தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 februari 2012

விரிவான வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.


இதனால், ஐ.நா. சபையில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக் கைக்கான ஆதரவும், அழுத்தமும் அதிகரித்துள்ளன. இவ்வாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், நல்லிணக்கப்பாடு, கடப்பாடுகள், வட மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பீரிஸுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது.
Photobucket
இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு உங்கள் அரசின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் அறிக்கையை மிக ஆர்வத்தோடு வாசித்தேன். தேசிய நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிக்க அந்த அறிக்கை, அநேக முக்கியமான, காத்திரமான, சாதகமான பரிந்துரைகளை நல்குகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமாயின் அப்பகுதிகளிலிருந்து ஆயுதப் படைகளை மீளப்பெறுதல், துணைப் படையைக் கட்டுப்படுத்துதல், ஜனநாயக, சிவில் சமூக அமைப்புகளைப் பலப்படுத்துதல், காணாமல்போனோர் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் விசாரணை நடத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இப்பரிந்துரைகள், தேசிய நல்லிணக்கப்பாட்டுக்குப் பெரும் பங்களிப்பை நல்கும். மேலும், இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஏதுவான அநேக நிறுவனங்களுக்குப் புத்துயிரளிக்கவும் பெரிதும் உதவும்.

எது எப்படியிருப்பினும், சர்வதேச மனிதாபிமான சட்டமும், அதேபோல சர்வதேச மனித உரிமைகள் சட்டமும் இரு தரப்புகளாலும் மீறப்பட்டுள்ளன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் பிரஸ்தாபிக்கப்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு, அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவு அளித்து வந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஏனையோரினதும் புரிந்துணர்வு, ஈடுபாடு ஆகியவற்றின் உறுதுணையோடு உங்கள் அரசால் அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கேற்ப செயற்படமுடியும்.

அதேவேளை நல்லிணக்கப்பாட்டை எய்துவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் உறுதிப்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இலங்கை அரசு, நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை தான் சமர்ப்பிக்கும்போது செயற்றிட்டமொன்றையும் சமர்ப்பிக்குமென எமக்குத் தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தீர்க்கப்படவேண்டிய விவகாரங்களை அணுகுவதற்கு உயர்மட்டக் குழுவொன்றும் நிறுவப்படும் என ஜனவரி 19ஆம் திகதி நீங்கள் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதற்காக எமது பாராட்டுதலை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும், அபிவிருத்தியைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள், குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான வழிவகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்றிட்டம் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இது எமக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கின்றது.

விரிவான வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், அமுலாக்கம் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறும்பொருட்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க முடிவுசெய்துள்ளோம். நல்லிணக்கப்பாட்டை அடைய மேலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்ச்சில் இந்தப் பிரேரணை இலங்கையைக் கோரவுள்ளது. அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம், கடப்பாடுகள் ஆகியவை குறித்து இது கேள்வி எழுப்பவுள்ளது.

ஐ.நா. சபையில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்கான ஆதரவும், அழுத்தமும் அதிகரித்துள்ளன. மார்ச்சில் இடம்பெறும் அமர்வு தொடர்பான எங்களின் முடிவு, எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எமக்கு வழிகாட்ட உதவும். நல்லிணக்கப்பாடு, கடப்பாடுகள், வட மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவை தொடர்பாகக் கலந்துரையாட மார்ச்சில் தங்களுக்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உங்கள் விஜயம், புத்திஜீவிகளை சந்திப்பதற்கும், எமது நாடாளுமன்றத்தில் தங்கள் அரசின் நோக்கங்கள், செயற்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை விவரிக்கவும் பெரிதும் உதவும் என நினைக்கின்றேன்.

உங்கள் விஜயமும், அர்த்தமும் நம்பகத்தன்மையும் கொண்ட செயற்பாட்டுத் திட்டம் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பெரிதும் உதவ எம்மை ஊக்குவிக்கக்கூடும். இலங்கையில் நிரந்தர சமாதானம், நல்லிணக்கப்பாடு ஆகியவற்றை அடைவதற்கு உதவக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தங்களோடும், சர்வதேச சமூக உறுப்பினர்களுடனும் கலந்துரையாட விரும்புகிறேன்.

இலங்கை சுதந்திர மடைந்தது முதல் அதன் வலுவான ஆதரவு நாடாக அமெரிக்கா இருந்துவருகிறது. உங்களோடு தொடர்ந்தும் இணைந்து செயற்படுவோம். அனைத்துப் பிரஜைகளும் சம உரிமைகள், வாய்ப்புகள் ஆகியவற்றை அனுபவிக்கும் பாதுகாப்பு, சமாதானம், ஒருமைப்பாடு, சுபீட்சம் கொண்ட இலங்கையை உங்கள் அரசு உத்தரவாதப்படுத்த பெரிதும் நாம் ஆதரவு நல்குவோம். இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten