தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 augustus 2011

சிறையில் பிறந்து பெற்றோரை பிரிந்த நான் தற்போது என் தந்தையை இழக்க விரும்பவில்லை - லண்டனில் இருந்து முருகன் மகள் ஹரித்ரா

Audio
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:39.33 PM GMT ]
அப்பா அம்மா இல்லையென்றால் எவ்வளவு கஸ்டமென எல்லோருக்கும் தெரியும் என் தந்தையைக் காப்பாற்றி தாருங்கள் என உருக்கமாக லங்காஸ்ரீ வானொலி மூலம் கேட்டிருக்கின்றார் முருகன் நளினி தம்பதிகளின் மகள் ஹரித்ரா.
எனது தந்தை இதுவரை சிறையில் இருந்தாலும் எனக்கும் அம்மா அப்பா இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது தந்தையைக் காக்க தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட்டம் நடத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முருகன்-நளினி தம்பதியின் மகள் ஹரித்ரா.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ரா. நளினி கைது செய்யப்பட்டபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வேலூர் சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பின்னர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வளர்ந்து வந்தது. இப்போது ஹரித்ராவுக்கு 20 வயதாகிறது. தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் தனது தந்தை முருகனை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற தகவல் அறிந்தது முதல் நிம்மதியில்லாமல் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார் ஹரித்ரா.
மேலும் ஹரித்ரா கூறுகையில், நான் சிறையில் பிறந்தது முதலே பல்வேறு சிரமத்தை சந்தித்து வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரைப் பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நான் 12 வயதாக இருந்தபோதுதான் கடைசியாக அவர்களைப் பார்த்தேன். அதன் பிறகு என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை.
பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். கூட இருந்து வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட பறிக்கப் பார்க்கிறார்களே. இது கொஞ்சமும் நியாயமில்லை.
இதை விட ஒருவருக்கு கொடுமையான விஷயம் எதுவும் இல்லை. யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
எனது தந்தையை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா எனது தந்தையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இந்தியா வர நான் விசா கோரி விண்ணப்பித்துள்ளேன். எனது தந்தையைக் காப்பாற்றக் கோரி அங்கு பலர் போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன் என்றார் உருக்கமாக.

Geen opmerkingen:

Een reactie posten