உலக நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருகின்றது.சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரான றொபேட் ஓ பிளேக் கொழும்பில் தான் பணியாற்றிய காலப்பகுதியில் தனது தூதரகம் பெற்றுக் கொண்ட சில இரகசியத் தகவல்களை தனது அரசாங்கத் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தார். இது தொடர்பில் மேலும் சில இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய கே.கணேஸ் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரமான சிறீ ரங்கா ஜெயரட்ணம் ஆகியோரால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்ட இரகசியக் குறிப்பொன்றை மே 17, 2007 அன்று பிளேக், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளடங்கலாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் இராணுவத் தளபதிகள் விரும்புவதாக கணேஸ், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் தெரிவித்திருந்ததாக அவ் இரகசியக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ் மாவட்ட இராணுவத் தளபதிகளுடன் கணேஸ் மேற்கொண்ட சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயம் என்றோ அல்லது கணேஸ் யாழ்ப்பாண சூழலை கருத்திற்கொண்டு சொந்தமாக மேற்கொண்ட ஆய்வின் முடிவாக வெளிவந்த தகவல் என்பதையோ இவ் இரகசியக் குறிப்பு தெளிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட துணை ஆயுதக் குழுக்களை வெளிப்படையாகப் பயன்படுத்துகின்ற கொழும்பு இராணுவத்தின் இந்நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என பிளேக் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தின் போது துணை ஆயுதக் குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் தனது சில நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தியமையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா உள்ளடங்கலாக சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் சிலவற்றில் துணை ஆயுதக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முழு அதிகாரமும் பொறுப்பும் துணை ஆயுதக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதிகள் விரும்புகின்றனர் என்ற தகவலை அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய கணேஸ் அதனை தானாக ஊகித்து, ஆராய்ந்து, தனது அறிவுக்கு எட்டியவாறு தெரிவித்தாரா அல்லது சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இவ்வாறான தகவலைத் தெரிவித்தாரா என்பதை பிளேக்கின் இரகசியத் தகவலைக் கொண்டு நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் என சந்திரசிறிக்கு பாதுகாப்பு அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாக சந்திரசிறி தன்னிடம் குறிப்பிட்டதாக அமெரிக்கத் தூதரான பிளேக் தனது இரகசியக் குறிப்பில் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கமானது துணை ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவியை மேற்கொள்கின்றது என்ற தகவலையும் அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய பிளேக் தனது இராஜாங்கச் செயலருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். துணை ஆயுதக் குழுக்களுக்கு அதிபர் குமாரதுங்கவின் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதாகவும், ஆனால் இக்குழுக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இவர்களுக்கான நிதியை ராஜபக்ச அரசாங்கம் வழங்க மறுத்ததாகவும் சிறீ ரங்கா ஜெயரட்ணம் தெரிவித்த தகவலையும் பிளேக் தனது இரகசிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலாக தமிழ் வர்த்தகர்களிடம் நிதியைத் திரட்டுமாறு துணை ஆயுதக் குழுக்களிடம் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டதாக ரங்கா, பிளேக்கிடம் எடுத்துக் கூறியிருந்தார். சிறீ ரங்காவால் கூறப்பட்ட தகவலுக்கும் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்றவற்றுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என்பதை பிளேக் ஆராய்ந்தறிந்து கொண்டதாகவும், கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்ட செய்திகளையும் பிளேக் உறுதிப்படுத்திக் கொண்டார். சிறீ ரங்காவால் அமெரிக்கத் தூதரான பிளேக்கிடம் எடுத்துக் கூறப்பட்ட இரகசியத் தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சாதகமான எந்தவொரு வழிமுறைகளும் காணப்படவில்லை. இருப்பினும், விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய கருணா மீளவும் சிறிலங்காவுக்கு திரும்பி வந்ததன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக தூதுவரான பிளேக் தொடர்ச்சியாக ஆராய்ந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா 2004 ல் வெளியேறியதிலிருந்து, சிறிலங்காவில் செயற்படும் முதன்மையான துணை ஆயுதக் குழுக்களில் கருணா குழுவும் ஒன்று என்பதை பிளேக் உறுதிபடத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசாங்கத்தின் விருந்தாளியாக கருணா இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் கூட, சிறிலங்காவிலிருந்த தனது காடையர் குழுவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும் பிளேக் மேலும் குறிப்பிட்டுள்ளார். கருணாவால் தனது காடையர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மிகப் பலமான இராணுவ மூலோபாயங்கள் சிறிலங்கா அரசாங்காப் பாதுகாப்புடனேயே மேற்கொள்ளப்பட்டதாக பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகவல்கள் ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியன என்பதை சிறீ ரங்கா தெரிந்து கொண்டும் அவர்கள் தொடர்பான தகவல்கள் பலவற்றை அவர் அமெரிக்கத் தூதருக்கு வழங்கியிருந்த போதிலும் சிறீ ரங்கா ஜெயரட்ணம், ராஜபக்ச குடும்பத்துடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இராணுவ இரகசியங்களை, அறிவுறுத்தல்களை பிளேக்கிடம் வெளிப்படுத்தியமைக்காகவே தற்போது கைதுசெய்யப்பட்டு, தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டுள்ளதாக பலர் நம்புகின்றனர். எவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கமானது இவ்வாறான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை தொடர்ந்தும் ஏற்க மறுப்பதால், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல முரண்பாடான இரகசியச் செய்திகள் வெளிப்படுத்தப்படும் என்பதையே இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் சுட்டி நிற்கின்றன. யுத்தத்ததை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தொடர்பில், பல்வேறு நடவடிக்கைகள் மீது அமெரிக்கா நெருக்கமான கண்காணிப்பை வைத்திருந்ததுடன், இவை தொடர்பான பல்வேறு இரகசியக் குறிப்புக்களையும் கொண்டுள்ளது என்பது தற்போது தெளிவாகின்றது. ராஜபக்ச அரசாங்கம் மீது அதன் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் பொருளாதார குறிக்கோள்களை அடைந்து கொள்வது தொடர்பிலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் கடந்த காலத்தில் மெதுவாக இருந்தபோதிலும் தற்போது படிப்படியாக அதிகரித்துச் செல்வதையே இவ்வாறான செய்திகள் எடுத்துக் கூறுகின்றன. செய்தி வழிமூலம்: The Sunday Leader மொழியாக்கம்: நித்தியபாரதி http://www.manithan.com/view-2012022116517.html |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 22 februari 2012
இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் !!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten