தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 februari 2012

இரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா ?


19 February, 2012 
தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது' என்று, தனது 'சுயம் நிர்ணயம் உரிமை' என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர். தமது பிராந்திய பூகோள நலன்களுக்கு ஏற்றவாறு மனித உரிமை மீறல் என்கிற கருத்து நிலையை நிறுவுவதன் ஊடாக, கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை நிராகரிக்கும் வல்லரசாளர்களின் போக்கு இன்றுவரை மாறவில்லை என்பதனை பி.ஏ. காதரின் கூற்று புலப்படுகிறது. திட்டமிட்டப்பட்ட இனப்படுகொலையை, மனித உரிமை மீறல் என்ற குறுகிய எல்லைக்குள் முடக்கி விட்டால் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்த ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்படாது. இதனடிப்படையிலேயே இலங்கை தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் தலையிடும் அனைத்து நாடுகளினதும் இராஜதந்திர நகர்வுகள் அமைகின்றன.


ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையிலும் முள்ளிவாய்க்கால் குறுகிய நிலப்பரப்பில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்று கூறாமல், மனித உரிமை மீறல் என்றே சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஆகவே இறுதிப் போரில் என்ன நடந்தது என்பதனைத் தீர்மானிக்கும் பொறுப்பினை வல்லரசாளர்களின் கைகளில் கொடுத்துவிட்டு, இராஜதந்திரப் போரினை மிக நுட்பமாக நடத்துகின்றோமென சுய திருப்தி கொள்வது அபத்தமாகவிருக்கிறது.

அமெரிக்காவின், மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியங்களிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் ரொபெர்ட் ஓ பிளேக், அரசால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்கிற தீர்மானத்தை வருகிற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன் மொழிவோம் என்று கூறியவுடன், இதற்கு ஒத்து ஊதும் வகையில், இந்த முதல் நகர்வினை வரவேற்போமென கூட்டமைப்பின் நியமனத் தலைவர் கருத்தொன்றை வெளியிடுகின்றார். இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான கால அவகாசம் அமெரிக்காவிற்குத் தேவைப்படுவதால், கம்போடியாவில் 30 வருடங்களிற்குப் பின்னரே விசாரணை நடைபெற்றதென்கிற தகவல்கள், தான் முன் வைக்கும் நியாயப்படுத்தல்களுக்கு உறுதுணையாக அமையுமென்று நினைக்கின்றார்.

அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முன்பு நிராகரித்தவர்கள், அமெரிக்காவின் போக்கிற்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொண்டு, அதில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை அரசு நிறைவேற்றட்டும் என்று கூறுவது, பூகோள அரசியலைப் புரிந்த புதிய இராஜதந்திரமென சிலர் வியாக்கியானமளித்து, இது தான் தமிழர்களுக்கான போகிற போக்கில் இழுபட்டுச் செல்லும் நவீன இராஜதந்திரமென்றும் சொல்வார்கள். 193 நாடுகளில் ஒரு நாடாக, இறைமையுள்ள தேசமென அந்நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையானது, வல்லரசாளர்களுடன் நீண்ட இராஜதந்திரப் போரில் ஈடுபட்டாலும் மக்கள் எழுச்சியினை எதிர்கொள்ள முடியாமல் அச்சப்படுவதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கப்பூருக்கு ஓடலாம். மந்திரிப் பிரதானிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பலாம். மனித உரிமைப் பேரவையில் மேற்குலகம் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்தால் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் அணிசேரா நாட்டு அணியோடு இணைந்து முறியடிக்கலாம்.

ஆனால் பொருளாதார நெருக்கடியால் உள்நாட்டில் எழும் நெருக்கடியை இந்த வல்லரசுகளின் துணையோடு முறியடிப்பது கடினம்.மாட்டு வண்டிப் போராட்டத்தை முன்னெடுக்கும் மடிப்புக் குலையாத வெள்ளைச் சட்டை அரசியல்வாதிகளால் மக்களை அணி திரட்டிப் போராட முடியாதென அரசு கவனக் குறைவாக இருந்தாலும், சிலாபத்தில் மீனவர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு எழுந்துள்ள தன்னியல்பான மக்கள் எழுச்சி, தெற்குவரை விரிந்து செல்வது ஆபத்தான சமிக்ஞைகளை அரசிற்கு வெளிப்படுத்துகிறது. தற்போது பெற்றோலியப் பொருட்களின் விலையேற்றத்தை அடுத்து மின்சாரக் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது இலங்கை மின்சார சபை. 0 - 30 வரையான அலகுகளுக்கு (Units) 25 சதவீதமாகவும், 31 இலிருந்து 60 வரையான அலகுகளுக்கு 35 சதவீதமாகவும், 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமாகவும் மேலதிக கட்டணம் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தொழில் துறை அவசியமானதால், அதற்கு 15 சதவீத அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிப்படையப் போவது குறிப்பாக நகர்ப்புற மக்களே. சீட்டுக் கட்டுக் கோபுரங்கள் ஒரு சிறு தாக்கத்தினால் நிலைகுலைவது போன்று, பெற்றோல் விலையுயர்வானது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி, அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலையையும் அதிகரித்து விடும். பண்பு ரீதியாக, சீட்டுக் கட்டுக் குலைவும் மக்கள் மீதான சுமைகளின் அதிகரிப்பும் பொருந்திச் செல்கின்றது. ஆகவே சுமைகளைத் திணிக்கும் அதிகாரத்திற்கெதிரான போராட்டம், நாட்டிறைமையின் அடிப்படையாக விளங்கும் மக்களிடமிருந்து எழுவது எதிர்வினை யதார்த்தமாக அமையும். இத்தகைய விலையேற்றங்களுக்கு ஈரான் மீதான தடையே காரணமென அரசு நியாயப்படுத்த முனைந்தாலும், நாட்டின் அதிகரிக்கும் மொத்த தேசிய கடன் தொகையும் முக்கிய பங்கினை வகிக்கிறதெனலாம்.

அண்மைக் காலமாக நடைமுறையிலிருந்த அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நிர்ணயிப்பு, நெகிழ்வான போக்கில் விடப்பட்டதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் காணலாம். இத்தகைய நெகிழ்வுத் தன்மைக்கு, இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நகர்வென்று வியாக்கியான மளிக்கப்பட்டது. அத்தோடு சென்மதி நிலுவையில் (Balance of Payment) ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்யவும் இது உதவுமெனக் கருதப்படுகிறது. பொதுவாக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே நாடொன்றின் அரசிறைக் கொள்கை (Fiscal policy) முன் வைக்கப்படுகிறது. அக் கொள்கையை மத்திய வங்கி நடைமுறைப்டுத்தும்போது, அது நாணயக் கொள்கையாக மாற்றமடையுமென்கிறார் அரச கணக்காய்வு அத்தியட்சர் ஐ.எம். ரஷ்மி.
இங்கு நாட்டின் இறக்குமதி அதிகரிப்பால் டொலருக்கான கேள்வி (Demand) உயர்கிற அதேவேளை, அதற்கேற்ப நிரம்பல் இல்லாத பட்சத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையுமென்கிறார்.

அதேபோன்று நாட்டின் ஏற்றுமதி குறைவடைவதால், திறைசேரியில் டொலரின் அளவும் குறைந்து விடும். ஆகவேதான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென அரசு பெரும் பரப்புரையில் ஈடுபடுவதைக் காணலாம். இருப்பினும் ஒப்பீட்டளவில் சிறியளவிலான ஏற்றுமதி வருவாய்கள், பாரிய வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்ட இலங்கையின் தேவையை பூர்த்தி செய்து அரச திறைசேரிகளை நிரப்ப முடியாது. இறக்குமதியாகும் பெற்றோலியப் பொருட்களுக்கான நிதிக் கொடுப்பனவுகளுக்கும், விற்ற முறிகள் [Bond] முதிர்ச்சியடையும் போது அந்நிதியைத் திருப்பிக் கொடுப்பதற்கும், நிதி முதலீட்டு வங்கிகள், சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடன்களுக்குத் தவணைப் பணத்தை செலுத்துவதற்கும் திறைசேரியில் நிதி இருக்க வேண்டும். இந்த இலட்சணத்தில் நாட்டை நிர்வாகம் செய்வதற்கும் பணம் தேவைப்படும்.

ஆகவே, கடன் சுமை அதிகரித்துள்ள ஒரு நாட்டில் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன் வருவார்களா என்கிற கேள்வி எழுகிறது. அதேவேளை, கிரேக்க தேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உதவ, ஐரோப்பிய ஒன்றிய ஈரோவலய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள பிணை மீட்பு நிதியத்திற்கு (Baifund) சீனாவிடம் கெஞ்ச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளதை நோக்க வேண்டும். பொதுச் செலவீனங்களைக் குறைத்து மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்தால் மட்டுமே, எம்மால் உம்மைக் காப்பாற்ற முடியுமென கிரேக்கத்திற்கு கிடுக்குப் பிடி போடுகிறது ஐரோப்பிய மத்திய வங்கி. அவ்வாறு உதவி செய்தாலும் 2020 வரை பழைய இயல்பு நிலைக்கு கிரேக்கத்தால் திரும்ப முடியாது என்பதை உணரும் சில நாடுகள், அந்நாடு [கிரேக்கம்] கடனைக் கொடுக்க முடியாத கடனாளியாக [default] தன்னை பிரகடனப்படுத்தக் கூடுமென எதிர்பார்க்கின்றன. போகிற போக்கில், இத்தகைய நிலை இலங்கையிலும் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாகத் தென்படுகின்றன.

இத்தகைய நெருக்கடி நிலையை வல்லரசாளர்கள் உணர்வதால், மனித உரிமை மீறல், போர்க் குற்ற விசாரணை, மீள் இணக்கம், தேசிய நல்லிணக்கம், நல்லாட்சியை நிறுவுதல் என்கிற சொல்லாடல்கள் ஊடாக உள் நுழைய முனைகின்றார்கள். ஆனால், நடைபெற்ற, இன்னமும் நடந்து கொண்டிருக்கிற இன அழிப்பிற்கு சுயாதீன சர்வதேச விசாரணையொன்று தேவையென்பதை இவர்கள் தவிர்த்து வருகின்றார்கள். இவர்களின் இரட்டை நிலைப்பாட்டினை புரிந்து கொண்டும், புரியாதது போல் நடித்தவாறு, அவர்களுடைய இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்றவாறு தாமும் பயணிப்பதே, தமிழ் பேசும் மக்களின் இராஜதந்திரமாக இருக்க வேண்டுமென கூற முற்படுவது வேடிக்கையாக விருக்கிறது.ஆனாலும் அரச அதிகாரமையத்திற்கும் மக்களுக்குமிடையே எழும் பகை முரண்பாட்டு நிலை கூர்மையடைந்து, வேறு தளத்திற்கு மாற்றமடைவதைத் தடுக்க முடியாத நிலை ஒன்று உருவாகப் போகிறது.


Geen opmerkingen:

Een reactie posten