தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 augustus 2011

மீண்டும் சமாதான தேவதையாக வலம் வரப் போகிறாரா சந்திரிகா?

[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 01:47.20 PM GMT ]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடந்த வாரம் நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரை நிகழ்த்திய போது வெளியிட்ட கருத்துகள் பலரையும் ஆச்சரியம் கொள்ளச் செய்தன. அதிகாரத்தில் இருக்கும் வரை தனது பிடியில் தீவிரமாக இருந்த அவர், இப்போது மேடையில் கண்ணீர் விடும் நிலைக்கு வந்திருக்கிறார்.
சனல்4 தொலைக்காட்சியில் ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர் தனது மகன் தொலைபேசியில் அழைத்து தன்னை ஒரு இலங்கையன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாகக் கூறியதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.
சந்திரிகாவின் இந்தக் கருத்து சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் பொய்யானது என்று அரசாங்கம் கூறி வருவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உறுதியாக்கியுள்ளது.
இந்த நிலையில்தான் சனல் 4 மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
புதிய வீடியோவில் கோத்தபாய ராஜபக்ஷவினதும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினதும் உத்தரவின் பேரிலேயே புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இரண்டு படையினர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அத்துடன் இறுதிப்போரில் தாம் கண்ணால் கண்ட காட்சிகளையும் அவர்கள் விபரித்துள்ளனர்.
படையினர் போரின் இறுதிக்கட்டத்தில் மிருகங்கள் போன்று நடந்து கொண்டதாக கூறியுள்ள அவர்களின் கருத்து கவனிக்கத்தக்கது. போரில் பங்கெடுத்த படையினர் என்று கூறி அவர்களின் விபரங்களை வெளியிடாமல் சனல் 4 தொலைக்காட்சி இந்த வாக்குமூலத்தை ஒளிபரப்பியுள்ளது.
இந்த வாக்குமூலம் சனல்4 ஏற்கனவே கூறிவந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இருக்கின்ற போதும், இலங்கை அரசாங்கம், இராணுவம் அதை நிராகரித்துள்ளன.
அரசாங்கம் சனல்4 வெளியிடும் அத்தனை போர்க்குற்ற ஆதாரங்களையும் போலியானது, பொய்யானது என்றே கூறிவருகிறது. ஆனால், அரசாங்கத்தின் இந்த நிராகரிப்பை உலகம் நம்புகிறதோ, இல்லையோ உள்நாட்டவர்களோ நம்பவில்லை என்பது தான் உண்மை.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரையும், அவரது குடும்பத்தினரையும் கூட நம்ப வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் உள்ளது. சந்திரிகா குமாரதுங்க ஒரு தேசம் என்ற வகையில் நாம் தோல்வியடைந்து விட்டோம் என்று கூறிய கருத்தின் ஆழத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
தவறுகளை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள சந்திரிகா, நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும், நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ந்து நிராகரிப்பது பிரச்சினைகளைத் தீர்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது நிச்சயம் சனல் 4 விவகாரமாகத் தான் இருக்க வேண்டும்.
சந்திரிகா சனல்4 ஆவணத்தை உறுதியாக நம்புகின்றார் என்ற நிலையில், இதனைப் பொய் என்றோ, போலியானதென்றோ அரசாங்கத்தினால் உலகை ஒருபோதும் நம்ப வைக்க முடியாது என்றே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.
சந்திரிகாவின் கருத்துகளை அரசாங்கம் செவிமடுக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் சந்திரிகா நிறைவேற்று அதிகாரத்தின் கடைசிக் கட்டத்தில் இருந்த போதே அவரது கருத்தை கேட்கும் ஒருவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கவில்லை.
இந்தநிலையில் போரை வென்றாலும், சமாதானத்தை வெற்றி கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பிக்கக் கூட இல்லை என்ற சந்திரிகாவின் கருத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்வாங்கிக் கொள்வாரா என்பது சந்தேகம் தான்.
சந்திரிகா குமாரதுங்க இந்த நினைவுப் பேருரையில் பல உண்மைகளை உடைத்துப் போட்டுள்ளார். கடந்த காலத் தவறுகளை ஏற்றுக் கொண்டுள்ளார். இது அவரது முதிர்ச்சியின் அடையாளமா அல்லது இன்னொரு அரசியல் எதிர்காலத்தை தேடிக் கொள்வதற்கான எத்தனிப்பா என்பது தெரியவில்லை.
வன்முறை, மோதல்களுக்கு வித்திட்டது 1956ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டமே என்ற கருத்தும், தமிழர்கள் மீதான வன்முறைகளே அவர்களை ஆயுதமேந்த வைத்தது என்ற கருத்தும், 1972, 78ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் தமிழரின் உரிமைகளை உறுதிப்படுத்தத் தவறி விட்டன என்ற கருத்தும் மிக முக்கியமானவை.
இவற்றில் கணிசமான தவறுகளுக்கு சந்திரிகாவும் அவர் குடும்பத்தினரும் காரணமாக இருந்துள்ளனர். சந்திரிகா குறிப்பிட்ட 1956ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் அவரது தந்தை பண்டாரநாயக்க தான்.
அவர் கூறிய 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தது சந்திரிகாவின் தாய் சிறிமாவோ அம்மையார் தான். ஏன் சந்திரிகாவுக்கும் கூட வன்முறைகள், மோதல்களில் ஏராளம் பங்கு உள்ளது.
சந்திரிகா ஜனாதிபதியாக வந்தபோது அவரைத் தலையில் தூக்கி வைக்காத குறையாக கொண்டாடாத தமிழர்கள் இல்லையென்றே சொல்லலாம். ஆனால், கடைசியில் அவரும் வழக்கமான சிங்களத் தலைமைகள் போன்றே மாறிக்கொண்டார்.
அதிகாரத்தில் இருக்கும் வரை அவர் சிங்களப் பேரினவாதத்தின் காவலர் போன்றே நடந்து கொண்டார். தமிழருக்கு எதிரான கொடிய போரை நடத்திய சந்திரிகா தனது காலத்தில் நிகழ்ந்த தவறுகளை வெளிப்படுத்தத் தவறியிருப்பது தான் அவரது நேர்மையீனத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
சந்திரிகாவின் காலத்தில் நிகழ்ந்த தமிழ்மக்களின் படுகொலைகள் ஏராளம். குறிப்பாக நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலை மற்றும் நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள் யாராலும் மறக்க முடியாது. இதற்காகவெல்லாம் அவர் தலைகுனியவோ அல்லது மன்னிப்புக் கோரவோ இன்னும் தயாராக இல்லை.
தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று சனல்4 குறித்து சந்திரிகா கருத்து வெளியிட்டுள்ளளார் இதைவிடவும் கோரமான சம்பவங்கள் பல நடந்துள்ளன அவரது காலத்தில்.
அதிகாரத்தில் இருக்கும் போது இவையெல்லாம் கண்களுக்குத் தெரிவதில்லைப் போலும். அதிலிருந்து கீழ் இறங்கிய பின்னர்தான் இவையெல்லாம் பெரிய விவகாரங்களாகத் தெரிகின்றன. இது நிறைவேற்று அதிகாரம் கொடுத்து விடுகின்ற ஒரு மாய விம்பமோ தெரியவில்லை.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அதிகாரம் இவர்களின் கண்களை மறைத்து விடுகிறது. அந்த அதிகாரத்தில் இருந்து வெளியே வருகின்ற போது தான் அந்தக் கோரத்தின் வலிகளை உணரமுடிகிறது.
சந்திரிகாவும் அவ்வாறுதான் தனது உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார். ஆனாலும், தனது கடந்தகால ஆட்சியின் தவறுகளை அவர் சுட்டிக்காட்டவோ, அதற்காக மன்னிப்புக் கோரவோ இன்னமும் அவருக்குப் பக்குவம் வரவில்லை.
தமிழர்கள் தொடர்பாக அவர் கூறியுள்ள பல நியாயமான கருத்துகளை சிங்களப் பேரினவாதிகளால் ஒருபோதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. சம உரிமை, சமஸ்டி பற்றியெல்லாம் சந்திரிகா கூறியுள்ள கருத்துகள் அவர் ஆட்சியில் இருந்த போது நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாதவை.
ஆட்சியில் அதில் அமர்ந்திருக்கும் போது தம்மை சிங்கள பௌத்தத்தின் காவலர்கள் என்று கருதிக் கொள்வது தான் இதற்குக் காரணம். இப்போது சந்திரிகா அதிலிருந்து வெளியே வந்த நிலையில் கூறியுள்ள கருத்துகள் ஆரோக்கியமானவை.
கேட்பதற்கும், படிப்பதற்கும் ஆறுதலைக் கொடுக்கக் கூடியவை தான். ஆனால், இதனால் தமிழ்மக்களின் காயங்கள் ஆறப் போவதில்லை, அவர்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆங்கில வார இதழ் ஒன்று சந்திரிகா மீளவும் அரசியலுக்கு வரத் திட்டமிடுவதாகவும், சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டிருந்தது.
இன்னொரு பதவிக் காலத்துக்காகப் போட்டியிட அவருக்குத் தற்போது எந்தத் தடைகளும் இல்லை என்பதால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களமிறங்கலாம் என்று அந்த வார இதழ் ஊகம் வெளியிட்டிருந்தது.
இத்தகைய பின்னணியில் தான் அவரது நினைவுப் பேருரை தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு கேள்வி எழுகிறது.
சந்திரிகா மீண்டும் சமாதான தேவதை வேடமிட்டுக் கொண்டு வருவதற்காகத் தான் இந்த உரையை நிகழ்த்தினாரா? அல்லது அவரது மனமாற்றத்தின் வெளிப்பாடா? என்பதே அது.
இதற்கான பதிலைப் பெற சில காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten