ஜெனீவாவில் என்ன நடக்கப்போகிறது? என்ற பல்லாயிரம் கேள்விகளுடன் சர்வதேசமும், தமிழ் மக்களும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற பொழுது வாய்ச்சொல் வீரரடி பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் வங்குரோத்தின் அடிமட்டத் தனத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது.

‘ஜெனீவா மாநாட்டில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்கள் தொடர்பில் அங்கு நேரடியாகவே முறையிடப்போகிறோம்’ என்று அறிக்கைகளை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியில் தனது நிலைப்பாட்டினை மூட்டை கட்டிவைத்துவிட்டு குழந்தைகளுக்கு நிலாச்சோறு காட்டும் பாணியில் இந்தியாவிற்குச் செல்வதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனீவா செல்ல வேண்டும், அங்கு தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தாமாகவே முன்வந்து இவ்வாறான ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தமை, வரவேற்கத் தக்கது என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது என்பது உண்மை தான்.

ஆனாலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் வீரவசனம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவசரமாகச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது “தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கோரியிருந்தார் அதனை நேரடியாகவே சம்பந்தன் மறுத்துவிட்டார்”. என்று ஊடகங்கள் விதம் விதமான செய்தித் தலைப்புக்களை வெளியிட்டிருந்தன.

அந்தச் சந்திப்பில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்ததை அவதானிக்க முடியும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையோ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையோ தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பு தொடர்பிலான செய்திகள் சில வாரங்களின் பின்னரோ அல்லது சில மாதங்களின் பின்னரோ தான் வெளித்தெரியவந்திருக்கும்.

ஆனால் இறுதியாக நடைபெற்ற சந்திப்பினை அடுத்து சம்பந்தன் – மஹிந்த சந்திப்புத் தொடர்பிலான செய்தியும், புகைப்படமும் உடனடியாகவே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் ஒரு முக்கியவிடயத்தினை சுட்டிக்காட்டலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்கின்ற போது புகைப்படப்பிடிப்பாளரையோ, ஊடகத்தினரையோ அழைத்துச் செல்ல அனுமதித்திருக்க வாய்ப்பே இல்லை. மிக மிக நெருக்கமாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட சம்பந்தர் – மஹிந்த சந்திப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் சம்பந்தர் – மஹிந்தர் சந்திப்பினை படம் பிடித்தது ஜனாதிபதி விசுவாசிகளாகவே இருக்கவேண்டும். அதனைவிடவும் இவ்வாறான ஒரு இறுக்கமான முடிவினை சம்பந்தன் அறிவிக்கும் போது அதற்கு வக்காளத்துவாங்கும் வகையில் புகைப்படத்தினை வெளியிடும் நிலையில் இலங்கையில் அரச ஜனநாயகம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் அன்று எழவில்லைத்தான். ஆனால் இன்று எழுந்திருக்கிறது.

அவசர சந்திப்பிற்கான அழைப்பினைவிடுத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கூட்டமைப்பின் தலைவரிடம் ஜெனீவாவில் நடைபெறப்போகும் கூட்டத் தொடரில் கூட்டமைப்பினை பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கின்றார். குறித்த கோரிக்கையினை அடுத்து உடனடியாகவே “தெரிவுக்குழு விடயம் தொடர்பிலான கதையும் கூடவே புகைப்படமும் வெளியாகியிருக்கின்றது என்ற முடிவினை எடுக்கவேண்டியதாகவிருக்கின்றது.

ஜெனீவாப் பயணம் இரத்தானமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் என்ன சொல்லப்படுகின்றது?

“தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது.  தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது”

வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறிப்பிடப்பட்டிருக்கின்ற பந்தியே முக்கியமான காரணமாக சம்பந்தனால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றமையால் அதனைக் கைவிடுவது போன்றவகையில் கருத்துச் சொல்லப்படுகின்றது. சில வாரங்களுக்குள்தான் கூட்டமைப்பினர் தாம் ஜெனீவா செல்லப் போவதாக ஊடகங்களுக்குக் கதை சொல்லியிருந்தனர். இன்று எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான எதிர்வு கூறல் மூத்த அரசியல் வாதி(!)களுக்கு அப்போது புரியவில்லையா? தீர்க்கதரிசனம் நிறைந்தவர்களாகவும் தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலைவர்களாகவும் சொல்லப்படுகின்றவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது அவர்களின் இன்னொரு முகத்தினை மக்களும் சர்வதேசமும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடாதா?

இதனைவிடவும் கூட்டமைப்பு எடுத்திருக்கின்ற அடுத்த கட்ட ஏமாற்று நாடகம் மிக வேதனை தருவதாகவே அமைந்திருக்கின்றது. ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியாவை வலியுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் சில நாட்களின் முன்னர் கூட்டமைப்பு கதைவிட்டிருக்கின்றது.

எங்கோ ஒரு மூலையில் கிரிக்கட் போட்டி நடைபெறும் போது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்திருந்து கைதட்டி, விசில் அடிக்கும் கூட்டத்துக்கு நிகரான நிலைப்பாட்டினையே கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. ஜெனீவாவில் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற பொழுது இந்தியாவில் நின்று கொண்டு எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இந்தியாவை முழுமையாக நம்பி நம்பியே அவர்களின் கடந்த காலங்கள் கடந்திருக்கின்றன. இந்தியாவின் பாராமுகத்தினாலேயே எமது தேசிய விடுதலைக் கனவும் சிதைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனியும் இந்தியாவை நம்பி எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?, இதனை விடவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாட்களில்  உடனடியான அழுத்தங்கள் உலக நாடுகளின் கதவுகளைத் தட்டும் என்ற கதையினை யாருக்குச் சொல்கிறார்கள்?

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவொரு அரசியலமைப்பு, கொள்கைவகுப்பு, தீர்மானிக்கும் அமைப்பு என பல்வேறு கட்டுக்கோப்புக்கள் இருக்கும். கூட்டமைப்பினைப் போன்று உடனடியாக ஒரு சிலர் தீர்மானம் எடுக்கும் நிலையில் ஏனைய நாடுகள் இருக்கப் போவதில்லை. கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இந்தியாவில் கூட்டமைப்பு ஒன்றுகூடியிருக்கின்றது. உடனடியாகவே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் உலக நாடுகளுக்கு இருக்கும் என்று அம்புலமாமா கதைவிடும் நடவடிக்கையினை அவர்கள் கைவிடவேண்டும்.

கூட்டமைப்பின் முடிவின் ஊடாக மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

நாங்கள் நாங்களாகவே இருப்போம். காலம் காலமாக நாங்கள் நாங்களாகவே இருந்தோம். நீங்களும் நீங்களாகவே இருங்கள். நாங்கள் இருக்கும் வரையில் நீங்கள் நினைப்பது எதுவும் நடந்துவிடப்போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இல்லை. எங்களுக்காகவே நீங்கள்.. தமிழன் கனவு.. கப்பல் ஏறி மிக நீண்டநாட்களாகிவிட்டன…என்று எண்ணும் நிலையிலேயே இன்று தமிழினம்.