சிங்களவர்கள் தமிழர்களை அடித்து, விரட்டி, கொலை செய்து வெளியேற்றிய பல சம்பவங்களை நாம் அறிந்திருக்கிறோம், தமிழர்கள் முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவங்களும், முஸ்லீம்கள் தமிழர்களை வெளியேற்றிய சம்பவங்களையும் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் தமிழர்கள் தமிழர்களை அடித்து விரட்டி கொலை செய்து அனுப்பிய சம்பவங்களை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். அது மட்டக்களப்பில்தான் அந்த அவலம் நடைபெற்றது.
நாம் வன்னியிலிருந்து மட்டக்களப்பிற்கு மார்ச் 8ஆம் திகதி காலையில் வந்தடைந்த போது அந்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. கருணாகுழுவால் அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தவர்கள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பால் யாழ்ப்பாண மக்கள் மட்டுமல்ல மட்டக்களப்பு மக்களும்தான் அதிர்ந்து போனார்கள்.
மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ்.தமிழர்கள் மட்டக்களப்பில் உள்ள யாழ்ப்பாண வர்த்தகர்கள் 24மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும், அவர்கள் தங்களது எந்த உடமைகளையும் எடுக்காது வெளியேறிவிட வேண்டும் என ஆயுதமுனையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உட்பட அரச உத்தியோகத்தர்கள் என பல யாழ்ப்பாணத்தவர்கள் மட்டக்களப்பில் இருந்தார்கள். அது தவிர திருமண உறவுகளுடன் காலங்காலமாக இருந்தவர்கள் பலர். இவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என கருணாவின் உத்தரவு. அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியவர் வேறுயாருமல்ல,பிள்ளையான் எனப்படும் இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தான்.
இதற்கு முன்னரும் யாழ்ப்பாண தமிழர்கள் மீது சில இடங்களில் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் இப்படி பெரிய அளவில் நடந்ததில்லை.
யாழ்ப்பாணத்தமிழனை அடித்து விரட்டிய தேவநாயகம்1977ஆம் ஆண்டு கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட கே.டபிள்யூ.தேவநாயகத்தின் அடியாட்களால் செங்கலடியில் இருந்த யாழ்ப்பாண தமிழர்களின் கடைகள் அடித்து உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட சம்பந்தமூர்த்திக்கு வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக தேவநாயகத்தினால் செங்கலடியில் வர்த்தக நிலையங்களை வைத்திருந்த யாழ்ப்பாணத்தவர்கள் அடித்து விரட்டப்பட்டு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
கடைவைத்திருந்த யாழ்ப்பாண தமிழர்களை அடித்து விரட்டிய தேவநாயகத்தால் அவரின் வீட்டில் இருந்த யாழ்ப்பாண தமிழிச்சியான தனது மனைவியை அடித்து விரட்ட முடியாமல் போய்விட்டது.வெறிச்சோடிப்போன மட்டக்களப்பு 24மணி நேரத்தில் மட்டக்களப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பு நகரமே ஸ்தம்பித்து போனது. வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிக்குடி, கல்முனை என பல நகரங்களில் பலசரக்கு கடைகளையும், கொழும்பிலிருந்து பொருட்களை தருவித்து விநியோகிக்கும் பிரதான முகவர்களாகவும் யாழ்ப்பாண வர்த்தகர்களே இருந்தனர்.
மட்டக்களப்பு நகரில் இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ், பரமேஸ்வரி ஸ்ரோர்ஸ், முருகன் ஸ்ரோர்ஸ், முருகேசு ஸ்ரோர்ஸ், குகன் ஸ்ரோர்ஸ், உட்பட பலசரக்கு கடைகள் பலவற்றின் உரிமையாளர்கள் யாழ்ப்பாண தமிழர்கள். அது போல சன்சையின், ஆஞ்சநேயர் மரக்காலை, ஆடைத்தொழிற்சாலை, என பல வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான். சிலரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் பலர் மட்டக்களப்பில் திருமணம் செய்திருந்தனர். வீடுவாசல், சொத்து அனைத்தும் மட்டக்களப்பில்தான் இருந்தது. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு 24மணி நேரத்தில் வெளியேறி விட வேண்டும் என துப்பாக்கி முனையில் வந்த உத்தரவால் காலம் காலமாக வாழ்ந்த மட்டக்களப்பு மண்ணை விட்டு, தங்கள் வீடுவாசல்கள், சொத்துக்களை விட்டு, கண்ணீருடன் புறப்பட்டார்கள்.
இந்த உத்தரவு வந்ததும் அப்போது மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவராக இருந்த ராஜன் சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு முன்னால் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் கூடினர். ( ராஜன் சத்தியமூர்த்தி என்பவர் இப்போது மட்டக்களப்பு மாநகர முதல்வராக இருக்கும் சிவகீதாவின் தந்தை)
யாழ்ப்பாண வர்த்தகர்களை வெளியேற்ற வேண்டும் என கருணாவுக்கு ஆலோசனை கூறியவரே ராஜன் சத்தியமூர்த்தி தான் என்பதை அறியாத அந்த வர்த்தகர்கள் தமக்கு நீதி கேட்டு அவரின் வாசலில் கூடி இருந்தனர்.என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அம்மானின் கண்டிப்பான உத்தரவு. உயிரை காப்பாற்ற வேணுமாக இருந்தால் உடனடியாக மட்டக்களப்பை விட்டு வெளியேறுங்கள் என ராஜன் சத்தியமூர்த்தி சொன்ன போது வேறு வழி இன்றி தமது சொத்து, வாழ்விடங்கள், உறவுகள் அனைத்தையும் விட்டு வெளியேறினார்கள். அந்த இடத்தில் அப்போது நான் நின்றிருந்தேன்.
சிலர் கொழும்புக்கு சென்றார்கள், சிலர் வவுனியாவுக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்றார்கள்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிக்குடி, கல்முனை நகரங்களில் தமிழர்களின் கடைகள் பூட்டப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் இருந்த வர்த்தக நிலையங்களில் பெரும்பாலானவை யாழ்ப்பாண தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சொந்தமாக இருந்தது. ஒரு சில மட்டக்களப்பு தமிழர்கள் தான் பலசரக்கு கடைகளை வைத்திருந்தனர்;. இதனால் ஹர்த்தால் வேளையில் கடைகள் பூட்டப்பட்டிருந்தது போல நகரில் பெரும்பாலான பலசரக்கு கடைகள் பூட்டப்பட்டிருந்தன.கொழும்புக்கு சென்ற சில தமிழ் வர்த்தகர்கள் அங்கிருந்த படியே தங்கள் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை விற்றுவிடுவதென முடிவு செய்தார்கள்.
கருணா, பிள்ளையான் குழுக்களின் கைங்கரியத்தால் மட்டக்களப்பில் தமிழர்களிடம் இருந்த வர்த்தகம் முஸ்லீம்களுக்கு மாறியது. சிகரட் கொம்பனி உட்பட பல முகவர்களும் யாழ்ப்பாண தமிழர்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு மாறியது. இது முஸ்லீம்களின் தவறல்ல. கிழக்கை காப்பாற்றப்போகிறோம் என புறப்பட்டவர்களின் தவறு.
மட்டக்களப்பு தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வேளாண்மை செய்கையில் நாட்டம் கொண்டிருந்தார்களே ஒழிய வர்த்தக நடவடிக்கைகளில் பெருமளவு நாட்டம் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது சற்று மாறியிருக்கிறது.
வெளியேறி சென்ற யாழ்ப்பாண தமிழர்களிடம் இந்த ஆயுதக்குழுக்கள் இருப்பதை பிடுங்கி கொண்டு விடுவோம் என்ற தோரணையில் பறிக்க கூடியதை பறித்து விட்டே விட்டார்கள். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்த யாழ்ப்பாண வைத்தியர்களும் வெளியேறினார்கள். இதனால் வைத்தியசாலை சேவைகளும் பாதிக்கப்பட்டது. நோயாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து வைத்தியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ளவர்கள் திரும்பி வந்து மட்டக்களப்பில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். சில யாழ்ப்பாண வைத்தியர்கள் திரும்பிவரவில்லை.
யாழ்ப்பாண தமிழர்களுக்கு எதிராக மட்டக்களப்பில் நடைபெற்ற அநியாயங்கள், கொடுமைகளை கண்டு மட்டக்களப்பில் உள்ள பொதுமக்கள் எதுவும் பேசமுடியாதவர்களாகவே இருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டபோது எவ்வாறு யாழ்ப்பாண தமிழ் பொதுமக்கள் எதுவும் பேசமுடியாதவாறு மௌனமாக இருக்க வேண்டிய சூழல் இருந்ததோ அதே போன்றுதான் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது மட்டக்களப்பு தமிழர்கள் மௌனமாக இருந்தார்கள். மட்டக்களப்பு தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கூட முடியாதவர்களாக அடக்குமுறைக்குள் அஞ்சியிருந்தார்கள்.
யாழ்ப்பாண தமிழ் வர்த்தகர்களை வெளியேற்றுவதில் பிள்ளையான் போன்றவர்களுடன் அப்போது மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவராக இருந்த ராஜன் சத்தியமூர்த்தி போன்றவர்களும் முன்னணியில் நின்றனர்.
மட்டக்களப்பு நகரில் தமிழர்களின் ஆதிக்கத்திலிருந்து வர்த்தகத்தை பறித்து எங்கோ கொடுக்கிறோம் என்பது தெரிந்தும் அந்த முட்டாள்தனமான காரியங்களை கருணாகுழுவினர் செய்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமானவர்கள் தமிழர்கள். ஆனால் அம்மாவட்டத்தில் உள்ள வர்த்தகம் 5வீதம் கூட தமிழர்களிடம் இல்லை. தமிழர்களிடம் இருந்த வர்த்தகத்தை பறித்து கொடுத்த பெருமை கருணா, பிள்ளையான் போன்றவர்களைத்தான் சாரும்.
மானம் காக்கும் முஸ்லீம் சகோதரர்கள் மட்டக்களப்பில் 75 வீத தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு வாழும் 6இலட்சம் தமிழர்களும் தங்களுக்கு ஒரு உடைவாங்க வேண்டும் என்றால் கூட முஸ்லீம் சகோதரர்களின் கடைகளுக்கு தான் செல்ல வேண்டும், மளிகை சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலும் அதேநிலைதான். மட்டக்களப்பு தமிழர் ஒருவருக்கு கூட மட்டக்களப்பில் புடவைக்கடை இல்லை. மளிகைகடையும் இல்லை. மட்டக்களப்பு மக்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற ஒரு துண்டை உடம்பில் சுற்ற வேண்டும் என்றாலும் முஸ்லீம் சகோதர்களிடம் தான் செல்ல வேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பு தமிழர்களின் மானத்தை காப்பாற்றி கொண்டிருப்பவர்கள் அங்குள்ள முஸ்லீம் சகோதரர்கள் தான்.
( 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு பஜார் வீதியில் ராஜா சில்க்ஸ் என்ற புடவைக்கடையை தமிழர் ஒருவர் வைத்திருந்தார். ஆனால் அக்கடைக்கு மட்டக்களப்பில் உள்ளவர்கள் செல்லாததால் நஷ்டத்தில் இரு வருடத்திலேயே அக்கடையை மூடிவிட்டார்)
மட்டக்களப்பு நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட புடவை கடைகள் இருக்கின்றன. வீதியோர கடைகளும் பல உள்ளன. இவற்றில் ஒன்று கூட மட்டக்களப்பு தமிழர்களுக்கு சொந்தம் இல்லை.
மொழி, மதம், கலாசாரம், உட்பட பல்வேறு வழிகளில் இணைந்திருந்த மட்டக்களப்பு யாழ்ப்பாண தமிழர்களை தங்களின் சுயநலங்களுக்காக பிரித்து கூறுபோட்டார்கள்.
யாழ்ப்பாண தமிழர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றுவதோடு நின்று விடாது யாழ்ப்பாண கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரையும் கொலை செய்து தமது வெறியை தீர்த்துக்கொண்டனர். இக்கொலைகள் தொடர்பாக இன்னொரு பகுதியில் விரிவாக பார்ப்போம்.
மட்டக்களப்பில் கருணா குழுவும், அவர்களுடன் சேர்ந்து கொண்ட சில சந்தர்ப்பவாத கூட்டமும் யாழ்ப்பாண தமிழர்களுக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலன்பெயர்ந்தவர்கள் சிலர் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிராக மிக மோசமான அவதூறு பிரசாரங்களையும், துரோகி பட்டங்களையும் வழங்கி கொண்டிருந்தனர்.
புலன்பெயர்ந்தவர்கள் வழங்கிய துரோகி பட்டம்
சில வானொலிகள், பத்திரிகைகளும் மட்டக்களப்பு மக்களுக்கு ஒட்டுமொத்தமாக துரோகி பட்டம் வழங்கினர். லண்டனிலிருந்து ஒலிபரப்பான வானொலி ஒன்றில் மட்டக்களப்பு தமிழ் மக்களை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் வகையில் கருத்துகளும் பரிமாறப்பட்டன. மட்டக்களப்பில் முஸ்லீம்களும், தமிழர்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பு தமிழர்களுக்கும் தொப்பி பிரட்டும் குணம் காணப்படுகிறது. அவர்களின் பிறப்பில் சந்தேகம் ஏற்படுவதாக கூட அந்த வானொலியில் கருத்து பரிமாறப்பட்டது. தொழிலகங்களில் ஒன்றாக வேலை செய்த மட்டக்களப்பு தமிழர்களை துரோகிகள் என்றும், அவர்கள் கருணாவின் ஆட்கள் என்றும் ஒதுக்கி வைத்தனர்.
மறுபுறத்தில் தமிழர் விடுதலைக்கு எதிராக செயற்பட்ட சிறிலங்கா அரசுக்கு ஆதரவான வானொலிகள், மற்றும் இணையத்தளங்கள் இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு பிரிவினை வாதத்தை தீவிரமாக பரப்பினர்.
காலம் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு தமிழ் மக்கள் பலரையும் இந்த புலன்பெயர்ந்தவர்களின் செயல்கள் வெகுவாக பாதித்தது. கருணா என்ற தனிமனிதன் செய்த துரோகத்திற்காக ஒட்டுமொத்த மட்டக்களப்பு தமிழ் மக்களையும் தண்டிக்க முற்பட்ட புலன்பெயர்ந்தவர்களை எண்ணி மட்டக்களப்பு மக்கள் மாத்திரம் அன்றி யாழ்ப்பாண தமிழ் மக்களும் வேதனையும் வெட்கமும் அடைந்தனர்.
இதனால் இந்த புலன்பெயர்ந்தவர்களின் செயல்களில் வெறுப்படைந்த வெளிநாடுகளில் வாழ்ந்த மட்டக்களப்பு தமிழ் மக்களில் பலர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதுவரை காலமும் வழங்கி வந்த ஆதரவை விலக்கி கொண்டனர்.
நான் 2004ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கனடாவுக்கு வந்த போது மட்டக்களப்பை சேர்ந்த தமிழர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவன் என்ற காரணத்தாலோ அல்லது யாழ்ப்பாணத்தவன் என்ற காரணத்தாலோ என்னவோ என்மீது வெறுப்பாக பேசினார். இதுவரை காலமும் பிரபாகரனை நாம் பெரிதாக மதித்தோம். அவர்தான் எங்கள் தலைவர் என்று போற்றினோம். ஆனால் மட்டக்களப்பு மக்களை துரோகிகள் என்றும் காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் கேவலப்படுத்தி பேசியதை ஏன் விடுதலைப்புலிகள் தடுக்கவில்லை. இங்குள்ள விடுதலைப்புலிகளும் இதை ஏற்றுக்கொள்வது போல மௌனமாக தானே இருக்கிறார்கள் என சொன்னார்.
அவர் தன்னுடைய அறை ஒன்றிற்கு அழைத்து சென்றார். அங்கே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஒன்று இருந்தது. இந்த புகைப்படம் எனது ஹோலில் வைத்திருந்தேன். இப்போது நான் அதை கழற்றி றூமில் வைத்திருக்கிறேன். இன்னும் அதை தூக்கி எறியவில்லை. தூக்கி எறியும் வகையில் இவர்கள் நடத்து கொள்ளக் கூடாது. மட்டக்களப்பு மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு கேவலப்படுத்தி விட்டார்கள் என என்னிடம் பொரிந்து தள்ளினார்.
இந்த சம்பவங்கள் காலம் காலமாக நெருக்கமாக பழகிய யாழ்ப்பாண- மட்டக்களப்பு மக்களை இரண்டாக பிளவு படுத்தி விட்டது.
அதன் பின்னர் மட்டக்களப்பு மக்களை எழுந்தமானத்தில் கருணாவின் ஆள், துரோகி, உளவாளிகள் என பட்டம் சூட்டி ஒதுக்கி வைக்கும் போக்கு சில யாழ்ப்பாணத்தவர்களிடமும் காணப்படுகிறது. மட்டக்களப்பு மக்களை மட்டுமல்ல மட்டக்களப்பில் வாழ்ந்தவர்களை அல்லது அவர்களுடன் நெருங்கிய உறவுகளை கொண்டவர்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்றால் உடனடியாக அவர் கருணாவின் ஆள் என பட்டம் சூட்டும் போக்கு இந்த புலன்பெயர்ந்தவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு பல சந்தர்ப்பங்களை குறிப்பிடலாம்.
இந்த புலன்பெயர்ந்தவர்களின் முட்டாள்தனத்தை பலரால் புரிந்து கொள்ள முடிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவி மட்டக்களப்பு தமிழனுக்கு ஒட்டு மொத்த யாழ்ப்பாண தமிழனிலும் கோபம் வருவது இயல்பானதுதான்.மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்களை வெளியேற்றிய சந்தர்ப்பவாத குழுக்களுக்கும், மேற்குலக நாடுகளில் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்கிய புலன்பெயர்ந்தவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. இரு தரப்புமே ஒட்டுமொத்த தமிழின விரோதிகளே
அடுத்து வந்த நாட்களில் தமிழர்களை தமிழர்கள் கொன்று குவித்த சம்பவங்கள் மட்டக்களப்பை அதிர வைத்தன.
அந்த சம்பவங்கள் பற்றி அடுத்த முறை பார்ப்போம்…
Geen opmerkingen:
Een reactie posten