தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2012

இலங்கைக்கு ஐ.நாவில் நாள் குறித்தார் மரியா ஒற்றேரோ !


பூனையின் கழுத்தில் யார் மனியைக் கட்டுவது என்று திண்டாடுவதுபோல, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் பிரேரணை ஒன்று வர உள்ளது எனப் பல செய்திகள் அடிபட்டது. அதனை அமெரிக்கா கொண்டுவரும் இல்லையேல், பிரித்தானியா கொண்டுவரலாம் என்ற பேச்சுக்களும் பலமாக அடிபட்டது. இதைத் தரவி இது எப்போது கொண்டுவரப்படும் என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இன்றுடன் இதன் மர்மங்கள் கலைந்துபோனது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த உள்ளார் என்ற செய்தியும், அவரே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைப்பார் என்ற செய்திகளும் சற்று முன்னர் கசிந்துள்ளது. சிறிலங்கா அதிபர் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவின் உரை அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக கொண்டுவர இருக்கும் இப் பிரேரணைக்கு சுமார் 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அறியப்படுகிறது. இதில் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த அம்சங்கள் நிறைவேற்றப்படவேண்டும் எனக் கோரிக்கை முன்வைப்பதோடு மட்டுமல்லாது, தவறும் பட்சத்தில் கடுமையான பின்விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை செய்யப்படவும் உள்ளது. இது நடைபெறுமேயானால் இலங்கை அரசு சர்வதேசத்திடம் அடைந்த முதல் பாரிய தோல்வியாக இது கருதப்படும்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை பிரதிச் செயலாளர், மரியா ஒற்றேரோ சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். அவர் அதிபர் மகிந்த ராஜபக்ஷ, மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்திருந்தார். இலங்கை அரசானது அவரை திருப்த்திப்படுத்த பலவழிகளைக் கையாண்டது. இருப்பினும் அவர் அழுத்தம் திருத்தமாக தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Geen opmerkingen:

Een reactie posten