கிரேக்க நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொருளாதார வல்லுனர்களும் மக்களுக்கு எதிராக செய்யும் தொடர் பிரச்சாரத்தை தாண்டியது எதார்த்த உண்மை. கிரேக்கத்தில் சட்டப்படி இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதன் மூலம் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வு என்பது, யாருக்கு என்பதை இது தெளிவாக அம்பலமாக்கி விடுகின்றது. இங்கு ஏழைகள் மேலும் ஏழையாவது நெருக்கடியல்ல என்பதுதான், தேர்ந்தெடுத்த ஐரோப்பிய "ஜனநாயக"வாதிகளினதும் மற்றும் உலக வங்கியினதும் கொள்கையாகும். ஏழைகளை மேலும் ஏழையாக்குவதன் மூலம், யாருக்கு எதை எப்படி தீர்வு காண்கின்றனர்? இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்தி நிற்கின்றது. "மக்கள் தேர்ந்தெடுத்த" பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு கொடுத்த பரிசு இது. இதுதான் பாராளுமன்ற "ஜனநாயகம்". இதுதான் ஐரோப்பிய நாடுகளை ஆளும் "ஜனநாயகவாதிகளிள்" பொதுக் கொள்கையாகி, அதை கிரேக்கத்தில் திணித்து பரிசோதிக்கின்றது. நாளை ஐரோப்பா எங்கும், உலகமெங்கும் இதுதான் கொள்கையாக, இதுவே மூலதனத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறவுள்ளது.
கிரேக்க உழைக்கும் மக்களின் அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதுடன், அரசதுறையில் 15000 பேரின் வேலை நீக்கத்தை புதிய சட்டம் முன்வைக்கின்றது. அத்துடன் ஓய்வூதிய குறைப்பையும் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வாக முன்வைக்கின்றது. இப்படி கிரேக்க மக்களுக்கு நெருக்கடியையும் ஏழ்மையையும் அதிகரிக்க வைத்து, யாருக்கு "நெருக்கடியை" நீக்குகின்றனர்? இப்படி கிரேக்க மக்களிடம் புதிதாகப் புடுங்கும் 330 கோடி ஈரோவை யாருக்கு கொடுக்கப் போகின்றனர்? மக்களிடம் பறித்து, அதை மக்களுக்கு கொடுக்கவல்ல. கடனை கொடுத்து, கிரேக்க கடனை குறைக்கவுமல்ல. மக்களைப் புடுங்குவதே, மேலும் கடனை அதிகரிக்க வைக்கத்தான். பணக்காரனின் வட்டியைக் கொடுக்கத் தான், ஏழைகளின் உழைப்பில் இருந்து புடுங்குகின்றனர். இப்படி மூலதனத்தை மேலும் மேலும் கொழுக்க வைக்கத்தான், மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்றம் வெளிப்படையாக மக்களை சுரண்ட சட்டமியற்றுகின்றது.
இதைத்தான் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் கோருகின்றது. கிரேக்கத்தில் மூலதனத்துக்கு ஏற்ற பொம்மை ஆட்சியை உருவாக்கி, இப்படித்தான் சட்டம் இயற்ற வேண்டும் என்ற ஜெர்மனிய தலைமையிலான மூலதனம் வெளிப்படையாகக் கோரி நின்றது.
இப்படி கிரேக்க மக்களை மூலதனம் வெற்றி கொண்டதால், நாளை ஐரோப்பா எங்கும் இதே மாதிரி அடிப்படை சம்பள வெட்டை எங்கும் திணிப்பார்கள். பிரான்சில் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொருட்கள் மேலான வரியை 1.6 சதவீதத்தால் அதிகரிப்பதன் மூலம், கிடைக்கும் பணத்தை முதலாளிக்கு சலுகையாக கொடுக்கும் திட்டத்தை அறிவித்து அதை சட்டமாக்கும் முயற்சியிலும் பிரஞ்சு அரசு இறங்கி இருக்கின்றது. இப்படி ஏழைகளிடம் புடுங்கி கொடுக்கும் திட்டம், ஐரோப்பா எங்கும் இன்று பொதுக் கொள்கையாகி வருகின்றது.
கிரேக்கத்தின் அடிப்படைக் கூலியை பெறுபவர்களுக்கு மட்டும் கூலியைக் குறைக்கவில்லை, அனைத்து உழைப்பாளார்களின் கூலியையும் இது குறைக்கும் அதேநேரம், அனைவரது கூலியையும் குறைந்தபட்ச சம்பளமாக குறைக்கவும் இது வழி காட்டுகின்றது. ஏற்கனவே சமூக வெட்டுகள், வேலை இழப்புகள் மூலம் வாழ முடியாத நிலையில் உள்ள மக்களின் மேல், இது மற்றொரு பாரிய சுமை. ஏழ்மை எங்கும், பொதுவில் அதிகரிக்கின்றது.
ஒரு கோடியே பத்து இலட்சம் சனத்தொகை கொண்ட கிரேக்கத்தில் கடந்த நவம்பர் மாதமே 10 இலட்சம் பேருக்கு மேல் வேலையில்லை. வேலை செய்ய தகுதியுடையோரில், வேலையின்மை வீதம் 20.9 மாகும். அதாவது 5 இல் ஒருவருக்கு வேலையில்லை. 15-24 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினரில், இரண்டில் ஒருவருக்கு வேலையில்லை. அதாவது 48 சதவீதம் பேருக்கு வேலையில்லை. ஆணாதிக்க அமைப்பு சார்ந்து பெண்களை இது அதிகம் பாதிக்க, பெண்கள் மத்தியில் வேலையின்மை 24.5 வீதமாக உள்ளது.
இப்படி கடந்த நவம்பர் இருந்த நிலையையும், இந்த மனித அவலத்தையும், நெருக்கடியாக கருதாத அரசு மேலும் அவர்களை ஏழ்மையில் தள்ளுவதை மக்களுக்குரிய தீர்வாக கொடுக்கின்றது. மக்களை கஞ்சித் தொட்டிக்கு முன்னாலும், மற்றவர்களில் தங்கி வாழும் வாழ்வையும் தான், மக்களுக்குரிய தீர்வாக பாராளுமன்றம் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டம் வழிகாட்டுகின்றது. பணக்காரனை மேலும் பணக்காரனாக்க ஏழ்மையைத் திணிக்கின்றது.
இதற்கு எதிரான அமைதியான கண்டனப் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறிவருகின்றது. பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் சொந்த அதிகாரத்துக்கான போராட்டமாக மாறிச் செல்வதை, மூலதனத்தின் ஈவிரக்கமற்ற சூறையாடல் கோரி நிற்கின்றது. இது மக்களே தங்கள் சொந்த அதிகாரத்துக்கு முன்னின்று வழிநடத்தக் கூடிய பாட்டாளிவர்க்க கட்சி இல்லாத நிலையில் அரசுக்கு எதிராக தன்னியல்பான அராஜகமாக வெடித்தெழுகின்றது.
பாட்டாளிவர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் பாட்டாளி வர்க்க கட்சியின் வருகை தான் கிரேக்க மக்களுக்கான ஒரு தீர்வை வழங்கும். இதை தங்களதும் உலக வரலாற்றில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த அனுபவம் மூலம் உணர்ந்தும் கற்றும் வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளை உலுக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு, முன்மாதிரியாக வழிகாட்டும் நாட்களை நோக்கி மூலதனம் தன் சூறையாடும் கொலை வெறியுடன் அதனைத் திணித்து வருகின்றது.
பி.இரயாகரன்
14.02.2012
Geen opmerkingen:
Een reactie posten