தமிழனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த மனித சமூகமும் மாற்று சிந்தனையோ வேற்று கருத்தோ இன்றி திறந்த மனதுடன் ஆதரிக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான்.
அதற்கு காரணங்கள் பல இருப்பினும் பிரதான காரணமாக திகழ்வது இக்கூட்டமைப்பு எமது தலைவரால் உருவாக்கப்பட்டது என்பதேதான். பூமிப்பந்திலே தான் அமர ஒரு ஆசனமின்றி ஏதியாக்கப்பட்ட தமிழினத்திற்கு உலக அரங்கில் சிம்மாசனத்தை பெற்றுக்கொடுத்த பெரும் கொடையாளன்.
இருத்தி எழுப்பவும், அடக்கி ஆளவும் ஒரு பொம்மைச் சமூகமாக எம்மை தம் உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி பிழிய நினைத்தவர்களுக்கு முன்னால்- வேங்கை நெருப்பாக நின்று காட்டியவன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உலகம் முணுமுணுத்த ஒரே ஒரு பெருமைக்குரியவனாய் வாழ்ந்து நின்று நிலைத்து தன் நிழலைக்கூட எவரும் தொடமுடியாத விர வரலாற்றை எழுதியவன்.
அத்தகைய அரும்பெரும் தலைவனின் கனவில் உதித்து கருத்தில் நிறைந்ததுதான் கூட்டமைப்பு. இதை மனதில் கொண்டதால்தான் தமிழ் மக்களின் ஏகோபித்த அன்பும், ஆதரவும் அதற்கு அன்றுதொட்டு இன்றுவரை பல்கிபெருக காரணம் என்பதை எதிரணியில் நின்று யோசிப்பவர்கள் மனங்கொள்ள வேண்டும்.
தமிழன் எப்போதெல்லாம் வெல்வதற்கு தேதி குறிக்கின்றானோ ஏக காலத்தில் அவனை வீழ்த்துவதற்கு அவனுக்குள் இருந்தே தீய சக்திகளாய் சில புல்லுருவிகளும் உதிக்கத்தான் செய்கின்றனர்.
தனது வரலாற்றில் தமிழன் எதிரிகளால் தோற்கடிக்கப்படுவதைவிட துரோகிகளால் வீழ்த்தப்பட்டதுதான் அதிகம். கூட இருந்து குழிபறிக்கும் கயமைத்தனமும் காட்டிக்கொடுப்பும் உள்ளவரை தமிழன் தலையெடுக்கமுடியாது என்பது எழுதிய விதியாகிவிட்டது.
தனக்குதான் கிரீடம் சூடநினைப்பதும்- தன்னையே மேதாவியாகக் துடிப்பதும் ஆரோக்கியமாதல்ல. கூட்டமைப்பு என்றும் கூடிநின்று ஆட்சி கதிரைகளை அபகரிக்கவிட்டுக் கூட்டின்றி செயற்படுவது முறையானதா? ஆற்றல் அறிவு ஆளுமையுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெறும் முதலமைச்சு ஆகுவதற்கு மற்றவர்களை தூக்கி எறிவது அது அவருக்கு அசிங்கமாய் இல்லையா? யாரை வடமகாண முதலமைச்சராக்குவது என்று மக்கள் முடிவெடுப்பார்கள்தானே காத்திரமான அரசியலை முன்னெடக்கவேண்டிய இந்த தருணத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு ஆத்திரமூட்டும் செயலில் இவர் செயற்படுவது மாயமென்ன?
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கொள்ளைகளையே தமது கொள்கைகளாக வரித்துக்கொண்டு களத்தில் குதித்து தமிழ் சமூகத்தின் ஏகோபித்த அன்பை,ஆதரவை,அபிமானத்தை பெற்றுவிட்டு இன்று தமக்கென தனிக்கொள்ளைகளை வகுத்து பிரிந்து செல்ல துடிப்பது எவ்வளவு ஈனத்தனமான செயல்.
உயிருக்கு உயிராய் அல்லவா தமிழ்ச்சமூகம் உங்களில் நம்பிக்கை வைத்தது. தம் உரிமைகளை மீட்டெடுத்துத் தருவீர்கள் இறமையுடன் வாழவைப்பீர்கள் என்றல்லவா நம்பியது. கூட்டமைப்பை பலப்படுத்துவதுதான் தற்காலத்தில் அவசிய தேவையாக வியாபித்துள்ளது. அதற்கு மாறாக கூட்டமைப்பையே பலவீனப்படுத்தி நளினப்படுத்துவது என்பது எவ்வளவு அநியாயமான செயல்.
ஓட்டுமொத்த கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு ஆற்றும்பணி போதாது என்ற பெரும்குறை பரவலாக பேசப்படும் இந்தத் தருணத்தில், அதற்குள்ளேயே விரிசலை ஏற்படத்தி தமிழ் கட்சிக்குள் உடைவை உண்டுபண்ணி தமிழரின் அரசியல் தலைவிதியையே அகலபாதாளத்திற்குள் தள்ள நினைப்பது, முயற்சிப்பது என்பது மன்னிக்க முடியாத மகாதவறு.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சிலருக்கு இது புரியாத புதிரல்ல மெத்த படித்த பெரிய மனிதர், திறமைசாலி,ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்க வல்லவர்-துணிந்த கட்டை என்று பலராலும் பேசப்பட்ட அவரே இப்படி தளம்புகின்றார் என்று எமது சமூகத்தை யோசிக்க வைக்கிறது.
இவரது அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழரின் அரசியலை கூறு போடுவதால் நாறப்போவது தமிழர் மட்டும்தான் அரசியல்வாதிகள் தடம்மாறுவது கூட தமிழனுக்கு தடம் வைப்பதற்கு ஒப்பானது. ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக இப்படி அசிங்கமான முடிவுகளை எடுப்பது என்பது எமது எதிரிக்கு நாம் கொடுக்கும் வாய்ப்பாகவே அமையும்.
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எதிரிகள் எம் அரசியல் ஸ்திரத்தன்மையே ஆட்டம்காணச்செய்து விடுவார்கள். வரலாற்றில் வழமையாக இதுதான் நடந்தேறி வருகின்றது. சம்பந்தன் இல்லையெனின் தமிழனுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை வந்துவிடுமோ என்று அஞ்சத்தோன்றுகின்றது.
இருக்கும் அரசியல் தலைவர்களுக்குள் ஒற்றுமை.விட்டுக்கொடுப்பு இருப்பதற்கு பதிலாக போட்டி பொறாமைதான் வளர்ந்து வருகின்றது. இவர்களின் கைகளில் தமிழர் தம் அரசியலை கையளித்துவிட்டு நேராக கால்நடையாக காசிக்கு போகவேண்டியதுதான். அந்தளவிற்கு நமது ஒற்றுமை மனப்பாங்கு நாசமாகிப்போகின்றது.
இருக்கும் 13பேருக்குள் 10கூட்டணி என்றால் நிலமை என்னாகும். முள்ளிவாய்க்காலுடன் அவலம் முடிந்ததாய் யாரும் நினைக்காதீர்கள்.இனித்தான் பேரவலம் காத்திருக்கிறது. எம்மை இரைகொள்ளப்போகின்றது.
எமக்கான அரசியலை உலக அரங்கில் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒற்றைக்குடைக்குள் நிற்க வைக்க நாம் செய்ய வேண்டிய பணி ஏராளமாய் காத்து கிடக்கின்றது. கழுத்தறுப்பு அரசியலை கைவிட்டு விட்டு புனிதமான செயலில் புறப்பட தயாராக வேண்டும்.
கூட்டமைப்பின் பணி வன்னியுடன் ஒப்பிடும்போது மற்றய மாவட்டங்களில் மந்தமாகவே இருக்கின்றது. காரணம் புரியவில்லையா? கூட்டமைப்பின் அந்த நாடாளமன்ற உறுப்பினர் பணிகளுக்காக ஒதுக்கும் நேரத்தை மதிப்பிடுவதன்மூலம் அவர் ஆற்றும் தொண்டின் கனதியை நிறுத்துப்பாற்க முடியும்.
கூட்டமைப்பு அலுவலகம் கிளிநொச்சி அலுவலகம் கிளிநொச்சி நகரின் மத்தியில் முழுநேரமாக இயங்கிவருகின்றது. பெரிய தொண்டு நிறுவனங்கள்போல் இயங்கும் நிர்வாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் ரீதியாக பணிகள் விரிவாக்கப்பட்டு செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்க்கலாம்.
வன்னியில் எந்த மூலையில் இடர் நேர்ந்தாலும் கூட்டமைப்பின் தொண்டர்களை சிலமணித்துளிகளில் அந்த இடங்களில் காணலாம். இப்படித்தான் வன்னி மண்ணில் கூட்டமைப்பின் பணி களைகட்டுகின்றது. யாருக்காகவும் பேருக்காகவும் அல்ல கூட்டமைப்பு என்ற வேத வாக்கிற்காகவே இந்த துயர்துடைப்புபணி. “ மக்களுடன் நாம் இருக்கின்றோம்” என்று சொல்லும் தகுதி வன்னியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு மட்டும்தான் இருக்கின்றது.
இந்த பெருமை அந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை சென்றடைவதில் என்ன தப்பிருக்கின்றது. இரவு பகல் பாராது. மழை வெய்யில் என்று பாராமல் மக்களுக்காக தன்னை ஒப்புக்கொடுத்து பணி செய்பவனை அந்த மக்கள் ஏந்தி துதிப்பதில் என்ன பிழை இருக்கின்றது.
அவர் வந்த பாதை நேர்மையான புனிதமான பாதை. கூட்டமைப்பில் உள்ள சிலர்போல காலத்திற்கு காலம் முகத்தையும் சுயத்தையும் மாற்றியமைப்பவர் அல்ல அவர் அரசியலுக்கு குழந்தையாக இருந்தாலும் தந்தைக்கே உபதேசம் செய்த பாலமுருகனைப்போல அவரின் வளர்ச்சி ஆற்றலும் அனுபவமும் படை பட்டாளமும் உள்ளவர்களென பீற்றிக்கொள்ளும் உங்களுக்கும் உங்ளைச்சுற்றியே தங்கள் வயிற்றுப்பிழைப்பு நடத்துவோர்க்கும் தர்ம சங்கடமாக இருப்பதும் மறுப்பதற்கில்லை.
நேற்று முளைத்தவரின் நிமிர்வும் செல்வாக்கும் நினைக்கும்போது முள்ளந்தண்டு இல்லாது முதுகுசொறியும் ஆசிரியபீடத்து மனசுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்கென்ன செய்வது? அவர் உச்சத்தை தொடுவதை விரும்பாத சிலர், விண்குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக ஏளனமாக விமர்சித்து அறிக்கையிடுவதும் விண்ணாணம் பேசுவதும் ஏற்புடையதல்ல.
எல்லோரும் உயர்வதற்கான வழிகளை தேடவேண்டுமே தவிர உயர்பவனை வீழ்த்தி அவனுக்குமேலே ஏறிநின்று தன்னை பெரிய ஆளாகக்காட்ட நினைக்கவோ,முயலவோகூடாது. இது அலங்கோலமான நடத்தை. இதை தமிழ்ச் சமூகம் ஏற்காது. கூட்டமைப்பு உறுப்பினர் சிலர் சுயபுத்தியை தொலைத்துவிட்டு இரவல் மூளையில் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.
இத்தனைக்கும் மத்தியில் துதிபாடிக்கொண்டு பலபெயர்களில் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டு ஈழவிடுதலை உணர்வோ கனவோ இன்றி வெறும் பணத்திற்காக பற்சோந்தித் தனமாக மாரடிக்கும் பேர்வழி எதைச்சொன்னாலும் செய்யும்! எழுதும் தமக்கென இலட்சியமோ,குறிக்கோளோ இப் பிறவிகளுக்கில்லை செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான் என்று வாழாமல் மக்களின் விடுதலைக்காக, விடிவுக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
சாத்வீகன்
shathveegan3000@gmail.com
shathveegan3000@gmail.com
Geen opmerkingen:
Een reactie posten