தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2012

கோத்தபாய - சிவ்சங்கர் மேனன் நேற்று அவசர பேச்சு!-இந்தியாவின் வகிபாகம் குறித்து உயர்மட்ட ஆலோசனை!


ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பிலான இந்தியாவின் வகிபாகம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய சிரேஷ்ட ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் அவசர பேச்சுகளை நேற்று நடத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மாநாடு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்படி முக்கிய பேச்சு தொலைபேசியூடாக நடத்தப்பட்டது என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் அநீதியான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன எனவும், இவ்வாறான செயற்பாடுகள் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் சிக்கல் நிலைமைகளை உருவாக்கும் என்பதால் இதில் இந்தியாவின் வகிபாகம் மிக முக்கியமானதாக இருக்கும் என சிவ்சங்கர் மேனனிடம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சுட்டிக்காட்டினார் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
போருக்குப் பின்னர் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்து வரும் முயற்சிகள் குறித்து இந்தியாவிடம் அவ்வப்போது எடுத்துக் கூறப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இலங்கை வந்து அவற்றை அறியக்கூடிய நிலையில் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் மேற்குலக நாடுகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் அரசின் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற வகையில் அதுகுறித்து இந்தியா கூடுதல் கவனஞ் செலுத்தவேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் இந்தத் தொலைபேசி உரையாடலின் போது வலியுறுத்தினார் என்று இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இதற்கிடையில், ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டுவரவுள்ள நிலையில் இது விடயத்தில் எவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொள்வது என்பது பற்றி இந்திய அரசின் உயர்மட்டத்தில் மந்திராலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன எனக் கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten