தமிழ்க்கட்சிகளின் ஒன்று கூடல் இந்தியத்தலைநகரில் நடைபெற்ற போதிலும் அங்கு சென்றிருந்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அங்கு ஒருவருடன் ஒருவர் கைகலப்பிற்குச் செல்லும் வரையில் முரண்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இரண்டு நாட்களாக நடைபெற்ற அமர்வில் இரண்டாம் நாள் அமர்வும் நிறைவு பெற்றதன் பின்னர் பரந்தன் ராஜனின் ஏற்பாட்டில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்களுக்கான விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது.
விருந்துபசாரத்தின் பின்னர் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத போதிலும் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றைத் தருமாறு ஈஎன்டிஎல்எப் பரந்தன் ராஜன் வலியுறுத்தியிருக்கின்றார்.
எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் அறிக்கையினை எவ்வாறு தயாரிப்பது? என்ற தயக்கத்தினை கூட்டமைப்புத் தரப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது. மீண்டும் மீண்டும் ராஜன் வலியுறுத்தியதை அடுத்து “கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்களை மட்டும் எழுதிக் கொடுங்கள்” என்று தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி கேட்டிருக்கின்றார்.
உடனடியாகவே கையில் இருந்த நோட்புக்கை எடுத்த சுமந்திரன் நான்கு வார்த்தைகளில் பேச்சுகளில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் மீண்டும் சந்தித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற சாரப்பட எழுதிவிட்டு நோட்புக்கை மேசையில் வீசியிருக்கின்றார்.
உடனடியாவே ஆத்திரமடைந்த சங்கரி நீ ஒரு சட்டத்தரணியா? (Are you a lawyer?)என்று சுமந்திரனைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார். உடனடியாக சங்கரியைப் பார்த்த சுமந்திரன் “ஓம் நான் சட்டத்தரணிதான், ஆனால் நீர் பதிவாளர் தானே? (Yes, I am a Lawyer but you are a Registrar. Isn’t it?) என்று கேட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த சங்கரி தனது இருக்கையில் இருந்து எழுந்து சுமந்திரனை நோக்கி தாக்குவதற்காகப் பாய்ந்திருக்கின்றார்.
இடை நடுவில் நின்றிருந்த பரந்தன் ராஜன் சங்கரியை இடைமறித்த அதேவேளை சங்கரி தன்னை நோக்கி தாக்க வருவதை கண்ணுற்ற சுமந்திரன் கையில் இருந்த கோட் உடையை மேசையில் போட்டுவிட்டு சங்கரியை நோக்கி பாய்ந்திருக்கின்றார் அவரை மாவை சேனாதிராசா மறித்திருக்கின்றார்.
இவர்கள் இருவரும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்ட சம்பவத்தின் பின்னணி அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பனிப் போர் என்று தெரியவந்திருக்கின்றது.
தமிழர் விடுதலைக்கூட்டணியில் இருந்து தமிழரசுக்கட்சியினர் பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எதிரான வழக்கு ஒன்று இடம்பெற்றது.
இந்த வழக்கில் தமிழரசுக்கட்சி சார்பில் வாதிட்டவர் சட்டத்தரணி சுமந்திரன் என்றும் ஆனந்தசங்கரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி சுமந்திரன் கேள்வி கேட்டதன் பின்னர் இருவருக்கும் இடையிலான முறுகல் நிலை தற்போது வரையில் தொடர்கின்றது என்று தெரியவருகின்றது. |
Geen opmerkingen:
Een reactie posten