இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர். இந்தச் சிறுவர் சிறுமியர் அரச நிறுவனங்களிலும், சிறுவர் இல்லங்களிலும் தஞ்சமடைய நேரிட்டது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகப் போகின்றது. எனினும் ஆதரவற்ற சிறுவர்கள் இன்னும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கும், பிரிந்து போன சிறுவர்களை குடும்பச் சூழலில் இணைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. இருப்பினும் சிறுவர் இல்லங்களில் சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களானதும், அவர்களது எதிர்காலம் என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. இத்தகைய நிலைமையிலேயே ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு சமூகம் ஒன்றிணைந்து இந்தத் திருமணத்தை நடத்தியிருக்கின்றது.
ஆதரவற்றவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும் இல்லங்களில் வளரும் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் சிறுவர் இல்லங்களை நம்பி, வளர்ந்து ஆளாகியிருப்பவர்களது வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன, அடுத்து என்ன செய்வது என்பது சமூகத்தின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றது. இது விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும் கருத்துக்கள் வந்துள்ளன. வவுனியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமண வைபமானது இந்த வகையில் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியானதாகவும், மனிதாபிமானத்துடன் இளைஞர்களைச் செயற்படுவதற்குத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றது என்றும் பல்தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். bbc. com |
Geen opmerkingen:
Een reactie posten