இன்று ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்களும் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்களும் ஒன்றாக உங்கள் முன்னால் நிற்கின்றோம். ஆயுதப் போராட்டத்தைச் சேர்ந்தவர்கள் அது செல்வமாக இருக்கலாம் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரனாக இருக்கலாம். அல்லது சிவசக்தி ஆனந்தனாக இருக்கலாம். வினோவாகா இருக்கலாம் ஏன் நானாகக்கூட இருக்கலாம். ஆயுதப் போராட்டத்தில் எங்களை இணைத்துக் கொண்டபோது எந்தச் சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தில் அமர்வோம் என்றோ தேர்தலில் நிற்போம் என்றோ கனவிலும் நினைக்கவில்லை. செல்வம் போன்றவர்கள் அப்பொழுது க.பொ.த. சாதாரண தரத்தில் படித்துக்கொண்டிருந்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது கல்வியைக் கைவிட்டு தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதற்குத் தயாராக ஆயுதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக கொண்டார்கள். சேனாதி அண்ணன் 1960களிலேயே மிகமிக இளைஞனாக கல்வியைத் துறந்து இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரை நாம் மிதவாதி என்றும் எடுக்க இயலாது
ஆயுதப்போராளி என்றும் எடுக்க இயலாது. அவர் இரண்டு பக்கத்திற்கும் சேர்ந்தவர். அதைப் போன்றே சங்கரி அண்ணன் அவர்கள் ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மக்களின் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சம்பந்தர் அண்ணன் 1961 சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு மறியலுக்குச் சென்றவர். கோமாகமவில் தடுப்புக்காவலில் இருந்தவர்கள். ஆகவே அவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் உயிரைக் கொடுப்பதற்குத் தயாராகவே வந்தார்கள். அவர்களும் சமாதானப் பாதையிலே சாதவீகப் போராட்டங்களிலே தந்தை செல்வா,ஜிஜி பொன்னம்பலம் ஆகியோரின் அடியொற்றி; சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீரக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றோம். ஆனந்தன் கூறியதைப்போன்று நான் இங்கு மீண்டும் கூறுகின்றேன் 'நாங்கள் ஒன்றுபட்டிருக்கின்றோம். மக்களாகிய நீங்களும் ஒன்று பட்டிருக்கின்றீர்கள். இந்த ஐக்கியம் மேலும் வலுப்பெற வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல எம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளியில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆயுதபலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலமாகும். இதனை நாம் கட்டிக்காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten