[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 03:25.37 AM GMT ]
இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக குழு ஒன்றை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள இந்தநிலையில் யார் துரோகி என்ற தலைப்பில் சண்டே லீடர் செய்திதாள் இன்று செய்தி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனின் அழைப்பை ஏற்றுள்ள அரசாங்கம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸுடன் குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள இந்தநிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் அமைச்சர் டியூ குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தில் அமெரிக்கா அரசாங்கத்துடன் இணங்கிச் செல்வது என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர வேறு வழியில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக சண்டேலீடர் தெரிவித்துள்ளது.
இதன்போது அமெரிக்கா 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டமை ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஐந்து மாணவர்களையும் விசேட அதிரடிப்படையினரே கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்
எனினும் துப்பாக்கி சன்னங்கள் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அது விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்திய சன்னங்கள் அல்ல என்று தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
எனவே இந்த சம்பவம் குறித்த நிபுணர்கள்pன் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் யார் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டுக்கு எதிரான துரோகிகள், டொலர்களுக்காக இந்த தகவல்களை அமரிக்காவுக்கு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த இடத்தில் துரோகி யார் என்று சண்டேலீடர் கேள்வி எழுப்பியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக்கை சந்தித்தபோது விசேட அதிரடிப்படையினரே ஐந்து மாணவர்களை கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்ததாக விக்கீலீக்ஸ் கசியவிட்டுள்ள செய்தியை இந்த இடத்தில் சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கையின் தரைப்படையினருக்கு மனித உரிமைகள் குறித்து தெளிவுகள் உள்ளன எனினும் கடற்படையினரே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ச, ரொபட் ஓ பிளெக்கிடம் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனிடம், இலங்கையின் அதிகாரிகள், தமது மகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் என்று எழுதிய ஆவணத்தில் கையெழுத்திட்டால் மாத்திரமே அவரது மகனின் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று அச்சுறுத்தியதை சண்டேலீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி கூறிய கருத்துக்கள் பொய்யானவை. அவர் ஒரு பொய்யர், துரோகி என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிபிசி ஹாட் டோக் நிகழ்ச்சியில் கூறியதை சண்டேலீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குழு அமெரிக்கா சென்று அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு குறித்து விளக்கமளிக்கும் போது வீக்கிலீக்ஸின் தகவல்களின்படி, பசில் ராஜபக்ஷ ஒரு பொய்யர். அவர் ஒரு துரோகி அவரை தூக்கிலிட வேண்டும் என்று கூறுமா? என்று சண்டேலீடர் கேள்வி எழுப்பியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten