தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 februari 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில குறைபாடுகள் இருக்கின்றது!- அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோ [ பி.பி.சி ]!!


இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளில், பொறுப்புக்கூறல் குறித்து சில குறைபாடுகள் இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரசுத்துறையின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான சார்நிலைச் செயலரான மரியா ஒட்டேரோ கூறியுள்ளார்.
இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை இலங்கை விளக்குவதற்கு அதற்கு ஒரு வாய்ப்புத் தரக்கூடிய ஒரு தீர்மானத்தை தாம் மார்ச் மாதத்தில், ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
அத்தகைய தீர்மானம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கரிசனைகள் ஆகியவற்றுக்கும் வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளை பாராட்டியுள்ள ஒட்டேரோ அவர்கள், அதன் பரிந்துரைகளில், பொறுப்புக்கூறல் குறித்து சில குறைபாடுகள் இருக்கின்ற போதிலும், பல முக்கிய விடயங்களில் அது கவனம் செலுத்தியிருப்பதாகவும், தெரிவித்தார்.
அதேவேளை, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, இராணுவ மயமாக்கலை குறைப்பது மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் போன்ற விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழு கணிசமான பரிந்துரைகளை செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அது அமுல்படுத்தப்பட்டால், உண்மையான நல்லிணக்கம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகளை பலப்படுத்தல் ஆகியவற்றில் அது நல்ல பங்களிப்பை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்மிடம் கூறியுள்ளதாகவும் ஒட்டேரோ குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அமெரிக்கா ராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர். நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்தனர்
அமெரிக்காவி;ன் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் மற்றும் அமரிக்காவின் ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உதவிசெயலாளர் மாரியா ஒட்டேரா, ஆகியோர் இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இதனையடுத்து அமரிக்க ராஜதந்திரிகள் இருவரும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இதன்போது கருத்துரைத்த மாரியா ஒட்டேரா, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக அமரிக்காவின் நிலைப்பாட்டை வெளியிட்டார்.
அத்துடன் அந்த ஆணைக்குழு அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பி;ல் குறிப்பிடப்படாமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
அதேநேரம் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் அமரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில் செய்தியாளர்  சந்திப்பின் போது கருத்துரைத்த ரொபட் ஓ பிளெக், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவுகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின்  முன் சமர்ப்பிக்கலாம் என்றும் பிளெக் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten