியாக ஆனாந்தமாக இருப்பதற்கு ஒரு இடமும் இல்லை…காதலுக்கான மரியாதை அவ்வளவுந்தான்…
நாமும் சளைத்தவர்கள் இல்லைத்தானே….தேடிப்பிடித்து ஒரு இடத்தைக் கண்டுபிடுத்து விடுவோம் தானே…கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம்…
காதலர்கள் காதல் உணர்வில் இருக்கும் பொழுது என்ன கதைப்பார்கள் என்பது காதலர்களுக்கே தெரியாது….பின் என்ன கதைத்தோம் என என்னத்தத்தான் எழுதுவது….
நாளை புதுவருடம் என்பதால் இன்று இரவு சேர்ச்சிற்குப் போகவேண்டும் எனக் கூறி ஆறு மணிபோல் அவரை அவரது வீடுவரை சென்று விட்டுவிட்டு 176 இல பஸ் எடுத்து தெகிவளையிலுள்ள மிருக காட்சி சாலைக்கு முதல் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இறங்கினேன்….
எனது நண்பர் ஜெயா நாளை வவுனியாவிற்கு வேலை ஒன்று கிடைத்து செல்வதால் பயணம் சொல்ல சென்றேன்…

இரவு .8.15
நண்பரின் விட்டிலிருந்தேன்…
கொஞ்சரேம் கதைத்துவிட்டு….எனது விட்டுக்கு நண்பரின் தொலைபேசியைப் பயன்படுத்தி போன் எடுத்தேன்….அம்மா போனுக்கு பதிலளித்தா…வீட்டின் எந்த மூலையிலிருந்தாலும் ஓடிவந்து அவதான் போனுக்கு பதிலளிப்பா…வீட்டின் பல்துறை உதவி செயற்பாட்டாளர்…
 “ஐயா…நீ வந்த பிறகு சாப்பிடுவம் என்றார்…உன்னத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்….நூடில்ஸ் சமைத்திருக்கின்றேன்…கெதியா வா” என்றது அம்மாவின் குரல் மறுமுனையில்….

அப்பாவை வீட்டில் “ஐயா” எனத் தான் கூப்பிடுவோம்….மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது அப்பா என குறிப்பிடுவேன்…பொதுவாக கட்டுரை எழுதும் பொழுது தந்தை எனக் குறிப்பிடுவேன்…இன்னும் சிலர் “பப்பா” எனவும் அழைக்கின்றனர்…இப்படி ஒவ்வொருவரும் விதவிதமாக அழைப்பதற்கு என்ன காரணம் இருக்கும் என தெரியவில்லை…
….
“…இன்னும் ஜந்து பத்து நிமிடங்களில் வந்துவிடுவேன்…ஜெயா விட்டில் நிற்கின்றேன்”;…
எனக் கூறி போன் இணைப்பை துண்டிக்க முயற்சிக்க…
“அப்ப ஜெயாவையும் சாப்பிடக் கூட்டிக்கொண்டு வாவன்” என்றார் அம்மா…நல்ல உபசரிப்பாளர்.….
நண்பர் ஜெயாவும் தான் போவதற்கு முதல் அப்பாவை ஒருக்கா சந்திக்க வேண்டும் எனக் கூறி என்னுடன் வெளிக்கிட்டார்….
….
அம்மா என்னுடன் கதைத்துவிட்டு குசினிக்குள் சென்று மிச்ச சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு நின்;றா…. …
தங்கச்சி குசினிக்கு பக்கத்தில் இருக்கின்ற பாத்ருமில் குளித்துக்கொண்டிருக்கின்றா…
அப்பா டிவி பார்த்துக்கொண்டிருந்தார்…
கொஞ்சக் காலத்திற்கு முன்பு எனின் இந்த நேரம் அப்பா கையில் சிகரட்டுடன் முழுக் குடியில் இருப்பார்…
இப்ப கொஞ்சக் காலம் குறிப்பாக அவரது தங்கையின் மகள் அவருடன் வாழவந்த பின் சாரயம் சிகரட் எல்லாம் குடிப்பதை நிப்பாட்டிப்போட்டார்.
அவரது காலடியில் அவரது தங்கையின் மூன்று வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தார்….
பக்கத்து அறையில் அப்பா வேலை செய்கின்ற இயக்கத்தை சேர்ந்தவர்களின் பெண் ஒருவரும் இந்த வீட்டில் தங்கியிருந்தார்…
இந்த அறைக்கு பின்னுக்குள்ள அறைதான் தங்கச்சியின் அறை.

இப்படி நான்கு அறைகள் உள்ள வீட்டில் எனக்கு ஆறு வயது இருக்கும் பொழுதுதான் கடைசியாக இருந்ததாக நினைவு…அதன் பின் கடந்த பதினைந்து வருடமாக நாம் வாழந்த வீடு என்பது ஒரு வீட்டிலுள்ள ஒரு அறையை மட்டுமே கொண்டதாகத்தான் இருந்தது….சில காலங்களில் நாம் ஜந்து பேர் மட்டுமே கால் நீட்டிப் படுக்கக் கூடிய ஒரு மிகச் சிறிய ஓலைக் குடிசையாகவும் இருந்துது…இப்படியான ஒன்றைத்தான் வீடாக நினைத்து…சமைப்பது.. சாப்பிடுவது…ஊடுப்பு மாற்றுவது என எல்லாம்; நடந்தது…
நீண்ட காலத்திற்குப் பிறகு இப்பதான் நான்கு அறையும் குசினியும் பாத்ருமும் கொண்ட ஒரு வீட்டில் வாழ்கின்றோம்…
….
நண்பரும் நானும் கதைத்துக்கொண்டு குவாரி ரோட் வழியே வந்தோம்…
கடந்த வருடம் இந்த நேரம் கோல்பேஸில் நண்பர்களுடன் போட்ட குடி கும்மாளம் பற்றி கூறிக் கொண்டு வந்தேன்…
என் மீது நானே போட்டருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய ஒரு நாள் அது….
இரவு கொல்பேஸ்சில் நன்றாக குடித்தேன்….விடியும் வரை விதவிதமாக குடித்தோம்……
கொழும்பு வந்தபின் முதல் முறையாகவும் கடைசியாகவும் அன்றுதான் குடித்தேன்…
இப்படியே என் வண்டவாளங்களை நான் கூறிக் கொண்டு ரொபட் வீதிக்கு அருகில் வந்துவிட்டோம்..
….
இரவு 8.30 மணி
வழமையாக இந்த நேரத்திற்கு வீட்டுக்கு வருகின்ற இயக்க அண்ணன் இன்னும் வரவில்லை…
இவர் இரவில் மட்டும் அப்பாவின் பாதுகாப்பிற்காக வந்து தங்கிவிட்டு செல்வார்….
பகலில் அப்பா வேலை செய்கின்ற இயக்க அலுவலகத்திலையே முழு நேரமும் இருப்பதால் அதுவே அவருக்கு பாதுகாப்பாகவும் இருந்தது…
….
விட்டுவாசலில் ஒரு இளம் வயதுப் பொடியனை ஒரு ஓட்டோ இறக்கிவிட்டு செல்கின்றது….
வீட்டு வாசலிருந்து சில துரங்களிலையே வீதி விளக்குத்தூண் உள்ளது…
அதன் ஓளி அந்த இடத்தின் இருட்டை ஓழிக்க காணாதுபோல…
இதனால் வீதி அரை இருட்டாக மங்கிய வெளிச்சத்துடன் இருந்தது….
இறங்கிய பொடியன் இரண்டு பக்கங்களும் பார்க்கின்றான்….
வீட்டின் முன்கதவு கொக்கியை அக் கதவிற்கு மேலாக கையைப் போட்டு கஸ்டப்பட்டு எடுத்துவிட முயற்சிகின்றான்….முடியவில்லை…மதில் ஏறி வீட்டினுள்ளே குதிக்கின்றான்…
வீட்டின் வெளி சுவரில் இருக்கின்ற வீட்டுக்கான மின்சார இணைப்பை (பியூசை) கழட்;டி விடுகின்றான்….
…..
வீட்டினுள்ளே…
“தேவி லைட் போய்விட்டது…மெழுவர்த்தியை பத்தவை” என அம்மாவின் பெயரைக் கூப்பிட்டு உத்தரவிடுகின்றது அப்பாவின் குரல்….
“முன் கதவை சாத்திவிடுங்கோ” என அப்பாவின் பாதுகாப்பில் எப்பொழுதும் கவனமாக இருக்கும் அம்மாவின் குரல் பதிலாக ஓலித்தது குசினியிலிருந்து….
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இருட்டுக்குப் பயந்து அப்பாவின் காலடியில் வந்து நின்றது….
“பிள்ள கொஞ்சம் அங்கால தள்ளு…கதவை சாத்திவிட்டு வாரன்” என காலடியிலிருந்த குழந்தையை தூக்கி கதிரையில் இருத்திவிட்டு…
அப்பா முன் கதவை சாத்துவதற்காக தனது சாராத்தை தனது பெரும் (தொப்பைக்கு) வண்டிக்கு மேலாக கட்டிக் கொண்டு கதைவை நோக்கி வருகின்றார்…அவர் அரசியல்வாதியாக வந்தபின் தான் இவ்வளவு பெரிய வண்டி(தொந்தி) வந்திருக்கின்றது….
உள்ளே வந்த பொடியன் வீட்டின் வாதற் படியில் நின்றபடி தனது துப்பாக்கியை தயார் செய்கின்றான்…
வாசலில் யாரோ நிற்கின்றது வீதியோரத்து லைட் கம்பத்திலிருந்து வரும் மின்குமிழ் வெளிச்சத்தால் நிழழாக மங்கலாக அப்பாவிற்குத் தெரிகின்றது…..
“யாரது வாசலில் நிற்கிறது” எனக் கேட்கின்றார் அப்பா…
அவன் தனது தூப்பாகியின் டிகரை தட்டிவிட, தூப்பாக்கி சத்தம் போடுகின்றது…..
குண்டு பாயந்து வருகின்றது…அவனது பதிலாக…
இது முதல் தரம் என்பதாலோ அல்லது தனக்குத் தெரிந்த மனிதரை சுடுகின்றோம் என்பதாலோ  அவனது உடலில் ஏற்பட்ட தடுமாற்றம் அல்லது தயக்கம் நெற்றியில் பாயவேண்டிய குண்டு அப்பாவின் நெஞ்சில் பாய்கின்றது…
 “தேவி என்னை சுட்டுபொட்டாங்கள் “என அம்மாவிடம் கத்திக்கொண்டு அப்பா விழுகின்றார்…
அவரது தங்கச்சியின் மகள், குழந்தை ஏதோ பயங்கரம் நடந்துவிட்டதை உணர்ந்து கத்தி அழுகின்றாள்….
அம்மா குசினியிலிருந்து ….”ஜயோ என்ட மனுசன யாரோ சுட்டுப்போட்டாங்களே” எனக் கத்திக் கொண்டு முன்னுக்கு ஓடிவர….
அதற்குள் தங்கச்சி குளித்த உடையுடன் பாத்ருமை விட்டு வெளியே வந்து அம்மாவையும் தள்ளி விட்டு அவவுக்கு முன்னால் ஓடி வருகின்றார் …
“என்ட ஐயாவை யார் சுட்டது” …எனக் கத்திக் கொண்டு…
தங்கச்சி தன்னை அடையாளங் கண்டுவிடுவாரோ என்ற பயத்தினால் தனது இடுப்பிலிருந்த கைகுண்டின் (கிரைனைட்யை) கிளிப்பைக் கழற்றி எறிகின்றான் வாசலில் நின்ற பொடியன்….
கிரணைட் வீட்டின் முன் அறையில் விழுந்து வெடிக்க…
ஓடி வந்த தங்கச்சி ஒரு முலையில் துக்கி எறியப்பட்டு விழுகின்றா….

முன்பும் ஒரு முறை நாவற்குழியில் இருக்கின்ற போது ஒரு இயக்கம் அப்பாவை சுட இருந்ததை அந்தப் பொருப்பாளருடன் கதைத்து தடுத்ததாக தங்கச்சி கூறுவா.
தங்கச்சிக்கு அப்ப அந்த இயக்கத்தின் மீது நல்ல மதிப்பு இருந்தது….
ஆனால்….
“நீ உன் அப்பாவுடன் சாவதற்கு போட்டி போடுவாய்” என காண்டம் வாசிப்பவர் ஒருவர் கூறியதாலும் அப்பாவின் மீது அவவுக்கு நிறைய அக்கறை. அப்படி ஒன்றும் நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தா…நடந்தாலும் தனது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதே அவளது உணர்வு…
இந்த உணர்வு வருவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு…
தங்கச்சி பிறக்கும் போது… “சேகுவேரா குழப்பம்” நடந்துகொண்டிருந்த காலம்… இந்தக் கிளர்ச்சியை ஏன் தான் “சேகுவேரா குழப்பம்” எனக் கூறி சே யின் மதிப்பையும் கெடுக்கின்றார்களோ தெரியாது…உண்மையிலையே அது ஜேவிபி கிளர்ச்சி… இதனால் அப்பாவையும் பிடித்து சிறையில் அடைத்திருந்தார்கள்…
சுற்றியிருந்த உறவுகள் தங்கச்சி பிறந்தது அப்பாவிற்கு நல்லதா என சாத்திரம் பார்த்தார்கள்…சாஸ்திரக்காரரோ…  “இந்தப் பிள்ளக்கு ஏழரைச் சனி…இது பிள்ளையின் அப்பாவை போட்டு அலைக்ககலைக்கும்…” என்றார்… இதை இப்படியே மறந்து போய் விடாமல்…தங்கச்சி வளர்ந்த பின்பும் சொல்லிப்போட்டினம்… இதனால் தங்கச்சிக்கு ஒரு குற்ற உணர்வு…தன்னாலதான் அப்பாவுக்கும் தனது குடும்பத்திற்கும் இவ்வளவு கஸ்டம்….என்று…
இந்த சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கையால வாழ்வின் மீதான நம்பிக்கையும் தன்நம்பிக்கையும் இல்லாமல் இருந்தா தங்கச்சி…
….
குண்டை ஏறிந்த உடன் வாசல் கதவின் தாப்பாலை திறந்து வீட்டுக்கு வெளியே வந்த பொடியன் ஏற்கனவே தயாராக நிற்கின்ற ஓட்டோவில் ஏறி செல்கின்றான்…
……
….
நண்பரும் நானும் குவாரி ரோட் வழியாக வந்து ரோபோட் ரோட்டுக்குள் திரும்புகின்றோம்….
நம்மைத்;தாண்டி ஒரு ஓட்டோ செல்கின்றது….
நாம் இந்த சந்தியிலிருந்து திரும்பி சிறிது தூரம் வந்த உடனையே…
வீட்டின் முன்னால் உள்ள வீதியில் நிறைய சனம் நிற்பது தெரிகின்றது….
“என்ன இவ்வளவு சனம் நின்று வேடிக்கைப் பார்க்கின்றது” என நண்பரிடம் கேட்கும் பொழுதே…
“உங்;கட வீட்டுக்குள்ளிருந்துதான் புகை வருகிறது” என்றார் நண்பர்….
“அப்பாவை யாராவது சுட்டுப்போட்டார்களோ” என ஒரு எண்ணம் மனதில் ஓடி மறைகின்றது…
அப்பாவை யாராவது சுட்டுக் கொல்வார்கள் என தெரியும்…ஆனால் யார்? எப்பொழுது செய்வார்? என்பது மட்டும் விடை தெரியாது இருந்தது….

மூன்று மாதங்களுக்கு முன்பு தான்…
எனது காதலியை அறிமுகப்படுத்த தங்கச்சியை கூட்டிச் சென்றிருந்தேன்….
அவ வரும் வரை காத்திருந்தபோது….
“ஐயாவை இவர்கள் கொல்வார்களோ…. அவர்கள் கொல்வார்ளோ” என நாம் இருவரும் ஆராய்ந்தோம்…
ஓவ்வொரு இயக்கமும் அப்பாவைக் கொல்வதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருந்தன…
“ஏன் அரசாங்கம் கூட கொல்லலாம்….”என்றேன்….
அப்படி அப்பாவை கொன்று விட்டார்கள் என்றால் பின்பு என்ன செய்வது எனவும் யோசித்தோம்…
ஒரு தங்கச்சி வெளிநாட்டில் இருந்தா…அவவிடம் செல்வதா? வேண்டாமா? செல்ல முடியுமா? ஏன பலவாறு கதைத்தோம்…
பின்பு ஒரு முடிவும் எடுக்காது அப்படியே விட்டுவிட்டோம்…சரி….நடந்த பின் பார்ப்போம் என…


“இந்திரனிடம் போய் சொல்லுங்கள்” என நண்பர் ஜெயாவை அருகிலிருக்கின்ற எனது இன்னொரு நண்பரிடம் விடயத்தை சொல்வதற்கு அனுப்பிவிட்டு…
திறந்திருந்த வெளிக்கதவு வழியாக வீட்டினுள்ளே செல்கின்றேன்…
வீடு இருட்டாக இருக்கின்றது….
அம்மாவின் அழுகை சத்தமும் குழந்தையின் முனகல் சத்தமும் கேட்டது….
“அம்மா…” என்ற எனது குரலைக் கேட்டவுடன்…
“ஐயாவை யாரோ சுட்டுப்போட்டாங்கள்….” என்ற அம்மாவின் குரல் “…ஐயோ….ஐயோ…” என தொடர்ந்தும் ஒரு மூலையியிலிருந்து கத்திக்கொண்டிருப்பது கேட்டுக்கொண்டிருந்தது…
நான் பதட்டப்படவில்லை…அழவுமில்லை….அதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை….அம்மாவிற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் வர வில்லை….கூறித்தான் என்ன பிரயோசனம்…
ஜன்னல்களுக்குடாக வரும் வெளிச்சத்தில் முன் அறையைப் பார்க்கின்றேன்…
அப்பா ஒரு முலையிலும் தங்கச்சி ஒரு முலையிலும் தலைகுப்புற விழ்ந்து இருக்கின்றனர்…
தங்கச்சியை சுற்றி தண்ணியும் இரத்தமும் பரவிக் கிடக்கின்றது….
தொட்டுப் பார்க்கின்றேன்…மூச்சு இன்றி இருக்கின்றார்…
அப்பாவையும் தொட்டுப் பார்க்கின்றேன்…அவரும் மூச்சின்றி இருக்கின்றார்…
என்ன செய்வது எனத் தெரியவில்லை… உடனடியாக வெளியில் வருகின்றேன்…
“யாராவது உதவி செய்யுங்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்வதற்கு” என தமிழிலும் எனக்குத் தெரிந்து சிங்களத்திலும் முழு சக்தியைக் கொடுத்தும் கத்துகின்றேன்…நம்மைச் சுற்றி வர சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும் இடம் இது…
எல்லோரும் நான் கத்துவதை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்…ஆனால் ஒருவரும் உதவிக்கு வருவது போல் தெரியவில்லை….
“கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா… சனங்களே” என இப்பொழுது கொஞ்சம் கோவமாக மீண்டும் சிங்களத்தில் கத்துகின்றேன்….
“இது பொலிஸ் கேஸ்…பொலிஸ் வராமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது…கோவப் படவேண்டாம்” என என்னை ஆறுதல் படுத்தினர் நான் வழமையாக கதைக்கின்ற அயல் வீட்டார் ஒருவர்…
அப்பொழுது… “நான் வருகிறேன்” எனக் கூறிக் கொண்டு ஓட்டோ ஓட்டும் இளம் சிங்கள ரைவர் ஒருவர் உதவிக்கு வந்தார்…
அவரும் நானும் சேர்ந்து அப்பாவை தூக்கினோம்…மிகவும் பாரமாக இருந்தார்…
அப்பா இறந்து விட்டார் என மனதுக்குள் முடிவு செய்துகொண்டு அவரை ஓட்டோவின் பின்னாலுள்ள சீட்டுக்கு கீழே போட்டோம்…
தங்கச்சியை தூக்கி பின் சீட்டில் வைத்துக் கொண்டு கலுபோவில ஆஸ்பத்திரியை நோக்கிச் சென்றோம்….
வேறு ஒருவரும் அப்பாவையும் தங்கச்சியையும் தூக்கி வைக்ககூட உதவி செய்யவரவில்லை…எல்லோருக்கும் பயம்…தங்களுக்கு ஏதுவும் இதனால் பிரச்சனை வந்துவிடுமோ என…
“தங்கச்சியையாவது காப்பாற்ற வேண்டும்…அப்பா என்றாலும் ஒரளவாவது வாழ்ந்து விட்டார்…ஆனால் தங்கச்சி….” என என் மனம் சொல்லிக்கொண்டது…”சுட்டவன் அப்பாவை மட்டும் சுட்டிருக்கலாம்தானே…. ஏன் தங்கச்சியை சுட வேண்டும்…” என சுட்டவன் மீது கோவம் வந்தது…
ஆஸ்பத்திரி சிறிது துரம்தான் அதற்குள் மனதில் இப்படி பல எண்ணங்கள் ஓடின…
….
இப்ப ஒருவருடமாகத்தான் தான் தங்கச்சி நண்பர் பரனின் அச்சகத்தில் தட்டச்சு வேலைக்குச் சேர்ந்து நன்றாக வேலை செய்து கொண்டிருக்கின்றா…தொடர்ந்து படிக்க முடியாததால் நம்பிக்கையிழந்திருந்தவருக்கு இந்த வேலை வாழ்வின் மீது நம்பிக்கையை கொடுத்திருந்தது….
எடுத்த வேலையை முடிக்காமல் வீட்டுக்கு வரமாட்டா என்பதால் அவருக்கு நல்ல மதிப்பும் வேலை செய்கின்ற இடத்தில் இருந்தது….
…..
“இருப்பதற்கு வீடும் இல்லை….எனது வருமானமும் காணாது… வீட்டு அடவான்ஸ்ஸ{ம் கட்டி …வாடகையும் கட்டி…சாப்பிடுவது எப்படி? ….நாம் நினைத்தற்கு மாறாக இப்படி எல்லா நடந்து விட்டது….தங்கச்சியும் அல்லவா காயப் பட்டுவிட்டா…
“நான் இனி என்ன செய்யப் போகின்றேன்…”
“ச்சச…இன்னும் கொஞ்சம் வெள்ளன வந்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாமா….இல்லை நானும் காயப்பட்டிருப்பேனா”
என என் எண்ணங்கள் என்னை அலைக்கலைக்க ஆரம்பித்தபோது…
 ….
கலுபோவில ஆஸ்பத்திரியில் ஓட்டோ நின்றது…
ஓட்டோ ரைவர் ஓடிப் போய் ஸ்டச்சர் ஒன்றையும் இழுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி உதவியாளர்களையும் கூட்டி வந்தார்…
இருவரையும் தனித் தனி ஸ்டச்சரில் படுக்க வைத்து தள்ளிக் கொண்டு போனார்கள்…..
நான் அப்பாவின் பின் சென்றேன்…
இதேநேரம் என் நண்பர் இந்திரனும் நமது வீட்டின் முன் அறையிலிக்கின்ற அக்காவும்; (இயக்கப் பெண்) ஆஸ்பத்திரிக்கு வந்து சேர….நண்பரை அப்பாவுடன் இருக்க சொல்லி விட்டு…அக்காவையும் கூட்டிக்கொண்டு தங்கச்சி இருக்கும் இடத்திற்கு சென்றேன்…
டாக்கடர் ஒருவர் தங்கச்சியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்…அவர் தனது வேலையை முடிக்கும் வரை காத்திருந்தோம் அவரது பதிலுக்காக…
சிறிது நேரத்தில் தனது உதவியாளர்களுக்கு ஏதோ கட்டளையிட்டுவிட்டு எங்களிடம் வந்தார்…
“இவ உனக்கு என்ன உறவு” என சிங்களத்தில் கேட்டார்….
நான் “தங்கை” என்றேன்…”
“அவரை பெரியாஸ்பத்திரியில் இருக்கின்ற ஐசியுக்கு அனுப்புகின்றேன்….மிகவும் சிரியஸான கண்டிசன்” என்றவர் தொடர்ந்தும்…”எந்த உத்தரவாதமும் இல்லை” என ஏதோ காரணத்தினால் ஆங்கிலத்தில் இப்பொழுது பதிலளித்தார்…
அக்காவிடம்; “ நீங்கள் தங்கச்சியுடன் போங்கள்” எனக் கூறி விட்டு…. நான் அப்பாவை பார்ப்பதற்காக மீண்டும் சென்றேன்…
அப்பா வேலை செய்கின்ற இயக்கத்தை சேர்ந்த ஒருவரும் அங்கு நின்றார்….
டாக்டர் இப்பொழுதும் ஏதோ முயற்சி செய்து கொண்டிருந்தார்….அப்பாவைக் காப்பாற்ற…
கொஞ்ச நேரத்தல் என்னிடம் வந்து…”மன்னிக்கவேண்டும்….உங்கள் அப்பா இறந்து விட்டார்”
என்னிடம்; சொல்லவதற்கு ஒன்றுமிருக்கவில்லை…அழுகையும் வரவில்லை…இனி என்ன செய்வது…
வீட்டில் அம்மா தனிய பயந்து கொண்டு இருப்பா என நினைத்துவிட்டு …
நண்பர் இந்திரனிடம்…”தங்கச்சியை ஐசியு க்கு கொண்டு போய்விட்டார்கள்…போய் பார்க்கிறாயா என்ன நடக்குது என்று…நான் விட்டுக்கு போறேன்…” என்றேன்…
அவனுக்கும் என்னுடன் இருக்க விருப்பமிருந்தபோதும் “ஒம்” என சென்று விட்டான்….
நான் அதே ஓட்டோவில் வீட்டுக்கு சென்றேன்…ஓட்டோவிற்கு பணம் ஒன்றும் வாங்கவில்லை அந்த சிங்கள இளைஞன்.
இப்பொழுது வீதியில் கொஞ்ச சனம் மட்டுமே நின்றுகொன்றிருந்தது…இன்னும் பொலிசோ அம்புலன்சோ வரவில்லை….இனி வந்தும் என்ன வராமல் விட்டாலும் என்ன…
விட்டினுள்ளே சென்றேன்…முன் அறையில் சிறிய குழி ஒன்று நிலத்தில் சிதறி இருந்தது…சுற்றிவர கண்ணாடித்துண்டுகள் இருந்தன…டிவி மற்றும் சோக்கேஸ் கண்ணாடிகள் உடைந்திருந்தது…மணிக்கூடு 8.35யில் நின்றிருந்தது…அதன் கண்ணாடியும் வெடித்திருந்தது….
அதனருகில் அப்பா அம்மாவின் கலியாணப் படமும் உடைந்திருந்தது…
20 வருடங்களுக்கு முதல் வறுமை காரணமாக தங்களது கலியாண படத்தின் கண்ணாடியை கழட்டி விற்றனர்…அதன் பின் கண்ணா இல்லாது ஒரு பெட்டிக்குள் அடைபட்டுக்கிடந்தது…கடந்த வருடம் தான் பம்பலப்பிட்டி கோயிலுக்கு முன்னால் உள்ள ஒரு பழங்கால ஸ்டுடியோவில் அந்தப் படத்தை புதுப்பித்து புதிய கண்ணாடி போட்டு மீண்டும் பிரேம் செய்து சுவரில் மாட்டியிருந்தனர்…..
ஆனால் மீண்டும் அந்தப் பிரேம் கண்ணாடி உடைந்துபோய்விட்டது…

இதையெல்லாம் கவனித்துக் கொண்டு கடந்து நடுஅறைக்குச் சென்றேன்….
இரவு சமைத்த நுர்டில்ஸ்…அவித்த முட்டை… உருளைக்கிழக்கு பிரட்டல் எல்லாம் மூடாது திறந்தபடி நாம் சாப்பிடுவதற்காக காத்திருந்தது…..
அம்மாவும் அப்பாவும் காலையில் இருந்து தேத்தண்ணி குடித்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்த அறையிலிருந்து அம்மா அழுது கொண்டிருந்தா….
அம்மாவைச் சுற்றி கொஞ்ச சனம் நின்று கொண்டிருந்தது…
அப்பாவின் தங்கiயும் அவர் கணவரும் வந்திருந்தனர்…குழந்தை அவர்கள் கையில் இருந்தது…
“என்னடா நடந்தது…இருவருக்கும் ஒன்றும் நடக்கவில்லைத்தானே” என்றா அம்மா…
“இல்ல…அம்மா.. ஐயா… மேலே போய்விட்டார்” என இழுத்துக் கொண்டு சொன்னேன்….
அம்மாவும் அப்பாவின் தங்கையும் “ஐயோ” எனக் கத்தி அழத் தொடங்கி விட்டனர்…
“தங்கச்சியை ஐசியு க்கு கொண்டுபோய்விட்டார்கள்” என நான் கூறியது அழுகை சத்தத்தில்; மறைந்தது…
நான் வெளியில் வந்துவிட்டேன்….
யாரோ ஒருவர் வந்து “அம்மாவின்ட உடம்பில காயங்கள் இருக்கு…குண்டு துகள்கள் பட்டிருக்கும் போல…” என்றார்…. “குழந்தைக்கு ஒன்றுமில்லைத்தானே…” என்றேன்… “இல்லை என நினைக்கின்றேன்” என்றார்…நிம்மதியாக இருந்தது…
அப்பொழுது வெளியில் பொலிசும் வந்திருந்தது ….
.”இனி என்ன ஒவ்வொருவராக விசாரணை ஆரம்பிப்பார்கள்…” ;என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்…
“அப்பாவை சுட்டது இவர்கள் தான்” என்றோ…அல்லது “அவர்களில் சந்தேகம் இருக்கின்றது” என யாரையும் குறிப்பிடுவதில்லை என முடிவு எடுத்திருந்தேன்…சிலரில் சந்தேகம் இருந்தபோதும்…
யாரையும் யாருக்கும் காட்டிக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்…
“ அம்மாவுக்கும் காயம் பட்டிருக்கு…அவவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டும்…” என பொலிஸிடம் கூற… அவர்களும் அதற்கான ஒழுங்குகளை செய்து அம்மாவை அழைத்துச் சென்றனர்…
….
 இந்த வருடத்தின் கடைசி இரவு.
இப்பொழுது எல்லா இடத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெறும்…மற்றவர்கள் சந்தோஸமாக ஆடிப்பாடிக் கொண்டு இருப்பார்கள்…
நாளை புதுவருடம்! மற்றவர்களுக்கு முக்கியமான நாள்! எனக்கும் தான்!
 “ஒரு செத்த வீடு செய்வதா இரு செத்த வீடு செய்வதா” என்ற எனது கேள்விக்கு விடை தெரிகின்ற நாள்.
நிச்சயம் நாளை விடியும்….
ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது…செய்வதற்கு நிறயை வேலைகள் இருந்தது….
நிலவு பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது…
மீராபாரதி
31.12…. ….
 

1 opmerking:

  1. மிகவும் நன்றி பகிர்ந்தமைக்கு
    மீராபாரதி

    BeantwoordenVerwijderen