தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 februari 2012

ராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...!


         கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பெரிது படுத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்  ஏற்பாட்டில் தான் ராஜீவ்காந்தி கொலை நடந்தது என்று இலங்கை நாட்டின் வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் பேசியிருப்பதை எந்தப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அல்லது இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டனவா என்று தெரியவில்லை. 
               ராஜீவ் காந்தியின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் நீடித்துக்கொண்டே தான் போகிறது. கொலையில் தொடர்புடைய பலபேர் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
                நேற்று முன் தினம்,  இந்திரா காந்தி குடும்பத்தினர் இருக்கும்போது தெற்காசியாவில் அமெரிக்கா பொருளாதாரா ரீதியாக செயற்பட முடியாது என்ற எண்ணத்தில், அமெரிக்க உளவு துறையான சி. ஐ. ஏ - வின்   திட்டத்தின்படியும், ஏற்பாட்டின்படியும்  ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை என்றாலும்  ராஜீவ் கொலை சம்பந்தமான விசாரணை முடிவில் இந்த செய்தி ஏன் சொல்லப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.    
                    ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகள் - விசாரனைகளின் முடிவுகள் முழுமையானது அல்ல என்பதும், பல பேர்களை காப்பாற்றவும், திருப்திப்படுத்தவுமே வழக்குகளும், விசாரணைகளும், அதன் முடிவுகளும் என்பது இந்த நாடு அறிந்ததே. 
                அமெரிக்க சி. ஐ. ஏ  தான் ராஜீவ் கொலையில் மூளையாக இயங்கியிருக்கிறது என்பதும், மற்றவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 
              ராஜீவ் காந்தியின் மீது   அமெரிக்கா எரிச்சல் அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று தான் இலங்கை அமைச்சர் சொன்ன தகவல். இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. 
         கடந்த 1990  -  91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடா போரில் எண்ணெய் நாடான குவைத்துக்காக அமெரிக்கா இராக்குடன் போர் செய்த போது, அமெரிக்காவின் போர் விமானத்திற்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது இந்தியாவில் மிக குறுகிய காலமே பிரதமராக இருந்த எஸ். சந்திரசேகர் தான் அந்த எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளித்தார். இந்த ஈனச்செயலை இடதுசாரி கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதேப்போல் எரிபொருள் நிரப்பிய இச்செயலை ராஜீவ் காந்தியும் எதிர்த்தார். இதனால் ராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சலும் கோபமும் அடைந்தது.
                 அது மட்டுமல்ல, 80 - களில் இந்தியாவினுள்  அமெரிக்காவின் ராட்சசக் குழந்தைகளான புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நுழைந்த காலக்கட்டம் என்பது, இந்திர காந்தியின் மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தி பிரதமராக ஆட்சி செய்த காலக்கட்டமாகும். அவைகளில், தனக்கு சாதகமான புதிய  பொருளாதாரக் கொள்கை, இறக்குமதி போன்றவற்றில் தாராளமயம் போன்றவற்றை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டாலும், இன்சூரன்ஸ் - வங்கித்துறைகளில்  திணிக்கப்பட்ட தனியார்மயத்தில் மட்டும்  அவர் ஆர்வம் காட்டவில்லை. இன்சூரன்ஸ் துறை அவரது தாத்தாவால் தேசவுடமை செய்யப்பட்டது. வங்கித்துறை அவரது அம்மாவால் தேசவுடைமை செய்யப்பட்டது போன்றவைகள் தான் அதற்கு  காரணமாக சொல்லப்பட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு ராஜீவ் காந்தியின் மீது எரிச்சலை ஊட்டியது.
              அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அமெரிக்கக் கட்டளைக்கு பணிந்து நடக்கவில்லை என்றால் அவர்களை தீர்த்துக்கட்டும் வேலையில் தான் அமெரிக்கா ஈடுபடும் என்பது தான் கடந்த கால வரலாறு. 
           விடுதலைப்புலிகளை பயன்படுத்தி ராவீவை கொன்றது போல், தாலிபான்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் இடதுசாரி அதிபர்  டாக்டர். முகமது நஜிபுல்லாவை கொன்றதும்,
                கடலுக்கடியிலும், பூமிக்கடியிலும், ஆகாயத்திலும் அணுகுண்டு சோதனைகளை இனி அமெரிக்கா நடத்தக்கூடாதென்று, அதன் ஜனாதிபதி ஜான் கென்னடி தடை செய்த போது, அவரை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி தன் சொந்த ஜனாதிபதியையே சுட்டுக் கொன்றதும், 
             தனக்கு அடங்கி நடக்காத இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனை தூக்கிலிட்டுக்  கொன்றதும், 
             மாற்றத்தை விரும்பி போராடிய லிபிய மக்களின் எழுச்சியை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கும், மக்கள் விரும்பிய மாற்றம் திசைத்திருப்புவதற்கும் அந்த நாட்டின் அதிபர் கடாபியை சித்திரவதை செய்து கொன்றதும், 
                இஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்திக்கொள்ள,     மறைந்த பாலஸ்தீனத்தலைவர் யாசர் அராபத்தை கொள்வதற்கு பல முறை முயற்சி செய்ததும்,
            தனக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கியூபா நாட்டின் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை இதுவரை 600 - க்கும் மேற்பட்ட தடவைகள் கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்ததும்,
             இரத்தவெறி பிடித்த அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணம். இது தான் அமெரிக்காவின் 500 ஆண்டுகால இரத்தக்கறை படிந்த வரலாறாகும். மேலே சொன்ன அத்தனை சம்பவங்களும், உலக நாடுகளுக்கெல்லாம் பாதுகாவலனாக விளங்கிய - உலக அமைதிக்கு வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்து போன பின் நடந்த சம்பவங்களாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சோவியத் இல்லாததன் பலனை இன்று உலகம் அனுபவிக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten