நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்செய்யப்படக் கூடாதென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறியிருப்பது தொடர்பாக கருத்துரைக்கும்போதே புளொட் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 18 இலட்சம் மேலதிகமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எனவே, அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தடங்கலின்றி தீர்வினை வழங்க முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சகல தரப்பின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு அதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. ஜனாதிபதியே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.
எனவே அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். பேரினவாத கடும் போக்காளர்களின் பிடிக்குள் ஜனாதிபதி சிக்கி விடலாகாது. அவ்வாறு சிக்குவாரானால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேசத்தின் உதவியை கோரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தவிர்க்க முடியாத தார்மீகக் கட்டாயமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டிற்குள் சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிக்கும். அப்போது சர்வதேசம் தலையிடுகிறதே என கூச்சலிடுவதால் பயனில்லை. விசேடமாக ஜனாதிபதிக்கு 18 இலட்சம் மேலதிகமான மக்களின் ஆதரவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமும் உள்ளது.
இதனால் தைரியமாக பேரினவாதிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கமுடியும். அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியும்.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது விசேடமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு நஷ்ட ஈடுகள் நிவாரணங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
தொடர்ந்தும் பேரினவாத கடும் போக்காளர்களுக்கு அஞ்சி பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் சமாதானம் தொலைந்து போகும். நாடு அதே இடத்திலேயே இருக்கும். நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகராது என புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten