தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 februari 2012

தமிழ்வின் செய்திக்கு ஒரு விளக்கம் - வி. ரி. தமிழ்மாறன்


[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:31.19 PM GMT ]
நேற்றைய தினம் தங்கள் இணையத்தளத்தில் எனது பெயர்குறிப்பிட்டு வெளியான செய்திதொடர்பில் பின்வரும் விளக்கத்தை அனுப்புகின்றேன். இது ஒரு தன்னிலை விளக்கம் என்றளவில் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
கூட்டமைப்பை ஆதரிப்போர் யாவருமே தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றைத் தூரவைத்து விட்டார்கள் என்ற சாரப்படச் சிலர் சிந்திப்பது கவலையளிப்பதாக உள்ளது. நேற்றைய கூட்டத்தில் நான் முதலில் பேசியவற்றுக்கு சிலர் கருத்துச் சொன்னார்கள். பின்னர் அக்கருத்துக்கள் தொடர்பில் நான் சில விளக்கங்களைக் கொடுத்தேன். அவ்விளக்கங்கள் முற்றிலுமாகவே செய்திகளில் தவிர்க்கப்பட்டுள்ளது.
“நான் யாருடைய சார்பாகவும் பேசவில்லை நான் அரசியல்வாதி யுமில்லை எனவே கருத்துக்களை நான் வெளிப்படையாகவே கூறுகின்றேன்” என்று சொல்லித்தான் நான் எனது பேச்சினை ஆரம்பித்தேன். கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை அணுகுமுறையை ஆதரிக்கின்றேன் என்றும் சிவில் சமூகம் தனது கோரிக்கையில் அன்றி அதனை முன்வைத்த விதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டதற்காக நான் கூட்டமைப்பின் சார்பாகக் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவில் சமூகத்தின் சார்பில் கலந்து கொண்டோர் யாவரும் கஜேந்திரகுமாரின் சார்பாகக் கலந்துகெண்டார்கள் என்று கூறுதல் எந்தளவுக்குத் தவறோ அந்தளவுக்கு இந்தப் புனைவும் தவறானதே என்பதை முதலில் தெளிவாக்க விரும்புகின்றேன்.
தேசியம் சுயநிர்ணயம் என்பன வெறுமனே வெற்றுக் கோஷங்கள் என் நான் ஒருபோதுமே குறிப்பிடவில்லை. “அவை என்ன வெற்றுக் கோஷங்களா” (Are these just abstract concepts?) என்ற வினாவை எழுப்பி அங்ஙனம் எண்ணிச் செயற்படாதீர்கள் என்றே வேண்டுகோள் விடுத்தேன். இந்த எண்ணக் கருக்கள் அந்தரத்தில் தொங்கவிடப்படாதிருப்பதற்கு பின்புலக் கட்டமைப்பு ஒன்றின் தேவையை வலியுறுத்திப் பேசியிருந்தேன். ஆனால் இது கூட்டத்தில் இருந்த ஒரு சிலரால் தவறாக விளங்கப்பட்டதா அல்லது திரிபுபடுத்தப்பட்டதா என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் இதுதொடர்பில் பின்னர் நான் விளக்கம் கொடுத்திருந்தேன். அது தங்களுக்கு எட்டவில்லை என நினைக்கின்றேன்.
அவற்றை நான் வெறும் கோஷங்களெனக் குறிப்பிட்டதாகச் செய்தி தரப்பட்டுள்ளது.
இங்கு நான் பேசியதில் எதுவுமே புதியதுமல்ல. யாருக்கும் வக்காலத்து வாங்குவதற்காகப் பேசப்பட்டதுமல்ல. கடந்த இருபத்தைந்து வருடங்களாக நான் எழுதியும் பேசியும் வருவதுதான்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தினக்குரலின் 15வது ஆண்டுமலரின் 148 ஆம் பக்கத்தில் நான் எழுதியிருந்த “தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் : தெளிவும் தேவையும்” என்ற கட்டுரையில் சொல்லியிருந்த விடயங்களையே நேற்று மீண்டும் வலியுறுத்திப் பேசியிருந்தேன். எதற்காகவுமோ அல்லது யாருக்குமாகவுமோ தேசியத்தையும் சுயநிர்ணய உரிமையையும் வெற்றுக் கோஷங்கள் எனக் குறிப்பிடும் அளவுக்கு எனக்கு நான் கருத்தியலில் வங்குறோத்து நிலைமைக்கு வந்துவிடவுமில்லை. தரந்தாழ்ந்துவிடவுமில்லை.
(வி. ரி. தமிழ்மாறன்)
vtt_honey@yahoo.com
தமிழ்வின்

Geen opmerkingen:

Een reactie posten