தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 augustus 2011

மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே: பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி. - இராணுவத்தினர் என்றால் அவர்களின் பெயர்களை வெளியிடுங்கள்: தினேஷ் குணவர்தன

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 07:04.36 AM GMT ] [ வீரகேசரி ]
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம மனிதர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் நுழைந்த இராணுவத்தினர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் பாராது கும்பிட கும்பிடத் தாக்கியுள்ளனர் என்று யாழ். மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார்.
படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாது 118 பேரைக் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் ஆலோசனையின் பிரகாரம் இவர்களில் 18 பேர் மோசமான நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிறீஸ் மனிதர்கள் அல்லது மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே என்பதற்கு எமது மக்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இவ்விடயங்களை இந்த சபையில் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துறைமுக, விமான நிலை வரி அறவீட்டுச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீதரன் எம்.பி. மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற அச்சத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்று தமது நிம்மதியையும் நித்திரையையும் இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மர்ம மனித அட்டகாசங்கள் அம்பாறை மட்டக்களப்புக்கு வந்து தற்போது யாழ்ப்பாணம் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுவதாக செய்திகள் புகைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்து நிற்கின்றனர். வீடுகளை விட்டு வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர்.
யாழ். நாவாந்துறை பகுதியிலும் வடமராட்சியில் பொலிகண்டி வதிரி ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சியில் பாரதிபுரத்திலும் கடந்த திங்கள் இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர்.
இந்த மர்ம மனிதர்களை பிடிப்பதற்கு மக்கள் முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் ஓடி தஞ்சம் புகுந்து கொள்கின்றனர்.
கிளிநொச்சி பராதிபுரத்தில் ஆடைகளற்ற நிலையில் ஆயுதங்களுடன் இரு மர்ம மனிதர்கள் வீடுகளுக்குள் புகுந்த போது அவர்களை பிடிப்பதற்கு பொதுமக்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அந்த மர்ம மனிதர்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நாவாந்துறையில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம மனிதர்களை பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர் அந்த மக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஆண்கள் பெண்கள் என பாராது கும்பிட கும்பிட கதறக் கதற தாக்கியுள்ளனர்.
அத்துடன் இல்லாது அதே பொழுதில் 118 பேரை கைது செய்த இராணுவத்தினர் இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவிரவாக தாக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று (நேற்று) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது மோசமான தாக்குதலுக்குள்ளான 18 பேரை யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் பணித்ததன் பிரகாரம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவர்.
இரவு நேரங்களில் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைகின்ற மர்ம மனிதர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எமது மக்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை இந்த பாராளுமன்றத்தில் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன்.
மர்ம மனிதர்கள் இராணுவத்தினர் எனில் அவர்களது பெயர்களைக் குறிப்பிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன இங்கு கேட்கிறார்.
இரவில் வருகின்ற இவர்கள் முகத்தில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்டும் முகங்களை மறைத்துக் கொண்டும் சீருடையுடனும் சீருடை இல்லாமலும் இருக்கும் நிலையில் பொது மக்களால் அவர்களிடத்தில் பெயர்களை கேட்டறிவது எவ்வாறு? இவ்வாறு வருகின்ற மர்ம மனிதர்கனை துரத்திப்பிடிக்க முற்படுகின்ற போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் ஓடி ஒளிகின்றனரே இதன் மர்மம்தான் என்ன? அவர்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பதன் இரகசியம் என்ன?
மர்ம மனிதர்களை பிடிக்க மறுக்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பொதுமக்களை தாக்குகின்றனர் மிரட்டுகின்றனர்.
உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததன்பின்னரே இங்கு மர்ம மனிதர்களின் அட்டகாசம் ஆரம்பிக்கின்றது. தமிழ் மக்களையும் தமிழ் பகுதிகளையும் மட்டுமே மர்ம மனிதர்கள் இலக்கு வைத்திருக்கின்றனர். வேறு பிரதேசங்களில் இந்நிலை இல்லை. எந்தவொரு சிங்களப் பகுதியிலாவது இந்த மர்ம மனிதனின் அட்டகாசம் இருக்கின்றதா?
தமிழ் மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்குடன் இராணுவத்தினூடாக அரசு இவ்வாறான மர்ம மனிதர்களின் நாடகத்தை அரங்கேற்றுகின்றது. எனவே தமிழ் மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவும் தீர்வும் காணப்படவேண்டும். எமது மக்களின் இந்த பிரச்சினையை இந்த பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை இங்கு கொண்டு வருவதற்கான உரிமை எம்.பி. என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. இதனை எவரும் தடுத்துவிட முடியாது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten