தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு ஜேர்மனியை தளமாகக் கொண்ட Deutsche Welle's ஊடகத்தளத்தில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழுவிபரமாவது,
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது கொடுமை மிக்கது. யுத்தம் முடிவுற்று இரு ஆண்டுகளின் பின்னர் தற்போது சிறிலங்காவின் வடக்கில் சில அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கும்.
பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் இடையில் 30 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வந்ததன் பின்னர் தற்போது வடக்கில் வாழும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி சிறிதளவு தென்படுகின்றது. இப் போரில் 100,000 மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 300,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, வடக்கில் சுதந்திர தமிழ் தாய்நாட்டு உருவாக்குவது என்கின்ற புலிகளின் கனவை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னரே, அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக தொண்டர் அமைப்புக்களை யுத்த வலயப் பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியது.
கொடிய யுத்தத்தின் போது பாதிப்படைந்த மக்களுக்கு இத் தொண்டர் அமைப்புக்கள் தம்மாலான உதவிகளை மேற்கொள்ளத் தொடங்கின.
சிறிலங்காவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது சிறுமியாக இருந்த சுதாகரன் சாந்தகுமாரி தற்போது நான்கு பிள்ளைகளுக்கு தாயாவார். யுத்தம் இடம்பெற்ற போது இடப்பெயர்வுகள் பலவற்றைச் சந்தித்த போதிலும், யுத்த நடவடிக்கைகளுக்குள் அகப்பட்டுத் தவித்த தனது குடும்பத்தவர்களுக்கும், சமூகத்துக்கும் சாந்தகுமாரி ஆதரவாக இருந்துள்ளார். கொடிய யுத்தத்தின் நினைவுகளை சாந்தகுமாரி தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவாறு நினைவுகூர்ந்தார்.
"யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட ஒருநாள் குண்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்த போது நான் எனது குடும்பத்தவர்களுக்காக சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். குண்டுத் தாக்குதல்கள் மிக அருகில் கேட்டதால் நாங்கள் பதுங்குகுழிக்குள் ஓடினோம். மீளவும் திரும்பி வந்து பார்த்த போது நான் சமைத்த உணவில் இறந்தவர்களின் சிதறிய உடலங்கள் இருப்பதைக் கண்டேன். இதை மீள எண்ணிப்பார்ப்பதென்பது மிகவும் பயங்கரமானது" என சாந்தகுமாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அதாவது சாந்தகுமாரி தனது 39வது வயதில் மீளவும் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்த போது, யுத்தத்தின் அழிவுகளை அவர் பார்த்தார். இவருக்கு வெங்காயம், மிளகாய், அவரை, கோவா போன்றவற்றைப் பயிரிடுவதற்காக விதைகள் வழங்கப்பட்டன. தற்போது இப்பயிர்கள் பயன் தருவதால் இவை சாந்தகுமாரியின் குடும்பத்தவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமாக இருப்பதுடன், எஞ்சுகின்ற மரக்கறிகளை சந்தையில் விற்று சாந்தகுமாரியின் குடும்பம் பயன்பெறுகிறது.
யுத்தம் தொடரப்பட்ட காலத்தில் அரைவாசிப் பகுதியை லக்சி அபயசேகர யுத்த அரங்குக்கு அருகிலேயே கழித்துள்ளார். இவர் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பணியாளராவார். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியின் எல்லையிலேயே இவரது பணியகம் அமைந்துள்ளது.
"நான் இங்கே 18 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் இங்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளை நேரில் பார்த்து வருகிறேன். இங்கு எவ்வளவு விரைவாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பார்த்து நான் வியப்படைந்துள்ளேன். வழமையாக யுத்தத்தின் பாதிப்புக்களைச் சுமந்து தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வரும் மக்கள் முதலில் தற்காலிக கொட்டகைகளிலேயே தமது வாழ்வை ஆரம்பிக்கின்றனர். ஆனால் இந்தத் தடவை இந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது" என லக்சி அபயசேகர தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் அழிவுகளிலிருந்து சிறிலங்காவின் வடபகுதி தற்போது மீளெழுந்து வருகிறது. அதாவது இங்கே புதிய வீதிகள், கட்டடங்கள் என்பன கட்டப்படுகின்றன. தேசிய மீளிணக்கப்பாடு தொடர்பாகவும், புலிகளை அழித்ததை கொண்டாடும் முகமாகவும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகள் சிறிலங்காவின் வடபகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
ஆனாலும் சிறிலங்கா அரசாங்கமானது தனது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு மறுத்துவருவதுடன், தனது இராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைப்பதுடன், அவர்களை யுத்த கதாநாயகர்களாக போற்றிப் புகழ்ந்து வருகின்றது.
சிறிலங்காவின் வடபகுதியில் புத்த விகாரைகள் புதிதாக முளைவிடத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் புத்த பிக்குகள் இராணுவத்தின் 'மனிதாபிமான' நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதுடன், தமது ஆசிகளை கட்டளை அதிகாரிக்கு வழங்கியும் வருகின்றனர்.
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
http://www.dw.de/dw/article/0,,15711916,00.html
Geen opmerkingen:
Een reactie posten