இலங்கை அரசு என்ன உறுதி மொழிகளை வழங்கினாலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா நேற்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் கலந்து கொண்டார். தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது அரசியல் தீர்வு, அரசு கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சின் தற்போதைய நிலைமை தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள், போர்க்குற்ற விசாரணை விவகாரம் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசுவதாக இதன்போது உறுதியளித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து அரசு விலகி விடமுடியாது என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் என்பன பற்றி இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசு அக்கறை இல்லாமல் இருப்பதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்தும் தீர்மானமொன்றை எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்ற அமெரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், இப்போது அரசு வழங்கும் உறுதிமொழிகளை ஏற்று அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர் என அறிய முடிந்தது.
Geen opmerkingen:
Een reactie posten