ஜெனிவா மனித உரிமை பேரவையில் மேற்கு நாடுகளின் சவால்களை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. அர்த்தம் உள்ளதும் நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதுமான உத்திகளை கையாளவேண்டுமே தவிர உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா அமைக்கப் போகும் விசாரணைக் குழுவை முட்டாளாக்க வேண்டும். அக் குழுவில் உள்நாட்டவர்கள் யாராவது சாட்சியளித்தால் அவர்களின் குடும்பங்களோடு ஒதுக்கி வைக்க வேண்டும். எவ்விதமான சிவில் உரிமைகளும் வழங்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை சௌசிறிபாயவில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர மேற்கண்டவாறு கூறினார்.
இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புலி பயங்கரவாதிகளை இல்லாதொழித்த பின்னரே மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் கடுமையாக பேசுகின்றன. ஆனால் புலிகள் உள்நாட்டில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் பேசுவதில்லை.
உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி கொண்டதாலேயே இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன.
குறிப்பாக மேற்குலக நாடுகள் பேராசைக்காரர்கள். ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் மேற்குலக நாடுகள் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி விட்டுள்ளன. இங்கு பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதும் அவை விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. வியட்னாமில் இவ்வாறான நிலையை தோற்றுவிக்க முயற்சித்த போதிலும் அது படுதோல்வி நிலையிலேயே முடிந்தது.
எனவே இலங்கை ஒரு சிறிய நாடு என்பதால் மேற்குலக நாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுப்பது சவாலான விடயமாகும்.
இதற்கு ஏனைய வலய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமே தவிர உள்நாட்டில் பொதுமக்களை பஸ்களில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதால் எவ்விதமான நன்மையும் இல்லை. அரசாங்கம் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.
ஜெனிவா விசாரணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பினால் அதனை முட்டாளாக்க வேண்டும். யாரும் அக் குழுவுக்குச் சென்று சாட்சியமளிக்கக் கூடாது. மீறி சாட்சியமளிக்கும் சந்தர்ப்பத்தில் அவரை உள்நாட்டிலேயே ஒதுக்கி வைக்க வேண்டும்.
சதாம் ஹுசைன் மற்றும் கடாபி போன்றவர்களுக்கு இடம்பெற்றது போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடம்பெறலாம். ஏனெனில் அவ்வாறானதொரு வெறித்தனத்திலேயே இன்று மேற்குலக நாடுகள் செயற்படுகின்றன எனவும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten