02 February, 2012 by admin
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழு(APPGT) பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் செவ்வாய்க் கிழமை 31.01.2012 மதியம் 12:00 மணியில் இருந்து மாலை 6:00 வரை நடத்திய கண்காட்சியை பார்வையிட்ட பின்னரே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
நிழல் வெளிநாட்டமைச்சர் டக்லஸ் அலெக்ஸாண்டர்(Douglas Alexzander) தென்கிழக்காசிய, தெற்காசிய, மற்றும் தூர கிழக்கிற்கான நிழல் வெளிநாட்டமைச்சர் கெரி மக்கார்தி (Kerry McCarthy) மற்றும் முன்னாள் பாதுகாப்பமைச்சர் லியாம் பொக்ஸ்(Liam Fox) ஆகியோர் உட்பட பிரித்தானியாவின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் வெளிஉறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதான ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் என்று நூற்றிக்கும் அதிகமானவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
�இங்கு காட்டப்பட்ட படங்கள் இதயத்தை சுக்கு நூறாக்குகின்றன� என்று பாராளுமன்ற உறுப்பினர் பட் மக்படேன் தனது கருத்தை கூறினார்.
இலங்கையில் அடக்குமுறையும் அநீதியும் இன்னமும் நிலவுவதை இந்த கண்காட்சி காட்டுவதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அட்ரியன் பெய்லி, அவை சர்வதேச விசாரணை மற்றும் செயற்பாட்டை வலியுறுத்துவதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஹல்போன் கருத்து தெரிவித்தபோது, இது ஒரு விசேடமான கண்காட்சி என்று குறிப்பிட்டதுடன் �தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். இலங்கை ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தை உலகம் நிறுத்த வேண்டும்� என்றார். இந்தக் கண்காட்சி, நீதியைப் பெறுவதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு தன்னை சபதம் செய்ய வைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரேசா பேர்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸ்சாண்டர்,இலங்கையில் இடம் பெற்ற போர்குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் அவசியத்தை இந்த கண்காட்சி புலப்படுத்துகிறது. இதனை மேற்கொள்வதற்கான ஒரு பொறுப்பு பிரித்தானியாவிற்கு இருக்கிறது� என்று குறிப்பிட்டார்.
கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக் டொநெல் �பலதசாப்த காலங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் மற்றும் அடக்குமுறைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த கண்காட்சி உதவுகிறது. நீதிக்காக தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற உரிமைகளை ஆதரிப்பதற்கு உலகம் முன்வர வேண்டும்� என்று கூறினார்.
தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் லீஸ்காட் கருத்து தெரிவிக்கையில் தொடர்ந்தும் நீதிக்காக தான் பாடுபடப்போவதாக கூறினார். தமிழ் சமூகத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் பின்பேர்க்இ 'ஒரு யூதனாக இருந்து கொண்டு, அதே விதமான நிகழ்வுகள் இலங்கையில் நடைபெறுவதை பார்க்கின்ற போது இது நடைபெறக் கூடாது என்று உலகத்தின் முன் அழுது சத்தமிட வேண்டும்� என்று தோன்றுவதாக கூறினார். �முறையான ஒரு ஐ.நா விசாரணையை நீங்கள் பெறுவீர்கள்� என்று நம்பிக்கை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் போல்அபோட், இது முன்னரேயே நடைபெறாமை ஒரு வெட்கக்கேடான விடயம் என்றார்.
இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலமை, பலதசாப்தங்களாக தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள அரசாங்கங்கள் முனனெடுத்த இனப்படுகொலை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஏன் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்காது என்பவற்றை விளக்குவதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இறுதி யுத்தம் நடைபெற்ற போது அங்கு நடை பெற்ற அவலங்களை சித்தரித்து ஈழத்து ஓவியர்கள் அங்கிருந்து அனுப்பியிருந்த எராளமான ஓவியங்கள், புகைப்படங்கள், இனப்படுகொலை விளக்கப் படங்கள் என்று பல்வேறுபட்ட காட்சிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் தமிழ்மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கெதிரான இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களினால் வெளியிடப்பட்டிருந்த பல்வேறுபட்ட படைப்புக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
யுத்தம் நடைபெற்ற போது இறுதிவரை அங்கிருந்து அவலங்களை கண்களால் பார்வையிட்ட சில தமிழ் மக்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.ராஜதந்திர மட்டங்களில் இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பில் அவர்களது மனச்சாட்சியை தட்டும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இத்தகைய கண்காட்சி நிகழ்வுகளை பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து நடத்த இருக்கிறது.
பிரித்தானிய தமிழர் பேரவை
Geen opmerkingen:
Een reactie posten