குறிப்பு : 06.05.87 வரை உணவு நீர் தரப்படவில்லை. அன்று இரவே தந்தார்கள்.
குறிப்பு : இதன் தொடர்ச்சியாக வசந்தன் கண்கட்டப்பட்ட நிலையில் என்முன் கொண்டுவரப்பட்டார். சில விடயங்களை கூறியதுடன், இவைகளை என்னிடம் இருந்து பெற்றதாகக் கூறினார்.
விளக்கம் : இந்த வதை நீடித்த, தொடர்ச்சியான நாட்களில் நீர், உணவு என்ற பேச்சுக்கே இடமில்லை. உடலில் இருந்து சக்தியை வதைகளின் கொடூரங்கள் வெளியேற்றிய வண்ணம் இருந்தது. கோடை வெயில் அறையில் இருந்த நீரை உறிஞ்சியது. குடிக்க தண்ணிர் அற்ற நிலையில், வெக்கை தண்ணீரை கோரி உடலில் இருந்து நீரை உறிஞ்சியது. காலம் சார்ந்த இயற்கையும் எனக்கு எதிராக இருந்தது. ஆனால் உயிருள்ள பிணமாகவே அவர்கள் என்னைத் தொங்கவிட்டு இருந்தனர்.
பொதுவாக விடையங்களை ஒப்புக்கொண்ட அன்று இரவு, வசந்தனை கண் கட்டப்பட்ட நிலையில் என்முன் கொண்டு வந்தனர். சில பொது விடையங்களை கூறியதுடன், என்னிடம் இருந்து பெற்ற பொருட்களின் பட்டியலைக் கூறினார். வசந்தன் என்னிடம் பெற்றவை, கதைத்தவை மட்டுமல்ல, அவர் தான் வைத்திருந்த பொருட்களையும், தரவுகளையும் கூட கொடுத்திருந்தார். இதை நான் பின்னால் தெரிந்து கொண்டேன்.
குறிப்பு : இரண்டு நாள் கழிந்த நிலையில் மாத்தையா வந்தான். அவன் பலதையும் கதைத்த பின்பு கூறினான், ராகவனை (புலியில் நந்தன்) ஒருநாள் றோட்டில் கண்டேன் கைது செய்யவில்லை என்றான். ஏனெனில் ஒரு இயக்கத்தில் இருந்ததால் என்றான்.
குறிப்பு : ஒரு நாள் "புதியபாதை குமணன்" கண் கட்டப்பட்ட நிலையில் என்முன் கொண்டு வரப்பட்டார். அவரைக் கொண்டு சென்ற பின்பு, இவருக்கு மரணதண்டனை வழங்கப்படும் எனக் கூறினான்.
குறிப்பு : இந்தக் குமணன் பற்றி கதைக்கும் போது, கோண்டாவில் விக்கியைத் தெரியுமா? எனக் கேட்டான். நான் கம்பஸ் மாணவன் எனவும், பிளாட்டில் இருந்தவர் எனவும் கூறினேன். பிறகு பார்ப்பம் என்றனர்.
விளக்கம் : இரண்டு அல்லது மூன்று நாள் கழிந்த நிலையில் குமணனனை கண்கட்டப்பட்ட நிலையில் என் முன் கொண்டு வந்தனர். அவரிடம் என்னைத் ராகவன் என்று குறிப்பிட்டனர். ராகவன் எமது இயக்க உறுப்பினர் மட்டுமின்றி, பழைய புலிகளில் (1980க்கு முந்திய) இருந்தவர். அதாவது பிளாட் இயக்கம் புலிகளில் இருந்து உடைந்த சமகாலத்தில், பலர் உதிரியாக தமக்குள் முரண்பட்ட கருத்துடன் இரண்டுக்கு போக்குக்கும் வெளியில் சென்றனர். அதில் ராகவன் ஒருவர். ராகவன் பேராசிரியர் சிவத்தம்பியின் (சகோதரியின் மகன்) மருமகன் மட்டுமின்றி, பிரபாகரனின் நெருங்கிய உறவினரும் கூட. இவர் புலிகளில் இருந்த விலகிய சில வருடங்களின் பின், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் இணைந்தார்.
பழைய புலிகளில் குமணன் என்பவரும் ராகவனுடன் புலிகளில் இருந்தவர். அதனால் தான் என்னை ராகவன் என்று அவர்ருக்கு கூறினர். எதுவும் சொல்ல இருக்கிறதா என மாத்தையா குமணனிடம் கேட்க, அவர் எதுவும் இல்லை என்றார். உண்மையில் அவருக்கு 7, அல்லது 8 வருடமாக எந்தவிதமான தொடர்பும் ராகவனுடன் இருக்கவில்லை. குமணன் அரசியலுடன் தொடர்பற்று வாழ்ந்தவன்.
குமணனனைத் தெரியுமா என என்னிடம் கேட்டார். நான் தெரியாது என்றேன். உண்மையில் எனக்கு அவனை நன்கு தெரியும். இந்தியாவில் நாகராஜா வாத்தி வீட்டில் பல தடவை சந்தித்திருந்தேன். நாகாராஜா பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான இரகசிய பொலிசாரை கொன்றவர்களில் முக்கியமான ஒருவர். அரசால் தேடப்பட்டவர்களில் முக்கியமானவர். புலிகளிலும் முக்கியமானவர். புலிகள் பிளாட் உடைவின் போது, உதிரியாக வெளியேறிச் சென்றவர். அதன் போது அதில் உதிரியாக சென்ற நெப்போலியன் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி வர்க்கப் போராட்டத்தை முன்வைத்த போது, அதற்கு நாகராஜா வாத்தி உதவியவர். அக்கால இயக்க நடைமுறைகளில் ஒன்றாக இருந்த கடத்தல் தொழிலை அவர் தொடர்ந்தார். இந்திய இலங்கைக்கான பொருட்களைக் கடத்தியே பிந்திய காலத்தை ஓட்டிய நாகராஜா வாத்தி, பல வர்த்தக முயற்சியிலும் ஈடுபட்டவர். பேரவையை உருவாக்கிய நெப்போலியனை, 1990களின் ஒன்றாக அவருடன் சேர்ந்து திரிந்த ஈரோஸ் இயக்கத்தினர் மலையகத்தில் வைத்து இரகசியமாக சதிப்பாணியில் கொன்றனர். மலையகத்தில் மக்களுக்குள் வேலை செய்த இவரை, அருகில் படுத்திருந்த ஈரோஸ் உறுப்பினர் நித்திரையில் வைத்தே படுகொலை செய்தார். அதாவது தலைவர் பிரபாகரனின் பாணியில் கொன்றனர். தெருநாயாக திரிந்த ஈரோஸ், புலிகளுக்கு வாலாட்டி விசுவாசமாக குலைத்ததால், அதன் வளர்ப்பு நாயாகியது. எஜமான் போன்று கொலைகளை செய்வதிலும், சொன்னதை செய்தும் நக்கிபிழைக்கின்றனர்.
குமணனனை நான் இரண்டாம் முறையாக, எனது கைதுக்கு சில நாட்களின் முன் யாழ் காங்கேசன்துறை தாவடி வீதியில் சந்தித்தேன். அவருடன் கோண்டாவில் விக்கியும் இருந்தார். குமணன் என்னைச் சரியாக அடையாளம் கண்டும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில், கோண்டாவில் விக்கியே குமணனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். நல்ல போதையில் இருந்த அவர், ஒரு அரசியல் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் வீதியில் மக்கள் பார்த்து நிற்க, எனது சைக்கிளை இழுத்து அட்டகாசம் செய்தார். ராகவன் பற்றியும் இயக்கத்தை பற்றியும் தூற்றிய நிலையில், நிலைமை மோசமாவதை தடுக்க முயன்றேன். உட்கார்ந்து இருந்து கதைப்போம் எனக் கூறி அருகில் இருந்த தேனீர் கடைக்குள் அழைத்துச் சென்றேன். தனது வாழ்க்கை சீரழிந்ததைக் கூறி அழுதார். தன்னுடன் இருந்து விலகிய பழைய புலி உறுப்பினர்களை திட்டினார். அப்போது கோண்டாவில் விக்கி அருகில் இருந்தார். நான் ஆறுதல் கூறியதுடன், இங்கு வாழ்வது உயிருக்கு ஆபத்தானது என எச்சரித்தேன். அவர் அதற்கு என்னைச் சுடட்டும் என்றார். இவர் பின்னால் நிரந்தரமாகவே, "மேதகு" தேசிய தலைவரின் தேசிய சிம்மாசனத்தின் கீழ் புதைந்து போனார். என்முன் கொண்டு வந்த குமணனை, புலிகள் தமது பாசிச வக்கிரத்தை, பழி தீர்த்துக் கொள்ளக் கொன்றனர்.
ராகவன் தான், இந்தியாவில் இருந்து, எமது தள முடிவுக்கு எதிராக தலைமை தாங்கியவர். இந்தியாவில் கூட அங்கிருந்த கீழ்மட்டத்துடன் கூட தொடர்பற்று தலைமறைவாக ஒளித்து இருந்தவர். இவர் தான் என்.எல்.எப்.ரியின் செயலாளர் கூட. அமைப்புக்கு வெளியில் இரகசியமாக இருந்த, கட்சியின் பொதுச் செயலாளரும் கூட. எமது போராட்டத்தில் அனைத்துச் சரியிலும், சிதைவிலும் இவரின் பங்கு முக்கியமானது. சில வேளைகளில் சர்ச்சைக்குரிய தனது நடவடிக்கைகளை, பொம்மைகளைக் கொண்டே முன்வைத்தவர். பின் அதை அவர்களுக்கு எதிராகவே குற்றச்சாட்டாக்கியவர். இப்படி பல. அமைப்பு முரண்பட்டு பி.எல்.எவ்.ரி.யாக முன், அதில் இருந்த இருவரை சுட வேண்டும் என்று மத்தியகுழுவின் தனிப்பட்ட நபர்களின் உரையாடல்கள் மூலம், அவர்கள் தாக்குவார்கள் என்று காரணங்களைக் கூற அதை ஏற்க வைக்க முனைந்தவர். இந்த வகையில் ரமணியுடன் கதைத்து அதை ஏற்க வைத்தவர், என்னையும் பிரபாவையும் கூப்பிட்டு அதை முன்வைத்தபோது, நாம் எதிர்த்ததால் அதை கைவிட்டவர். ஆனால் இதை பின் மத்தியகுழுவில் விவாதிக்கும் சந்தர்ப்பம் எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார்.
இணக்கமான உடைவின் போது நடந்த இறுதி மத்தியகுழுவில், திடீரென தாம் ஒரு உளவாளி என்று நம்பிய ஒருவரை தன் தலைமையில் கொன்ற செய்தி ஒன்றை திடீரென சுயவிமர்சன அடிப்படையில் அறிவித்தார். மத்தியகுழுவுக்கு முன்கூட்டியே நீண்ட காலமாக தெரியாது மறைக்கப்பட்ட இந்த சம்பவம், இதில் ஈடுபட்ட ஒருவர் பி.எல்.எவ்.ரி.யுடன் சென்றதால் இந்த தகவலை அன்று சுயவிமர்சனமாக அவர் தெரிவிக்க வேண்டியிருந்தது. அமைப்போ இவரின் தலைமையில் வழிகாட்டலில் இருந்தது. இவரின் தனிப்பட்ட இயல்புகளை அமைப்பின் நடைமுறைகளில் பல தடைகளை ஏற்படுத்தியது. புலிப் பாசிசத்தை எதிர்கொள்வதில் இவை தடைக்கல்லாக மாறி, அதை எதிர்கொள்ளும் திறனை அமைப்புக்கு இல்லாதாக்கியது. பி.எல்.எவ்.ரி. உடைவுக்கு காரணமாக இருந்த சரியான அரசியலை இவர் முன்வைத்த விதம் தவறாக இருந்தது. அதை அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவதின் ஊடாக விவாதித்து ஏற்க வைக்கும் முறை ஊடாக முன்வைக்கவில்லை. மாறாக பின்பக்கத்தால் முன்வைத்தார். நாங்கள் கூட சரியான இந்த அரசியலை பார்த்து ஏற்றோம், இதனால் பிளவு ஏற்படும் என்ற மறுபக்கத்தை நாம் காணவில்லை. விசுவானந்ததேவன் இதற்கு எதிரான ஜனநாயக மத்தியத்துவத்தை மீறும் வெளிப்படையான பிளவு நடவடிக்கையில் இருந்து தொடங்கினார். இதுவே பின் பி.எல்.எவ்.ரி. அமைப்பாக பிளவாகியது.
இந்த ராகவனை குறித்துத்தான் மாத்தையா என்னுடன் கதைத்தான்.
35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)
25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)
19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)
15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)
13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)
08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)
04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)
Geen opmerkingen:
Een reactie posten