அண்மையில் மண்டைதீவில் கடற்படையினர் வசம் இருந்த வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன. சொந்த வீடுகளில் மீண்டும் வசிக்கப் போகும் மகிழ்ச்சியில் மீளக் குடியமர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.இப்போது புலம்பத் தொடங்கி விட்டார்கள். குடியிருக்க ஆரம்பித்து ஒரு மாதம் கடந்தபோதும், அடிப்படைத் தேவைகள் எதுவும் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதே அவர்களின் புலம்பலுக்குக் காரணம். மீள்குடியமர்வு தமது வாழ்க்கையை இருந்ததிலும் மோசமான நிலைக்குத் தள்ளி விட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
புங்குடுதீவில் கிட்டத்தட்ட 60 வீடுகள் கடற்படையினரால் மீளளிக்கப்பட்டன. மிகவும் ஆடம்பரமாக, அமைச்சர், ஆளுநரின் வாக்குறுதிகளுடன் அவை கையளிக்கப்பட்டன. அவற்றில் கொண்டிருந்த நம்பிக்கையினால் மக்கள் தமக்கும் விடிவு கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தனர். அரையும் குறையுமாக இருந்த வீடுகளை ஒருவாறு பகுதியளவிலாவது திருத்திக் கொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களுடன் மீளக் குடியமர்ந்தனர்.
மலசலகூட வசதி, குடிநீர் வசதிகள் ஏதும் இல்லாதபோதும், அவை எல்லாம் உடன் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், வீட்டுக் கிணறுகளைப் படையினர் சுத்தம் செய்து தருவார்கள் என்றும் கூறப்பட்ட உறுதி மொழிகளை நம்பி மக்கள் மீளக் குடியமர்ந்தனர். இரண்டு மாதங்களாகியும் உறுதி மொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. வழக்கம் போலவே அவை காற்றில் பறக்கப்பட விடப்பட்டன.
கையளிக்கப்பட்ட 60 வீடுகளில் 10ற்கும் குறைவானவற்றில் மட்டுமே மலசலகூட வசதிகள் ஓரளவுக்காவது உள்ளன. இதனால் ஏனையோர் காலையில் அந்த வீடுகளுக்கு விழுந்தடித்து ஓட வேண்டியிருக்கின்றது. எமது காலைக் கடன்களுக்காக அடுத்த வீட்டாரைச் சிரமப்படுத்த வேண்டியுள்ளதை நினைக்கும் போது வாழ்க்கையே அருவருக்கிறது என்கிறார் மீளக் குடியமர்ந்த ஒருவர்.
குடிநீர்க் கிணறுகளோ, சுகாதார வசதிகளோ எதுவும் இல்லாத நிலையில் தம்மால் நாளாந்த வாழ்க்கையை நகர்த்த முடியாமல் உள்ளது என்கிறார்கள் மக்கள். வீதியும் மிகவும் மோசமாகவே காணப்படுகின்றது. குழாய் நீர் விநியோகம் இடம்பெறுகின்றது. ஆனால் அதற்கான குறிப்பிட்ட நேரகால வரையறை ஏதும் இல்லை.
விரும்பியபோது விரும்பிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தண்ணீர் திறந்திருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்காணிப்பதற்காகவே வீட்டுக்கு ஒருவரை நிறுத்த வேண்டியுள்ளது என்று நிலைமையை விளக்கினார் அங்கிருக்கும் பெண்மணி ஒருவர்.
மண்டைதீவில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் பொலிஸாருக்கு அனுப்பப்படும் தண்ணீரிலேயே தாங்களும் பங்கு போடுவதாகக் கூறும் மக்கள், அந்தத் தண்ணீர் அவர்களுக்கே போதாது. இருந்தாலும் எங்களது தேவையைக் கருத்தில் கொண்டு நல்ல மனதுடன் தமது தேவைகளையும் கட்டுப்படுத்தி எங்களுக்குத் தண்ணீர் வழங்கி உதவுகின்றார்கள் என்கின்றனர்.
எத்தனை நாட்களுக்குத்தான் அவர்களும் தமது தேவையை மட்டுப்படுத்தி எமக்கு உதவ முடியும்? இதுதான் மக்களை இன்று அச்சுறுத்தி நிற்கும் கேள்வி. இப்போது மீளக் குடியமரவிட்ட பேதுருவானவர் ஆலயப் பகுதியில், உண்மையில் பத்துக்கும் குறைவான வீடுகளே நல்ல நிலையில் உள்ளன. ஏனைய வீடுகளில் அநேகமானவற்றுக்குக் கூரையில்லை.
வேறு சில பகுதியளவில் உடைந்தும், கதவு, யன்னல் நிலைகள் இல்லாமலும், கிணறுகள் மூடப்பட்டும், மலசலகூடங்கள் இடிந்தும் காணப்படுகின்றன. பொதுவாக மீளக் குடியமர்வு இடம்பெற்ற பகுதிகளில் வசிக்கும் நிலைப்பாடும் இதுதான்.
உடைந்து கிடைக்கும் சில வீட்டு உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒரு தறப்பாளைத் தந்திருந்தால் கூட சேதமுற்ற கூரைப் பகுதியில் போட்டிருக்கிலாம். ஒரு அரச சார்பற்ற நிறுவனம் கூட எங்களை எட்டிப்பார்க்கவில்லை என்கிறார்கள்.
இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்த பலர் முழுமையாக இங்கு குடி வந்து விடவில்லை. ஆனால் அடிக்கடி வந்து போகின்றார்கள். வீட்டின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை.
இதனால் இரட்டைச் செலவுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். இப் பகுதிக்கு குடிதண்ணீர், மின்சாரம், சுகாதார வசதிகள் வந்து விட்டால் தாம் இங்கேயே வந்து விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
மின்சாரம் தருவதாகச் சொன்னார்கள். மின்சார சபையினர் ஒரு தடவை வந்து போயுள்ளனர். அதுவும் கிடைக்குமோ தெரியாது. எல்லோரும் வந்தார்கள், சொன்னார்கள், சென்றார்கள் என்றில்லாமல் வந்தார்கள், சொன்னார்கள், செய்தார்கள் என மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைக்கும் காலம் எப்போது வருமே? என்று அங்கலாய்க்கின்றார்கள் மக்கள்.
அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்காது, உங்களது வீடுகளில் நீங்கள் நம்மதியாக இருங்கள் என்று கூறி விட்டு வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? எனக் கேட்கும் மக்களுக்கு அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? |
Geen opmerkingen:
Een reactie posten