ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்த புலிகளின் வன்முறை செயல்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தான் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பன் ஆனால் சோனியா காந்தியின் அரசியல் எதிரி என்றும் இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற மனோ கணேசன் - சுப்ரமணிய சுவாமி இடையிலான பேச்சுவார்த்தையின்போது ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் சந்திரலேகாவும் கலந்துகொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,
இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுடன் கூடிய நியாயம் வழங்கப்படுவதே இந்திய நலன்களுக்கு உகந்தது என்ற பொதுக்கருத்து இந்தியாவில் இன்று உறுதியுடன் உருவாகிவருவதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு தொடந்து சலுகைகள் வழங்குவதன்மூலம் இந்திய நலன்கள் இங்கே பாதுகாக்கப்படும் என்ற கொள்கை பிழையானது எனவும், புலிகளை எதிர்க்கும் வட இந்தியாவை சார்ந்த அரசியல், சமூக தலைவர்கள் மத்தியிலும்கூட இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து திட்டவட்டமாக ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
இலங்கை ஆட்சியாளர்களால் இலங்கையின் வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களுக்கு வரலாற்றுரீதியாக தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிகளை ராஜீவ் காந்தி அறிந்திருந்தார் எனவும், ஐக்கிய இலங்கைக்குள்ளே தமிழர்களுக்கு இந்தியாவின் கண்காணிப்புடன் கூடிய உரிய அரசமைப்புரீதியான அந்தஸ்த்தை பெற்று தருவதற்கு தயாராகி வந்த வேளையிலேயே அவர் கொல்லப்பட்டார் எனவும், அது புலிகளின் அறியாமை என்றும், ஆனால் இன்று புலிகள் இல்லாத வேளையில் அவர்களை பற்றி பேசி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
சுப்ரமணிய சுவாமி இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதி. ஆனால் அவரது கருத்துகள் குறிப்பாக வட இந்தியாவில் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கப்போகிறார்.
அவரிடம் இன்றைய இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அரசாங்கத்தின் கடும் நிலைப்பாடு தொடர்பிலும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களின் பின் தங்கிய நிலைமை தொடர்பிலும் எடுத்து கூறினேன். இவற்றை கவனத்தில் கொண்டு தற்போது இந்தியாவில் பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய இந்திய அரசாங்கம் இலங்கை தொடர்பான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
Geen opmerkingen:
Een reactie posten