2004 மார்ச் 3ஆம் திகதி ஒரு புதன்கிழமை….
அன்று காலை 9மணியளவில் மண்முனைதுறை Ferry மூலம் மறுகரையை அடைந்த போது நகருக்கு வருவதற்காக நின்ற முனைக்காட்டைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். ஊருக்குள்ள கொஞ்ச பிரச்சினை போல கிடக்கு…. கல்யாணத்திற்கு சமைச்சபடி எல்லாம் அரைகுறையாக்கிடக்கு, கௌசல்யனை காணயில்லையாம்…கூறியவர் Ferry புறப்படுவதற்கு தயாரானபோது அவசரமாக அதில் ஏறிக்கொண்டார்.
அன்று விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனுக்கு கொக்கட்டிச்சோலை கோவிலில் கல்யாணம் நடக்க இருந்தது. நான் தமிழ்அலை அலுவலகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கிய போது அலுவலக வாசலிலும், வெளியிலும் ஊழியர்கள் கூட்டமாக கதைத்து கொண்டிருந்தார்கள். நான் போனதும் அனைவரும் உள்ளே சென்றுவிட்டார்கள்.
அங்கு பணியாற்றுபவர்களில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பாக பணியாற்றும் இளைஞர் என்னோடு நட்பாக பழகுபவர். நான் போனதும் அவர் சொன்னார். அண்ணை பிரச்சினை பெரிய அளவில போகுது. கௌசல்யன் வன்னிக்கு போய்விட்டார். கல்யாணம் நின்று போச்சு. இயக்கத்திற்குள்ள பெரிய பிரச்சினை போல கிடக்கு. பெரிய பதட்டமாக இருக்கு. போராளிகள் எல்லாம் குழப்பி போய் இருக்கிறாங்கள் என்றான். இண்டைக்கு பேப்பர் அடிக்கலாமோ தெரியாது என்றான். அது ஒன்றும் இல்லை. பேப்பர் அடிக்கிறதுதான். நீங்கள் வேலையை செய்யுங்கோ என சொல்லிவிட்டு நான் வேலையை ஆரம்பித்தேன்.
கணணிப்பிரிவில் வேலை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் போராளிகள். அவர்களும் பதற்றத்துடன் இருப்பதை அவதானித்தேன். இதுகளைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நீங்கள் வேலையை செய்யுங்கோ என அவர்களுக்கு நான் கூறிய போதிலும் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியாக இருந்தது.
முதல்நாள் செவ்வாய்கிழமை நண்பகல் தளபதிகள் முக்கிய பொறுப்பாளர்களை தரவைக்கு அழைத்த கருணா இனிமேல் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை பிரிவு தனியாகவே இயங்கும். வன்னியோடு நீங்கள் யாரும் தொடர்பு வைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
மறுநாள் திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த கௌசல்யன் யாருக்கும் சொல்லாமல் வன்னிக்கு சென்றுவிடுவதென தீர்மானித்தார். அவருடன் தளபதி பிரபாவும் இணைந்து கொண்டார். ஏனையவர்களுக்கு கூறினால் தான் கருணாவிடம் மாட்டுப்பட்டு விடுவேன் என்ற அச்சத்தில் ஏனைய தளபதிகளுக்கு சொல்லாமல் அம்பாறை ஊடாக வன்னிக்கு புறப்பட்டனர்.அதேநேரம் மட்டக்களப்பு நகர அரசியல்துறை பொறுப்பாளர் சேனாதியும், அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் குயிலின்பனையும் கௌல்யன் வாகரைக்கு கல்யாணத்திற்காக இறால் வாங்குவதற்கு அனுப்பியிருந்தார். கௌசல்யன் மட்டக்களப்பு எல்லையை தாண்டியதும் சேனாதிக்கும் குயிலின்பனுக்கும் இறால்வாங்க தேவையில்லை உடனடியாக வன்னிக்கு வாருங்கள் என தகவல் அனுப்பினார்.
புதன்கிழமை நண்பகல் அளவில் படுவான்கரை பகுதியில் இந்த பிரச்சினை தெரிய ஆரம்பித்து விட்டது. கௌசல்யனை காணவில்லை. பிரபாவை காணவில்லை, சேனாதியை குயிலின்பனை காணவில்லை என ஒவ்வொரு கதையாக வந்து கொண்டிருந்தது. மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அலுவலக தொலைபேசிகளும் பேச மறுத்தன. ஏனைய தளபதிகள் வன்னிக்கு செல்லாதவாறு அனைவருக்கும் கருணா தனக்கு கீழ் இருந்த போராளிகளை பாதுகாப்புக்கு அமர்த்தினார்.
கருணாவுடன் இருந்த பல தளபதிகள் கௌசல்யன், ரமேஷ் போன்றவர்களிடம் கோபத்துடன் இருந்ததாக பின்னர் அறிந்தேன். தங்களுக்கு தெரியாமல் ஓடிவிட்டார்களே என. பெரும்பாலானவர்களுக்கு கருணாவிடமிருந்து தப்பி செல்ல முடியாத நிலையிலேயே கருணாவுடன் நிற்க வேண்டிய சூழ்நிலை கைதியானார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
வன்னிக்கும் படுவான்கரைக்குமான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. வன்னியிலிருந்து தமிழ்செல்வன், தயாமாஸ்ரர் ஆகியோர் தமிழ்அலை அலுவலகத்திற்கே தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர்.
கௌசல்யன், பிரபா ஆகியோர் வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று வன்னியிலிருந்து தமிழ்செல்வன் சொன்னார். இந்த விடயம் கொழும்பில் உள்ள சில பத்திரிகையாளர்களுக்கும் மட்டக்களப்பிலிருந்த பத்திரிகையாளர்களுக்கும் எட்டிவிட்டது. தமிழ்அலை பத்திரிகை அலுவலகத்தின் தொலைபேசி ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது. அவர்களுக்கு பதிலளிப்பதே எனக்கு பெரும் பாடாக இருந்தது.
கொழும்பிலிருந்து சிவராம் தொலைபேசி எடுத்தான். நிலைமையை சொன்னேன். நாளை நான் மட்டக்களப்புக்கு வந்துவிடுவேன் என்றான். மட்டக்களப்பு நகரிலிருந்து நடேசன், தவராசா ஆகியோர் தொலைபேசி எடுத்தார்கள். நடேசனைப்பொறுத்தவரை தான் செய்தியை எப்படியாவது முந்திக்கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வம். கொஞ்சம் பொறுங்கள்.. எப்படியும் பிரச்சினையை தீர்த்து விடுவார்கள். இந்த செய்திகள் வெளியில் வந்தால் அந்த முயற்சிகள் எல்லாம் கெட்டுவிடும் என சொன்னேன். வன்னியிலிருந்தும் தமிழ்செல்வன் சொன்னார் இந்த செய்திகள் வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படியும் இதை சமாளித்து விடலாம் என்று.
மாலை முனைக்காடு மகாவித்தியாலயத்தில் படுவான்கரை மக்களுக்கு தமது நிலைப்பாட்டை சொல்வதற்காக பொதுமக்களுக்கான ஒரு கூட்டத்தை கூட்டுமாறு ரமேஷிற்கு கருணா உத்தரவிட்டிருந்தார். ரமேஷிற்கு முழுமையாக கருணாவின் நம்பிக்கைக்குரியவர்களே பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்தனர்.
தனக்கு பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போராளிகளை முனைக்காடு மகாவித்தியாலயத்தில் கூட்டத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் சற்று நேரத்தில் தான் கூட்டத்திற்கு வருகிறேன் என கூறிய ரமேஷ் வவுணதீவு ஊடாக யாருக்கும் தெரியாமல் வன்னிக்கு புறப்பட்டார். கூட்டத்திற்கு வந்தவர்கள் ரமேஷ் அங்கு வராததால் காத்திருந்து விட்டு கலைந்து சென்றனர். இது கூட அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
மாலை 4.30மணியளவில் ஏ.எவ்.பி செய்திக்கு கருணா வழங்கிய செவ்வி வெளியானது. கிழக்கில் விடுதலைப்புலிகள் தனது தலைமையில் இனி தனித்தே இயங்குவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தி தென்னிலங்கைக்கு தேனாக ஒலித்தது. சிங்கள ஊடகங்கள் எல்லாம் அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்தன.
மாலை 6மணியளவில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தமிழ்அலைக்கு வந்தார். முடிவு எடுத்தாச்சு. அறிக்கை தருவம். கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்அலைதான் செய்தியை சொல்ல வேணும். நாங்கள் ஏன் பிரிந்து இயங்கப்போகிறோம் என்ற காரணத்தை விளக்கி ஆசிரிய தலையங்கம் எழுதுங்கள் என சொல்லிவிட்டு போனார். அப்போதுதான் மிகப்பெரிய ஆபத்திற்குள் பொறிக்குள் சிக்கி கொண்டிருக்கிறேன் என உணர்ந்து கொண்டேன்.
கணணிப்பிரிவில் எனக்கு நம்பிக்கையான இருவரை வைத்துக்கொண்டு ஏனையவர்களை போகுமாறு அனுப்பிவிட்டேன்.
கௌசல்யன் வன்னிக்கு சென்றுவிட்டதால் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராக கரிகாலன் கருணாவால் அறிவிக்கப்பட்டார்.
இரவு 8மணி இருக்கும் கரிகாலன் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதையே தலைப்பு செய்தியாக போடவேண்டும் என்றும் ஏனைய ஊடகங்களுக்கு அனுப்புமாறும் கூறினார்கள். தாங்கள் ஏன் பிரிந்து போகப்போகிறோம் என்பதற்கான காரணங்களை அதில் கூறியிருந்தார்கள்.
சிங்கத்தின் குகைக்குள் சிக்கிவிட்ட ஆபத்தை உணர்ந்து கொண்டேன். அந்த அறிக்கையை போடாவிட்டால் நான் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முடியாது. போட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம். மனதில் மிகப்பெரிய போராட்டம்.
அப்போது மட்டக்களப்பு அம்பாறை துணைஅரசியல்துறை பொறுப்பாளர் கிரிஷன் வந்தான். அண்ணை அறிக்கை கிடைச்சதுதானே. அதை போடுங்கோ என்றான். இனி வன்னியோட ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இனி யாழ்ப்பாணம் வேற, நாங்கள் வேற. மேசையில் அடிச்சு சொன்னான். அம்மான் முடிவெடுத்திட்டார். இனி முடிவிலை மாற்றம் இல்லை. ஆவேசமாக கூறினான். கிரிஷன் ரென்சன்காரன் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.
இரவு 12மணியை தாண்டிய பின்னர் ஆசிரிய தலையங்கத்தையும், தலைப்புச்செய்தியையும் எழுதிக்கொடுத்தேன். கணணிப்பிரிவில் வேலை செய்தவர் ஓடிவந்து கேட்டார். அண்ணை அறிக்கையை போடயில்லையோ என்று. நான் எதுவுமே பேசவில்லை.
விடுதலைப்புலிகளுக்குள் எந்த பிளவும் இல்லை. தலைவர் பிரபாகரன் தலைமையில் செயற்படுவதாக உறுதி என்று தலைப்புச்செய்தியை போட்டிருந்தேன். ஆசிரிய தலையங்கமும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியே எழுதியிருந்தேன்.
ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து கொண்டு நான் செய்தது தவறு என்றே என் மனச்சாட்சி கூறியது. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். உண்மையை மறைப்பது ஊடக தர்மமும் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் சராசரி மனிதனாக சிந்தித்தால் நான் செய்தது சரி என்றே எனக்கு பட்டது. எப்படியாவது ஒரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினையை விடுதலைப்புலிகளின் தலைமை சமாளித்து விடும் என நம்பினேன்.
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும் தமிழ்அலை நாளை என்ன செய்தியை சொல்லப்போகிறது என கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி வெளிஉலகமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. பிளவு என்று வெளிப்படையாக சொல்லிவிட்டால் இணக்கப்பாட்டு முயற்சிகள் எல்லாமே சிதைந்து விடுமே என எண்ணினேன். பிளவு பற்றி பெரிதாக செய்தி போடவேண்டாம் என கொழும்பில் உள்ள தமிழ் ஊடகத்துறையில் இருந்தவர்களுக்கும் கூறினேன். அப்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த காரணத்தால் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது.
அதிகாலை 4.30மணிக்கு பத்திரிகை அச்சடித்து விநியோகத்திற்கு கொண்டு செல்ல தயாரான போது நான் மட்டக்களப்பு நகருக்கு புறப்பட்டேன். என்ன இண்டைக்கு நேரத்தோட வெளிக்கிட்டிட்டீங்க என அச்சகப்பகுதியில் வேலைசெய்த ஒருவர் கேட்டார். வழமையாக காலை 6மணிக்கு புறப்படும் நான் அன்று அதிகாலை 4.30மணிக்கே புறப்பட்டுவிட்டேன். அன்று வழமையை விட அதிக பத்திரிகையும் அடிக்கப்பட்டது.
காலை 6மணிக்கு பத்திரிகை கடைகளுக்கு சென்ற போதுதான் படுவான்கரையில் இருந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கோபம் அடைந்தார்கள். கரிகாலன் உட்பட பலரும் தமிழ்அலையை சூழ்ந்து கொண்டார்கள். சொன்னது என்ன செய்தது என்ன என கரிகாலன் கொதித்து போய் இருக்கிறார் என தமிழ்அலையில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு தெரிவித்தார்.
கரிகாலன், கிரிஷன், கொற்றவன் என பலரும் இங்க கோபத்தோட நிற்கிறார்கள். எங்க அவன் துரை போய்விட்டானா என கொதித்து போய் நிற்கிறார்கள். அண்ணை நீங்க வீட்டில நிக்காதயுங்கோ என தமிழ்அலையில் கணணிப்பிரிவில் வேலை செய்யும் நண்பர் எனக்கு சொன்னார். இராணுவகட்டுப்பாட்டு பிரதேசமான மட்டக்களப்பு நகரில் இருக்கும் என்னை இலகுவில் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற அசட்டு நம்பிக்கை எனக்கு.
தமிழ்அலையிலிருந்து கொற்றவன் எனது வீட்டிற்கு கோல் எடுத்திருந்தான். நான் அப்போது வீட்டில் இருக்கவில்லை. அண்ணை கொற்றவன்தான் இங்க பெரிய அட்டகாசம் காட்டுறான் என தமிழ்அலையில் உள்ளவர்கள் சொன்னார்கள்.
சுவார்ஸ்யமான விடயம் என்ன என்றால் கொற்றவனை எனக்கு தெரியாது. கருணா தப்பி சென்ற பின் கொற்றவன் போன்றவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள்.
பின்னர் ஒருநாள் கொக்கட்டிச்சோலையில் கௌசல்யனை சந்தித்த போது யாரடா அந்த கொற்றவன். அவன்தான் பெரிய அட்டகாசம் காட்டினாம் என நான் கேட்ட போது கௌசல்யன் சிரித்து கொண்டிருந்தான். அப்போது நான் நினைக்கிறேன் தவராசா, நிராஸ் ஆகியோரும் அந்த சந்தர்ப்பத்தில் இருந்திருக்க வேணும். கொஞ்சநேரத்தில் கௌசல்யன் சொன்னான். அண்ணை இதில் ஒருத்தன் நிண்டானே அவன்தான் கொற்றவன். நீங்கள் ஆரடா அந்த கொற்றவன் எண்டதும் வெளியில போய் விட்டான் என்றான்.
வியாழக்கிழமை காலையில் தமிழ்அலையில் வெளிவந்த தலைப்புச்செய்தியை மேற்கோள் காட்டி தமிழ்நெற் விடுதலைப்புலிகளுக்குள் பிளவு இல்லை என செய்தி வெளியிட்டது.
Batticaloa LTTE reiterates stand
[TamilNet, Thursday, 04 March 2004, 09:32 GMT]“We are functioning with commitment to our cause under the command of our national leader Veluppillai Pirapaharan and the guidance of commander Col. Karuna” a senior official of the LTTE in Batticaloa was quoted as saying in Thursday’s edition of the Thamil Alai, a regional daily published from Kokkaddicholai, a large village controlled by the Tigers 15 kilometres southwest of Batticaloa town.
“We did not take any decision to leave the LTTE and operate separately”, the official told Thamil Alai.
“Rumours of the LTTE breaking up have been spread systematicaly to cause panic and fear among the people”, LTTE sources close to Col. Karuna told Thamil Alai.
காலை 10மணியிருக்கும் சிவராம் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். நான் தமிழ்அலையில நிற்கிறன் என்றான். ஏன் அங்க நிக்கிறாய் கரிகாலன் ஆட்கள் கொதிப்பில நிற்கிறாங்கள் என்றேன். அது பிரச்சினை இல்லை. அம்மானை சந்திக்க போறன். சந்திச்சிட்டு வாறன் என்றான்.
வியாழக்கிழமை இரவு சிவராம் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு திரும்பியிருந்தான்.
வெள்ளிக்கிழமை காலையில் சிவராமை சந்தித்த போது நான் கருணாவை சந்திக்கவில்லை என்றான். பின்னர் வீரகேசரியில் கருணாவுக்கு எழுதிய கடிதத்திலும் கருணாவை தான் சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் கருணா தன்னை சந்திக்கவில்லை என்றும் எழுதியிருந்தான்.
ஆனால் விசுவும் கரிகாலனும் சிவராமை கருணாவிடம் அழைத்து சென்றதாக சிவராமுக்கு நெருக்கமான ஒருவர் பின்னர் சொன்னார். அதேபோல இரண்டாம் நாள் வியாழக்கிழமை மாலை கருணா வெளியிட்ட அறிக்கையை தயாரித்தில் சிவராமுக்கு பங்கு இருப்பதாகவும், கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சிவராம் மட்டக்களப்பை நேசித்தான். மட்டக்களப்பு சமூகத்தின் வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்டிருந்தான். அதனால் சிலவேளையில் சிவராம் பேசுவது பிரிவினைவாதம் அல்லது பிரதேசவாதம் என்று சிலர் எண்ணுவதுண்டு. என்னைப்பொறுத்தவரை சிவராமின் போக்கு நியாயமானது என்றே நான் இன்றும் நம்புகிறேன். அவன் தான் பிறந்த மண்ணை நேசித்தான். அதற்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலை நேசித்தான். அவன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும், சிவராம் தொடர்பாக எழுப்பபடும் கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்காமல் இருந்த போதிலும் நான் அவனை நம்புகிறேன்.அவன் மட்டக்களப்பு மக்களின் அறியாமையை, கண்டு கோபப்பட்டான். ஆளுமை மிக்க சமூகமாக வரவேண்டும் என மட்டக்களப்பு மடையனுகளே என உரிமையோடு திட்டினான்.
ஆனால் கருணா தான் பிரிந்து போகப்போகிறேன் என அறிவித்த பின் சிவராம் கருணாவை சந்தித்திருந்தால் ஏன் அதை எங்களுக்கு மறைக்க வேணும்? இந்த கேள்விக்கு எனக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை.
வியாழக்கிழமை காலையில் வேணுகோபால் உட்பட தமிழ்அலை ஊழியர்கள் வேலைக்கு சென்ற போது கருணாகுழுவின் கட்டுப்பாட்டில் அந்த அலுவலகம் முழுமையாக கொண்டு வரப்பட்டிருந்தது. கருணாகுழு மட்டக்களப்பை விட்டு தப்பி செல்லும் வரை 41நாட்களும் வேணுகோபால் உட்பட தமிழ்அலை பத்திரிகை ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டே பத்திரிகை அடிக்கப்பட்டது.
பத்திரிகை ஆசிரியர்களை சிறைவைத்து பத்திரிகை அடித்த வரலாறு 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவ காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினாலும் நிகழ்த்தப்பட்டது. விடுதலை என்ற பத்திரிகையை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் 1989 இறுதிகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அடித்தார்கள். முரசொலி பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிகையாளர்களை கடத்தி சென்று சிறைவைத்தே அவர்களை கொண்டு அப்பத்திரிகை அடிக்கப்பட்டது. அதில் சிக்கிய எனது அனுபவத்தை இன்னொரு பகுதியில் பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை தமிழ்அலை கருணாவின் அறிக்கையை தலைப்பு செய்தியாக தாங்கி வெளிவந்தது. அந்த அறிக்கையை பெரும்பாலான மட்டக்களப்பு மக்கள் நம்பினார்கள். அதன் பொய்மையை பின்னர் மட்டக்களப்பு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நான் சிவராமை சந்தித்த போது சிவராம் சொன்னான். நீ கொஞ்சம் தப்பிவிட்டாய். இல்லை எண்டால் மண்டையில போட்டிருப்பாங்கள் என்றான்.
கருணாவின் பிளவு களேபரம் நடந்து கொண்டிருந்த அதேவேளை 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் களேபரமும் நடந்து கொண்டிருந்தது.
வெள்ளிமாலை மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ராஜன் சத்தியமூர்த்தி, இராசநாயகம் போன்றவர்கள் கருணாவின் தலைமையில் நாம் செயற்படுவோம் என அக்கூட்டத்தில் பேசினர். யோசப் அண்ணன் பேசும் போது தலைவர் பிரபாகரன் தலைமையில் கருணாவின் வழிகாட்டலில் செயற்படுவோம் என்றார்.அக்கூட்டத்தில் பிளவின் தாக்கம் வெளிப்பட்டது. மக்களும் மிகவும் குழம்பிப்போய்தான் இருந்தார்கள். சிலர் கருணாவின் முடிவு சரி என்றார்கள்.
எல்லாமே குழப்பமாக இருந்தது. சனிக்கிழமை காலையில் கிளிநொச்சியில் பத்திரிகையாளர் மகாநாடு என அறிவித்திருந்தார்கள். நான், நடேசன், தவராசா, சிவராம் ஆகியோரும், சிவராமின் ஒரு வெள்ளைக்கார நண்பரும் வெள்ளி இரவு வானில் கிளிநொச்சிக்கு புறப்பட்டோம்.
அந்த பயணத்தில் கூட நாம் ஆபத்தை சந்தித்தோம். அந்த பயணத்தில் உயிராபத்திலிருந்து தப்பியது கூட ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான அனுபவம்தான். எங்களை காப்பாற்றிய அந்த புண்ணியவானும் இப்போது உயிரோடு இல்லை
Geen opmerkingen:
Een reactie posten