அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள்.
அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆக போவதில்லை. வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு உள்நாட்டில் மக்கள் விலைவாசியை மறந்து இருப்பர்கள்.
உலக நாடுகள் இன்று, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல் செய்ய சொல்கிறார்கள். அதற்கான காலவரையறையுடன்கூடிய வேலைத்திட்டம் அவசியம் என சொல்கிறார்கள்.
இந்த அறிக்கையில் பொறுப்பு கூறல் தொடர்பில் எதுவும் கிடையாது. மிகவும் மெத்தனமாக சில சிபாரிசுகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிபாரிசுகளைகூட அமுலாக்க அரசாங்கம் தயங்குகிறது. அதற்கான காலவரையறையுடன் கூடிய உத்தரவாதத்தை சர்வதேசத்திற்கு தருவதற்கு அரசாங்கம் தயார் இல்லை. இன்று எம்முன்னே இருக்கும் சிக்கல் இதுதான்.
இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நீர்கொழும்பு கார்டினால் குரே நிலையத்தில் சுதந்திரத்திற்கான அரங்கம் நேற்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் ஐதேக எம்பீக்கள் ஜோசப் மைக்கல், ஜெயலத் ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கை ஒன்றும் பான் கி மூன் அறிக்கை இல்லை. இதை எதிர்கட்சிகள் தயாரிக்கவில்லை. ஊடகங்கள் தயாரிக்கவில்லை. அரசாங்கம் நியமித்த சி.ஆர்.டி. சில்வா அவர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் தயாரித்துள்ளார்கள்.
தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கை சொல்லும் சிபாரிசுகளை அமுல் செய்வதாக காலவரையரையுடன்கூடிய உத்தரவாதம் தர முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த நிலையில் இருந்துகொண்டுதான் இன்று சர்வதேசத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் ஆறு வாரங்களுக்குள் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை அமுல் செய்யப்போவதாக குறிப்பிட்டார். அதன்பிறகு அதுபற்றி இன்று எந்த ஒரு பேச்சையும் காணோம். ஆனால் இன்று அமெரிக்காவும் ஏறக்குறைய இதைதான் சொல்கிறது.
அப்படியானால் இன்றைய ஆர்ப்பாட்டத்தை அரசாங்கத்திற்குள் இருக்கும் தீவிரவாத குழுவினர், தமது ஜனாதிபதிக்கு எதிராகவே செய்கிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்நாட்டில் இன்று இனப்பிரச்சினையே இல்லை. இருந்தது பயங்கரவாத பிரச்சினைதான். அதை நாம் ராணுவத்தின் மூலம் தீர்த்து வைத்து விட்டோம். எனவே அதிகாரப்பரவலாக்கல் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு, தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கையே இனப்பிரச்சினை பற்றியும், அரசியல் தீர்வு பற்றியும் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.
சனல் நான்கு தொலைக்காட்சி காண்பித்த ஒளிநாடாவை பார்க்காமலேயே அது முற்றிலும் பொய் என்று சொன்னவர்களுக்கு, அதுபற்றி சுதந்திர விசாரணை தேவை என ஆணைக்குழு சொல்லி இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
அனைத்து ஆயுத துணைக்குழுக்களும் கலைக்கப்படவேண்டும் என சொல்லப்பட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களினதும் பெயர்விபர பட்டியல் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கிறது.
சரணடைந்தோருக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும், பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பிலான இராணுவத்தின் மீதான சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், திருகோணமலை மாணவர் படுகொலைகள் மற்றும் மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலைகள் ஆகியவை பற்றியும் விசாரணைகள் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருப்பது இவர்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது.
உள்ளூர் தமிழ் கட்சிகளுடன், ஒப்பந்தம் செய்து கிழித்து வீசிவிடுவதை போல் ஐநாவுடன் செய்ய முடியாது. இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்த அடிப்படையில், தமது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஜனாதிபதியே குறிப்பிட்ட ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என ஐநா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் வழங்குங்கள் என அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன்.
இதையே அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், இடதுசாரி தலைவர்களும் தமது அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten