தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2012

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவே முன்வைக்க தீர்மானம் !!


ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான  பிரேரணையை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடித்தது.
இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் அதனை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக ஜெனீவாவிலிருந்து ஆபிரிக்காவுக்கு நேற்று புறப்பட்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்ததாக அறியவந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
எனினும் இந்த விடயமானது அக்கிரமமான, அத்துமீறல் எனக்கூறி இக்குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று பெப்ரவரி 27ம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எனினும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கூட்டத்தொடரின் இறுதிநாட்களில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தொடருக்காக அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட்ட 50க்கு மேற்பட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் ஏற்கெனவே ஜெனீவாவிற்கு படையெடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten