தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 februari 2012

சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்!!


விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த - சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர், பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள் உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.
இவர்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்க மறுத்து வருகிறது.

இந்தநிலையிலேயே பாலகுமாரன், யோகி ஆகியோர் போர் முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர ஒரு ஆண்டுக்கு முன்னர் கூறியிருந்தார்.

எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

எனினும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்பது பற்றியோ, அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியோ தகவல் வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.

பாலகுமாரன் பற்றி `டெக்கன் குரோனிக்கல்` செய்தியாளர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்திருந்த நிலையில் தான் `சிறிலங்கா` கார்டியன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலையிலும், லோறன்ஸ் திலகர் மனக்குழப்பத்தினால் தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலும் இருப்பதாகவும் `சிறிலங்கா கார்டியன்` தகவல் வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten