தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உளவு பார்க்கின்ற மேலைத்தேய ஒற்றர்களை போட்டுத் தள்ளுகின்றமைக்கான உத்தரவை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறப்பித்து இருந்தார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய தூதரங்களுக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைந்து சென்றமையைத் தொடர்ந்து ஆவேசத்தின் உச்சத்துக்கு சென்ற பிரபாகரன் மேலைத்தேய நாட்டு ஒற்றர்கள் குறித்த தகவல்களை சிறிய பிசகுகூட இல்லாமல் சேகரிக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கின்றார் என்று அமெரிக்க தூதரகத்துக்கு தெரிய வந்து இருந்தது. முக்கியமாக அமெரிக்க பிரஜையான பீற்றர் சல்க் என்பவரை போட்டுத் தள்ளச் சொல்லி பிரபாகரன் உத்தரவிட்டு இருக்கின்றார் என்கிற செய்தியால் அமெரிக்க தூதரகம் கலவரப்பட்டுக் கொண்டது. பீற்றர் சல்க் விடயத்தில் விழிப்பாக நடந்து கொள்ள சொல்லி இந்திய தூதரகமும் பூடகமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருந்தது. அமெரிக்கர் ஒருவரை படுகொலை செய்ய சொல்லி பிரபாகரன் உத்தரவிட்டு இருந்திருப்பாரானால் இது மிக முக்கியமான விடயம், கடந்த காலங்களில் புலிகள் அமெரிக்கர்களை இலக்கு வைத்து இருக்கவில்லை என்பது அமெரிக்க தூதரகத்தின் அவதானமாக இருந்து உள்ளது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி உள்ளன விக்கிலீக்ஸ்: நோர்வே தரப்புக்கு சண்டித்தனம் காட்டிய டக்ளஸ்! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மிரட்டுகின்றார் என நோர்வே தரப்பினர் இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு முறைப்பாடு செய்து இருக்கின்றனர். அத்துடன் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவற்றுக்கும் தேவானந்தாவின் மிரட்டல் குறித்து தெரியப்படுத்தி இருக்கின்றனர். அத்துடன் கொழும்பில் உள்ள நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கார் இம்மிரட்டல் குறித்து தேவானந்தாவிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்டும் இருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டமையை தொடர்ந்து டக்ளஸின் ஆட்கள் நோர்வே தூதரகம் முன்பாக பிரேதப் பெட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர். டக்ளஸின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்று தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தின் கடைசி வரிகள் மிரட்டுவனவாக இருந்தன என தூதரகம் கண்டு கொண்டது.
நோர்வே, யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் ஆகியோர் புலிகளால் இனி மேல் அரசியல் படுகொலைகள் நடத்தப்படாது, இல்லை என்றால் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும் என்று கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதே போன்ற கருத்தைத்தான் ஊடகவியலாளர் மாநாட்டிலும் டக்ளஸ் முன்வைத்து இருந்தார். இவ்விடயம் குறித்து தூதுவர் தொலைபேசியில் விளக்கம் கேட்டபோது எவரையும் மிரட்டுகின்ற அர்த்தப்பட கடிதத்தில் எழுதி இருக்கவில்லை என்று சொல்லி சமாளித்த டக்ளஸ் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துகின்ற அல்லது கொலைகளை தடுக்கின்ற இயலுமை நோர்வேக்கோ, கண்காணிப்பாளர்களுக்கோ கிடையாதுதான் என்று ஒப்புக் கொண்டு இருக்கின்றார். அரச அமைச்சர் ஒருவர் எப்படி இப்படி அச்சுறுத்த முடியும்? என்று கேட்டமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமாகவே கடிதத்தை எழுதி இருக்கின்றார் என்றும் அமைச்சராக அல்ல என்றும் டக்ளஸ் இறுதியில் சொல்லி இருக்கின்றார். அத்துடன் இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் பல்லியகாரவிடம் இம்மிரட்டல் குறித்து முறையிட்டு இருக்கின்றார். மட்டுமல்லாது அமெரிக்க தூதுவரின் கவனத்துக்கும் கொண்டு வந்து இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர கடிதம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலமாக இவ்விபரங்கள் வெளியாகி உள்ளன. |
Geen opmerkingen:
Een reactie posten