தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 februari 2012

இலங்கைக்கு எதிராக தீர்மானம்! பந்து இப்போது இந்தியாவிடம்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது. இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன.
அதனை தீவிரமாக இந்தியா எதிர்த்ததால், அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இறுதிப் போரின் கடைசியில் அரச படைகளாலும், தமிழ் புலிகளாலும் மிக மோசமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை 2009 மே பிரேரணையில் சுட்டிக்காட்டி இருந்த 17 நாடுகளும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய பராமரிப்பு, மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றல், ஊடக சுதந்திரத்தை மதித்தல், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.
மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரின்போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த இந்தியா, "மேற்கு நாடுகள் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, மூன்றாம் உலக நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது எவ்விதத்தில் நியாயமானது?'' எனக் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்தியாவால் இலங்கைக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரப்புரை வெற்றியடைந்தது. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் போன்றவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளை வழங்கின.
இதன் பின்னர், அந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்த அதேவேளை விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டையும் முன்வைத்தது.
இலங்கைப் படைகள் மேற்கொண்ட மனித உரிமை மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்போது கருத்தில் எடுக்கப்படவில்லை.
47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் இலங்கையை ஆதரித்து 29 வாக்குகளும் எதிர்த்து 12 வாக்குகளும் வழங்கப்பட்டன. 06 உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது.
பிராந்திய அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே அப்போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தியது. ஆனால் தற்போதை நிலைமைகள் அவ்வாறில்லையென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு பயணம் செய்திருந்தார். பெருந்தொகையான நிதியை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதற்கான உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குகின்ற இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் எனவும் அறிவித்தார். இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், கிருஷ்ணா இலங்கைக்கான தனது "வெற்றிகரமான பயணத்தை'' முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி ஒரு நாள் ஆவதற்குள் 600 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதலை மேற்கொண்டது.
இந்தத் தாக்குதலில் 200 படகுகள் வரை சேதமடைந்தன. தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கற்களைக் கொண்டு சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்துள்ள நிலையில் மீனவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை என்ற மிகச் சிறிய நாடானது, வல்லரசான இந்தியாவை எதிர்த்து நிற்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இந்திய அரசு கவனத்தில் எடுக்காததாலேயே, தற்போது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கிருஷ்ணாவிடம் மஹிந்த ராஜபக்சவால் எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் "இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பரிந்துரையானது வெளிநாட்டு சக்திகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. அது இலங்கையின் நாடாளுமன்றில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்'' எனவும் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இது இந்தியாவை வெளிப்படையாக எதிர்க்கின்ற செயலாகும்.
எனவே, இலங்கை தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மீளாய்வு செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டது.
இந்த மாதத்தின் இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளுமா? பந்து இப்போது புதுடில்லியின் அரங்கிலேயே உள்ளது.
"தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

Geen opmerkingen:

Een reactie posten