தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 februari 2012

விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான நிர்வாகத்தை நினைக்க தலைப்படும் நிலையில் வடபகுதி மக்கள்!!



விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று.
விடுதலைப்புலிகள் செய்ததெல்லாம் சரியென்று எவரும் வாதிடமாட்டார்கள். அப்படியானதொரு வாதம் நடந்ததாகவும் வரலாறு இல்லை. அப்படியிருந்தும் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக, அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது.
ஊழல் அற்ற நிர்வாகம், பெண்களுக்கான பாதுகாப்பு, திருட்டு, களவு என்ற பயம் அறவே இல்லாத நிலைமை, கலாசார பேணுகை, விரசமான சினிமாப் பாடல்களுக்குத் தடை, ஆபாச நிகழ்ச்சிகளுக்கு அறவே இடமில்லாத கடும் கட்டுப்பாடு, தெருச்சண்டை, குழுச்சண்டை, அட்டகாசம், அடாவடி என்ற பட்டியலில் இருப்போருக்கு பரமலோக தண்டனை என்றவாறு அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடிய பகுதிகளை நிர்வகித்தனர்.
இதனால் தமிழ் மக்கள் அச்சமற்று வாழ்ந்தனர். பெண்கள் எந்தப்பயமும் இன்றி வீதியில் நடமாடினர். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. திருடர், கள்வர், கொள்ளையர் என்ற சொற்பதங்களுக்கு அறவே இடம் இருக்கவில்லை. இதன் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தனர்.
எனினும் போருக்குப் பின்னரான சமகால நிலைமை எப்படி என்பதை ஒருகணம் சிந்தித்தால், நிலைமை மிகவும் மோசமாகி வருவதை உணர முடியும். கொள்ளையர்களின் அட்டகாசங்கள், கோஷ்டிச் சண்டைகள், வாள் வெட்டுக்கள், போதை வஸ்துப் பாவனைகள், கலாசார சீரழிவுகள் என்பன ஆரம்பிக்கத் தொடங்கி விட்டன.
அதிலும் இளைஞர்கள் குழுக்களாக இயங்குவது, கோஷ்டிச் சண்டையில் ஈடுபடுவது, வாளால் வெட்டுவது என்ற அட்டகாசங்கள் இப்போது ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இதற்கு மேலாக வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை அபகரிக்கும் அநியாயங்கள், வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை வாளால் வெட்டிவிட்டு நகைகளை அபகரிக்கும் கொள்ளையர்கள், குழந்தைப் பிள்ளையை பணயம் வைத்து தங்க நகைகளை கபளீகரம் செய்யும் கயவர்கள் தலை விரித்தாடுகின்றனர்.
இந் நிலைமை நீடிக்குமாக இருந்தால் 2013 ஆம் ஆண்டின் பிறப்பில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் பயங்கரமான சூழல் இங்கு இருக்கும். எத்தனையோ களவுகள், கொள்ளைகள் நடந்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமல் இருக்கின்ற வடபகுதிப் பொலிஸாரில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வேண்டுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
அவர்கள் குச்சொழுங்கையில் காத்து நின்று பாலுக்கும் பாணுக்கும் கடைக்குச் செல்பவர்களிடம் தலைக்கவசம் இல்லையென்று குற்றம் சுமத்தி லஞ்சம் வேண்டுவதைப் பெரும் தொழிலாக்கிவிட்டனர்.
இவர்களால் வடபகுதியில் இடம்பெறும் களவு, கொள்ளை, கொலைகளை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. இந் நிலையில் தமிழ்மக்கள் போருக்கு முந்திய நிர்வாகத்தை நினைக்கத் தலைப்படுவர்.

Geen opmerkingen:

Een reactie posten