கருணா தரப்பிடமிருந்து முதலாவது அறிக்கை கரிகாலன் கையொப்பம் இட்டு மார்ச் 3ஆம் திகதி இரவு புதன்கிழமை வெளியிட்டிருந்தார். இரண்டாவது அறிக்கை 04ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கருணா கையொப்பம் இட்டு வெளியிட்டிருந்தார்.முதலாவது அறிக்கையில் தாங்கள் ஏன் தனியாக இயங்கப்போகிறோம் என்பதை தெரிவித்திருந்தார்கள். கிழக்கில் உள்ள 2ஆயிரம் போராளிகளை தலைவர் வன்னிக்கு தருமாறு கேட்டிருக்கிறார். மட்டக்களப்பு போராளிகளை வன்னிக்கு அனுப்ப முடியாது. கிழக்கை தாம் காப்பாற்ற வேண்டும் என கரிகாலன் கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
4ஆம் திகதி இரவு கருணா கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கையில் அது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே எழுதப்பட்டிருந்தது. கிழக்கில் கருணா தலைமையில் நேரடியாக பிரபாகரன் கீழ் இயங்குவது என்று தீர்மானித்திருப்பதாகவும், அது தவிர நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி, புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோரை அவர்களின் பொறுப்புகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த இரண்டு அறிக்கைகளிலுமே முரண்பாடுகள் காணப்பட்டன. இவர்களின் பிளவுக்கு இரண்டு அறிக்கையில் கூறப்பட்டவற்றில் எது காரணமாக இருக்கும் என மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான மக்களிடம் குழப்பம் நிலவியது.அதற்கு அப்பால் இந்த பிளவுகள் குழப்பங்களுக்கு அவர்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கையிலும் குறிப்பிட்ட விடயங்கள் காரணமல்ல. உண்மையான காரணம் வேறு என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த பிளவுக்கு உண்மையான
காரணம் கம்சனின் பிரச்சினைதான். யார் இந்த கம்சன்? அது பாரதக்கதை போன்றது தான். சிக்கலுக்குரிய கதையும் கூட.
மார்ச் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகர் ஒரு வித பதற்றமாக காணப்பட்டது.
கருணாவின் பிளவுக்கு பிரதேசவாதம் தான் காரணம் என சிலர் சொல்வதுண்டு. சிலர் பிரிவினை வாதத்திற்கும் பிரதேசவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் அர்த்தம் புரியாமல் பேசுவதுண்டு.
பிரதேசவாதம் என்பது தன்னுடைய பிரதேசத்தை முன்னிலைப்படுத்தும், அல்லது அதனை தனித்துவப்படுத்துவதற்காக செய்யப்படும் வாதமே பிரதேசவாதம். ஓவ்வொருவருக்கும் தன்னுடைய பிரதேசம் மீதான பற்றும் அதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற வாதமும் இருப்பது எந்த வகையிலும் தவறில்லை. தன்னுடைய இனத்திற்காக பேச வேண்டியது ஒவ்வொருக்கும் எவ்வளவு கடமை இருக்கிறதோ அது போல தன்னுடைய பிரதேசத்திற்காக தன்னுடைய தாய் நாட்டிற்காக அதன் விடுதலைக்காக பேசுவதில் அல்லது செயற்படுவதில் தவறில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் தன்னுடைய பிரதேசம் பற்றிய பற்றும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு பிரதேச பற்று இருப்பவனுக்குதான் இனத்தின் மீது பற்று வரும், தன் இனத்தின் விடுதலை மீது ஆர்வம் வரும். தமிழன் என்ற தனித்துவத்திற்காகவும், விடுதலைக்காகவும் செயற்படுபனை இனப்பற்றாளன் என்கிறோம். அது போல தன்னுடைய பிரதேசத்தின் மீது பற்றுறுதியோடு செயற்படுவதும் தவறில்லை. எனவே பிரதேசவாதம் தவறே இல்லை. பிரதேசவாதம் என்பது அபத்தமான விடயம் அல்ல. அது போற்றுதற்குரியது. ஓவ்வொருவரிடமும் பிரதேசவாதம் இருக்க வேண்டும்.
ஆனால் கருணா பேசியது பிரதேசவாதம் அல்ல. கருணா பேசியது பிரிவினை வாதம், தன் தவறுகளை மறைப்பதற்காக மக்களை திசை திருப்பிய சந்தர்ப்பவாதம். இதை அறியாத சிலர் கருணா பிரதேசவாதம் பேசி விட்டான் என தலையில் அடித்துக்கொள்கிறார்கள். மட்டக்களப்பில் நல்லையா பிரதேசவாதம் பேசினார், தேவநாயகம் பிரதேசவாதம் பேசினார், இராசதுரை பிரதேசவாதம் பேசினார் இராசன் செல்வநாயகம் பிரதேசவாதம் பேசினார் என சிலர் சொல்வதுண்டு. இவர்கள் யாரும் பிரதேசவாதம் பேசவில்லை. இவர்கள் பேசியது சந்தர்ப்பவாதம், இவர்கள் யார்? பாமர மக்களிடம் தங்கள் சந்தரப்;பவாதத்தை ஏன் விதைத்தார்கள்? இது பற்றி பதிப்பில் வராத என் மனப்பதிவில் பின்னர் விரிவாக பார்ப்போம்.
இன்னொரு சுவார்சியமான விடயத்தையும் பின்னர் தனியாக சொல்ல வேண்டும் என எண்ணியிருக்கிறேன். மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிராக அல்லது தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் யாழ்ப்பாண தலைவர்களுக்கு எதிராக மிகக்கடுமையாக பிரசாரம் செய்பவர்கள் மட்டக்களப்பு நகரை சேர்ந்தவர்கள். முக்கியமாக புளியந்தீவை சேர்ந்தவர்கள். வேடிக்கை என்ன என்றால் புளியந்தீவில் உள்ள 99வீதமானவர்கள் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல. மட்டக்களப்பு நகர் என கூறப்படும் புளியந்தீவில் ஒரு வீதமானவர்கள் தான் பூர்வீகமாக மட்டக்களப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருபோதும் பிரிவினைவாத அல்லது சந்தர்ப்பவாத சகதிக்குள் சிக்கியது கிடையாது.
இந்த பிரிவினைவாதம், சந்தர்ப்பவாதம் மட்டக்களப்பில் யாரிடம் இருக்கிறது ? மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணிகளை வெளியேற்ற வேண்டும், வன்னியிலிருந்து யாழ்ப்பாணிகளை வெளியேற்ற வேண்டும் என மிகக்கடுமையாக பிரசாரம் செய்பவர்கள் யார் என்றால் உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் பேசியது பிரதேசவாதம் அல்ல. சந்தர்ப்பவாதம். அந்த சந்தர்ப்பவாதிகள் யார் என்பதை விரிவாக இன்னொரு பகுதியில் பார்ப்போம். அது சுவார்ச்சியமான பெரிய கதை. யாழ்ப்பாணத்தவர்கள் மீது மட்டக்களப்பின் பூர்வீக குடிமக்களுக்கு கோவம் இருந்தது என்பதையும் நாங்கள் மறுப்பதற்கில்லை. அதில் நியாயமும் இருந்தது. அது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம்.இது பல தமிழர்களுக்கு புரியாமல் போய்விட்டது. முக்கியமாக புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு இது புரிவதில்லை.
மட்டக்களப்பில் ஒரு புறம் பொதுத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல், மறுபுறம் கருணா தான் தனியாக பிரிந்து செயற்பட போவதாக வெளியிட்ட அறிவிப்பு, இன்னொரு புறம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு. இவ்வாறு மட்டக்களப்பில் அச்ச உணர்வு கலந்த அமைதி காணப்பட்டது.
நான்கு தளங்களில் இந்த பிளவின் பூகம்பம் வெடித்தது. முதலாவது இந்த அறிவிப்பை மட்டக்களப்பில் ஒரு அதிர்ச்சி தகவலாகத்தான் பலர் பார்த்தார்கள். மட்டக்களப்பில் இன்னொரு தரப்பினர் கருணா சொல்வதில் உண்மை இருக்குமோ என பேசிக்கொண்டார்கள்.
இன்னொரு தளம் வன்னி, அங்கு போராளிகள் மத்தியில், மக்கள் மத்தியில் ஒரு கவலை காணப்பட்டது. ஆனாலும் தலைவர் அதை பார்த்துக்கொள்வார் என பெரும்பாலான தமிழர்களிடம் காணப்பட்ட மனோ பாவம் காணப்பட்டது. வன்னியில் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிரான உணர்வுகளோ கோபமோ காணப்படவில்லை.
மூன்றாவது தளம் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்த ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகள். இந்த நாடுகளில் தான் ஒரு பிற்போக்குத்தனமான போக்கு காணப்பட்டது. கருணா பிரிந்து போகப்போகிறேன் என அறிவித்த செய்தி வெளிவந்த உடன் கிழக்கு மாகாண தமிழர்களை எதிரியாக துரோகிகளாக பார்க்கும் போக்கு பெரும்பாலான வடபகுதி தமிழர்களிடம் காணப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மக்களை துரோகிகள் என ஒதுக்கி வைக்கும் போக்கு காணப்பட்டது. இதற்கு சில ஊடகங்களும் வழி வகுத்தன. தொழிற்சாலைகளில், உணவு விடுதிகளில் என வேலைத்தலங்களில் பல வருடங்களாக ஒன்றாக பழகியவர்களை கூட அவர்கள் மட்டக்களப்பு என்ற காரணத்தால் நீங்கள் துரோகிகள் கருணாவின் ஆட்கள் என தூற்றி ஒதுக்கும் போக்குகளும் காணப்பட்டன. இதை நான் இலங்கையில் இருந்த போது மட்டக்களப்பை சேர்ந்த பலர் என்னிடம் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார்கள்.
மிக அன்னியோன்யமாக பழகியவர்களை கூட மட்டக்களப்பு என்ற காரணத்தால் அவர்களை தங்கள் கொண்டாட்டங்களிலிருந்து ஒதுக்கி வைத்த பல சம்பவங்களும் இடம்பெற்றதை நான் அறிவேன். நான் பின்னர் கனடாவுக்குவந்ததன் பின்னர் இது போன்ற பல சம்பவங்களை மட்டக்களப்பு மக்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இதை கேட்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் என்ற வகையில் வெட்கமும் வேதனையும் அடைந்திருக்கிறேன்.
நான்காவது தளம் தென்னிலங்கை சிங்களவர்கள். அதன் பிரதிபலிப்பை கருணாவின் பிளவின் பின்னர் ஏப்ரல் முதல்வாரத்தில் வென்னப்புவவில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் உணரமுடிந்தது. அவர்கள் மத்தியில் ஒரு வெற்றிகளிப்பு காணப்பட்டது. போரில் தமிழர்களை வெல்ல முடியாது திகைத்து நின்ற சிங்கள சமூகத்திற்கு இச்செய்தி மிக இனிப்பாக காணப்பட்டதை உணர முடிந்தது. அந்த கருத்தரங்கில் மட்டக்களப்பிலிருந்து சென்ற தமிழ் பத்திரிகையாளர்களுக்கும் அனுராதபுரம், கண்டி போன்ற இடங்களிலிருந்து வந்த சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் பலமாக இருந்தது. மட்டக்களப்பிலிருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கருணாவின் பிளவு முறியடிக்கப்படும் என சொன்னார்கள். சிங்கள ஊடகவியலாளர்கள் கருணாவை ஒரு ஹிரோவாக சித்தரித்து கொண்டிருந்தார்கள். முஸ்லீம் ஊடகவியலாளர்கள் எந்த பிரதிபலிப்பும் இன்றி இருந்தார்கள்.
இவ்வாறு நான்கு தளங்கள் வெவ்வேறு பிரதிபலிப்பை கொண்டிருக்க இன்னொரு தளம் எந்த பிரதிபலிப்போ கரிசனையோ அக்கறையோ அற்றிருந்தது. அது வேறுயாருமல்ல. யாழ். குடாநாட்டு மக்கள்தான். அவர்கள் இந்த கருணாவின் பிளவு பற்றி பெரிதாக பேசவும் இல்லை. குழம்பவும் இல்லை. புலம்பெயர் தமிழர்கள் துரோகி பட்டம் சூட்டியது போல மட்டக்களப்பு தமிழர்கள் மீது எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை. பொதுவாக யாழ்ப்பாண இரண்டாம்தர வர்க்கம் என அழைக்கப்படும் தரப்பு தமிழ் மக்களின் விடுதலை, போராட்டம், என்பதில் அக்கறை அற்று இருந்தது போல இந்த விடயத்திலும் அதை ஒரு செய்தியாக கேள்வி பட்டதோடு பிரதிபலிப்பு எதையும் காட்டவில்லை. ஏனெனில் கருணா பிளவின் பின்னர் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்திருக்கிறேன். இந்த பிளவு பற்றி வன்னியில் இருந்தவர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் அதை ஒரு செய்தியாக வாசித்து விட்டு ஏதோ நடக்கட்டும் என இருந்தார்கள்.
மட்டக்களப்பு நகரில் மார்ச் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காந்திசிலை சதுக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் யோசப் பரராசசிங்கத்தை தவிர ஏனைய 7 வேட்பாளர்களையும் கருணாவே தெரிவு செய்திருந்தார். கனகசபை, தங்கேஸ்வரி, ஜெயானந்தமூர்த்தி, இராசநாயகம், அரியநேத்திரன், ராசன் சத்தியமூர்த்தி, சத்தியநாதன், ஆகியோர் இந்த பிரச்சினை வெடிக்க முன்னர் கருணாவின் தெரிவிலேயே பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முடிந்ததும் வெள்ளி இரவு வான் ஒன்றில் நான், நடேசன், தவராசா, சிவராம் ஆகியோரும், சிவராமின் வெளிநாட்டு நண்பர் ஒருவரும் கிளிநொச்சிக்கு புறப்பட்டோம். வழமையாக வன்னிக்கு அல்லது கொழும்புக்கு நாம் எல்லோரும் சேர்ந்து வாகனத்தில் செல்லும் போது குதூகலம் இருக்கும். எங்கள் வழமையான பாட்டிகள் இருக்கும். ஆனால் அன்று எதுவுமே இல்லை. அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்ற ஏக்கம் நிறைந்த கவலை. முக்கியமாக எனக்கும் நடேசனுக்கும் இரட்டிப்பு கவலை. நாங்கள் புறப்பட்ட வெள்ளிஇரவுதான் யாழ்ப்பாண வர்த்தகர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆகியோரை மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு வந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது.யாழ்ப்பாண வர்த்தகர்களில் பலர் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களில் பலர் பல தலைமுறைகளாக மட்டக்களப்பில் வாழ்ந்தவர்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணமே தெரியாமல் இருந்தது.தமிழர்களாலேயே தமிழர்கள் வெளியேற்றப்படும் அவலம், தமிழர்களாலேயே தமிழர்கள் தாக்கப்படும் அவலம்,
வழமையாக எங்களிடம் காணப்படும் குதூகலம், கலகலப்பு எதுவுமே இல்லை. என்ன நடக்கப்போகிறதோ என்ற ஏக்கம், அச்சம், என கனக்கும் மனங்களுடன் கிளிநொச்சியை சென்றடைந்தோம். மட்டக்களப்பில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் இருந்த போதிலும் அதில் சிலர் கிளிநொச்சி பயணத்தை தவிர்த்திருந்தனர்.
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் பத்திரிகையாளர் மகாநாடு கூட்டப்பட்டிருந்தது. அங்கு சென்ற போது அங்கே மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு ஓடிவிட்டார் என சொல்லப்பட்ட கௌல்யன், சேனாதி, பிரபா, ரமேஷ், என பலரை கண்டோம்.இதற்கான ஏற்பாடுகளில் இளந்திரையன், ( மார்ஷல் ) ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் ஒரு போராளியை காட்டி இளந்திரையன் மட்டக்களப்பிலிருந்து சென்ற பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அண்ணை இவன்தான் சர்ச்சைக்குரிய கம்சன் என இளந்திரையன் சொன்னான்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா விலக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அறிவித்தார். தமிழ்செல்வனுடன் அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ரமேஷ், கௌசல்யன், ஜெயார்த்தன், பிரபா, என மட்டக்களப்பு தளபதிகளே இருந்தனர்.
பத்திரிகையாளர் மகாநாடு முடிந்ததும் மட்டக்களப்பு தளபதிகள் இளைந்திரையன் உட்பட மட்டக்களப்பு பத்திரிகையாளர்களிடம் நாங்கள் மட்டக்களப்புக்கு வருவோம் என உறுதியாக கூறினர். அன்று இரவு கிளிநொச்சியில் தங்கிவிட்டு காலையில் நாங்கள் புறப்பட தயாரானோம். அப்போது தயா மாஸ்ரரின் அலுவலகத்திற்கு வந்த தமிழ்செல்வன் அண்ணை கொஞ்சம் பொறுங்கோ, முக்கியமான ஒரு ஆள் வாறார். அவரை சந்திச்சிட்டு போங்கோ என தமிழ்செல்வன் சொல்லிவிட்டு வழமையான அவரின் சிரிப்பு வெளிப்பட்டது.யாராக இருக்கும் எமக்கு யோசனை,சற்றுநேரத்தில் அங்கு மட்டக்களப்பிலிருந்து கரிகாலன் வந்து சேர்ந்திருந்தார். கிளிநொச்சிக்கு கரிகாலன் வந்த உடன் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் இருந்த இடத்திற்கு கரிகாலனை அழைத்து வந்தார்கள். இரண்டு மூன்று தினங்களுக்கு முதல் மட்டக்களப்பில் இருந்த கரிகாலனை எனது மனம் எண்ணிப்பார்த்தது.
நான் எந்த சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை. கரிகாலனை அதற்கு பின்னரும் ஒருதடவை நான் சந்தித்திருக்கிறேன். அப்போதும் நான் அதுபற்றி எதுவும் பேசவில்லை. கருணாவிடம் இருக்கும் போது அவர்கள் சூழ்நிலையின் கைதியாக சில வேளைகளில் செயற்பட்டிருக்கலாம்.
ஞாயிறு பிற்பகல் வவுனியா நகரை சென்றடைந்தோம். வவுனியா நகரில் ஊடகவியலாளர் விவேகராசாவின் வீட்டில் சிறிது நேரம் தங்கி மட்டக்களப்பில் நிலமை எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தான் நேரடியாக தனது வீட்டிற்கு கொழும்புக்கு செல்வதாக சிவராம் கூறினான். மட்டக்களப்பில் நிலமை மிக மோசமாக இருப்பதாகவே பலரும் சொன்னார்கள். நீங்கள் கிளிநொச்சிக்கு சென்ற விடயம் இங்கு மட்டக்களப்பில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நீங்கள் இங்கு திரும்பி வருவது ஆபத்து என்று மட்டக்களப்பிலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார்.
சிவராம் இதைவிட பெரிதாக எமக்கு அச்சம் தரும் கதை ஒன்றை சொன்னான். நீங்கள் மட்டக்களப்புக்கு திரும்பி போவது நல்லதாக எனக்கு படவில்லை. என்ர உள்மனம் நீங்கள் போறது ஆபத்து என்றுதான் சொல்லுகிறது. இப்படித்தான் 1987ல் வாசுதேவா தலைமையில் புளொட் இயக்கத்தினர் கல்குடாவுக்கு போனபோது நீங்கள் போவது அவ்வளவு நல்லதல்ல என்று கூறினேன். வாசுதேவாவும் மற்றவர்களும் போனார்கள். அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு உணர்வுதான் எனக்கு இப்ப வருகிறது. நீங்கள் போறது அவ்வளவு நல்லதல்ல என சொல்லிவிட்டு சிவராம் கொழும்புக்கு புறப்பட்டு விட்டான்.
மனக்குழப்பம், அச்சம் இருந்த போதிலும் என்ன செய்வது மட்டக்களப்பிற்கு போய்தானே ஆகவேண்டும். நானும் நடேசனும், தவராசாவும், சாரதியும் வானில் மட்டக்களப்புக்கு புறப்பட்டோம்.வவுனியா மகாவித்தியாலயத்தை அடைந்த போது மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு வந்து தங்கி நிற்பதை கண்டோம். வேதாவும் இன்னும் சில ஆசிரியர்களும் மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். புனித மிக்கேல் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஜேம்ஸ் அவர்களும் வந்திருந்தார்.
எங்களைக் கண்டதும் மட்டக்களப்புக்கா போகிறீர்கள், கொஞ்சவேலை இருக்கு இல்லை என்றால் உங்களுடன் வந்து விடுவேன் என்றார் அருட்சகோதரர் ஜேம்ஸ். எங்களுக்கு தெய்வம் வந்து காப்பாற்றியது போல இருந்தது அருட்சகோதரர் ஜேம்ஸின் வார்த்தைகள். பரவாயில்லை உங்களின் வேலை முடித்து விட்டு வாருங்கள். நாங்கள் உங்களை எங்கள் வானில் அழைத்து செல்கிறோம் என்றோம்.
அருட்சகோதரருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி, எங்களுக்கு பல தடவை நன்றி சொன்னார். சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து அருட்சகோதரர் ஜேம்ஸையும் அழைத்து கொண்டு மட்டக்களப்புக்கு புறப்பட்டோம். பிறதர் நீங்கள் முன் சீற்றிலையே இருங்கோ என முன்னுக்கு இருத்தி விட்டு எங்களுக்கு நித்திரை வருகிறது. நாங்கள் பின் சீற்றில் படுக்கப்போகிறோம் என சொல்லிவிட்டு சாறனையும் உடுத்திக்கொண்டு போர்த்திக்கொண்டு படுத்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு நித்திரையே வரவில்லை. கிரான் சந்தியில் நின்று கருணாவின் ஆட்கள் வாகனங்களை சோதிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டார்கள், கிரானில் எங்கள் வாகனத்தை மறித்து சோதித்தால்… கற்பனையே பண்ண முடியாத அச்சமடைந்திருந்தோம்.பொலனறுவையை தாண்டியதும் அருட்சகோதரர் ஜேம்ஸிற்கு சொன்னோம். பிறதர் கிரானிலை வாகனத்தை நிறுத்தி பார்க்கிறார்களாம். அப்படி நிற்பாட்டினால் பின் சீற்றிலை எங்கட பெடியள்தான் படுக்கிறாங்கள் என்று சொல்லுங்கோ, ஊடகவியலாளர்கள் என்றதை சொல்லிப்போடாதையுங்கோ என சொன்னோம்.
அப்போதுதான் அவர் ஆபத்தான வான் ஒன்றில் ஏறிவிட்டேன் என சிந்தித்திருப்பார். கிரானில் அவர்கள் ஆயுதங்களுடன் நின்றார்கள். அருட்சகோதரர் வெள்ளை உடுப்புடன் அவர் இருந்ததை கண்டதும் பாதரா சரி சரி போங்கோ என்றான் ஒருவன். அந்த இடத்தை விட்டு வான் கடந்து வந்து விட்டது. அதன் பின்னர்தான் அருட்சகோதரர் ஜேம்ஸிற்கு சொன்னோம். பிறதர் நீங்கள் இல்லை என்றால் எங்களின் கதை இன்று முடிந்திருக்கும் என சொன்ன போதுதான் இவங்கள் ஏன் பல மணிநேரம் காத்திருந்திருந்து என்னை அழைத்து வந்தார்கள் என்பது அவருக்கு புரிந்திருக்கும். அன்று நாங்கள் தான் வாகனத்தில் வருகிறோம் என தெரிந்திருந்தால் அருட்சகோதரர் ஜேம்சும் எங்களுடன் மேலே அனுப்பபட்டிருப்பார். எங்களை காப்பாற்றுவதற்காக அவரை சிக்கலில் மாட்டவைத்து விட்டோமோ என்று பின்னர் குற்றஉணர்வோடு எண்ணி நான் கவலைப்பட்டதுண்டு.
நான் கனடாவுக்கு வந்த பின்னர் ஒருநாள் அருட்சகோதரர் ஜேம்சுடன் தொலைபேசியில் பேசினேன், நீங்கள் நாட்டை விட்டு போனது நல்லது. இருந்திருந்தால் ஆபத்துதான் என சொன்னார். சிறிது காலத்தின் பின்னர் அருட்சகோதரர் ஜேம்ஸ் புற்றுநோயினால் இறந்து விட்டார்.
இதேபோன்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் எங்களை ஒருவர் காப்பாற்றினார். அப்போது காப்பாற்றியது ஜேசுபிரான் அல்ல. அல்லாஹ் தான் எங்களை காப்பாற்றினார்
Geen opmerkingen:
Een reactie posten