தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 februari 2012

ஜெனீவா மாநாட்டில் த.தே.கூட்டமைப்பு கலந்துகொள்ளாதாம் ! !!


அடுத்த மாதம்(மார்ச்) ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றைக் கொண்டுவர சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இம் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என அறியப்படுகிறது. உள்ளகத் தகவலின் அடிப்படையில் திரு.சம்பந்தர் ஐயா அவர்களே இம் முடிவை எடுத்துள்ளார். புலம்பெயர் மக்களும், பல தமிழ் அமைப்புகளும் இலங்கைக்கு எதிராக போர் குற்ற பிரேரணை ஒன்றை மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவர பெரும் பாடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது தமிழர்கள் பல நடை பயணங்களையும் மேற்கொண்டு, ஜெனீவா நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சில் மாநாடு நடக்கவிருக்கும் அதே தேதியில் அதற்கு முன்னதாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி, கொண்டுவர இருக்கும் பிரேரணைக்கு வலுச்சேர்க்கவும் தமிழர்கள் அரும்பாடுபட்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாரிய கட்சி என்ற வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதில் கலந்துகொள்ளவில்லை எனத் தீர்மானித்துள்ளது தமிழர்கள் நெஞ்சில் வேலைப் பாச்சும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது. சமீபத்தில் சமபந்தர் ஐயா அவர்கள் மகிந்தரை அவசரமாகச் சந்தித்துள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது. இதனை அடுத்துத்தானா, இம் முடிவும் எட்டப்பட்டது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல உலக நாடுகள் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் புறக்கணிக்கவேண்டும் ? இறந்த 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாதா இல்லை அங்கே கொல்லப்பட்ட சிறுவர்கள், பெண்கள், கற்பழிக்கப்பட்ட எமது சகோதரிகளுக்கு ஞாயம் கிடைக்கக்கூடாதா ?

அதிர்வு இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய நாடாழுமன்ற உறுப்பினர் ஒருவருடம் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, தமது அமைப்புக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். மற்றும், அப்படியே தாங்கள் சென்றாலும் அங்கே தம்மை பேச அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புலம் பெயர் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் முறையாக அழைத்துள்ளது. அவர்களும் முறைப்படி முதலில் விண்ணப்பித்து தமது அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால் இவற்றில் எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஈடுபாடு இல்லையா ? மகிந்தரை திருப்த்தி படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இம் மாநாட்டைப் புறக்கணிப்பதாக தமிழர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

Geen opmerkingen:

Een reactie posten