சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட ஏ.எஸ்.பி.யிடம் விசாரணை
சிலாபத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த பொலிஸ் ஏ.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இரண்டு குழந்தைகளின் தந்தையான அன்டனி பொ்னாண்டோ வர்ணகுலசூரிய என்ற 35 வயது மீனவரே உயிரிழந்துள்ளார்.
வாள்கள், கத்திகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் மீனவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிலாபத்தில் இன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலாபம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மீனவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத் சென்றுள்ள மரணமானவரின் மனைவி இன்றைய தினம் நாடு திரும்பியதையடுத்து நாளை அன்டனி பெர்னாண்டோ வர்ணகுலசூரியவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இறுதிக் கிரியைகள் நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதை கண்டித்தும் துக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடனும் நகரில் கறுப்பு கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.
இதேவேளை, மீனவர்கள் தமது பகுதி கிராமசேவகரிடமிருந்து தாம் மீனவர் என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை பெற்றுக் கொள்வதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 25 ரூபா விலைக்கழிவுடன் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்ள முடியும் என சிலாபம் மஹாவெல்லையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten