இந்நேர்காணலின் போது TGTE ன் செயற்பாடுகள் தொடர்பாக கரன் பார்க்கர் விளக்கமளித்தார். அத்துடன் சிறிலங்கா ஆட்சியாளர்களினதும், பூகோள அரசியல் பின்னணியினதும் பிடிக்குள் அகப்பட்டுள்ள தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் துன்பங்கள் மற்றும் கடினங்கள் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைவதற்குக் காரணமாக இருந்த அதே விதமான அடகக்குமுறைக்குள்ளேயே தற்போதும் அவர்கள் வாழ்வதாகவும், அத்துடன் சிறிலங்காவின் எதிர்காலத்திற்கு உருவங்கொடுப்பதில் ஈடுபட்டிருக்கும் சீனா, ரஸ்யா, இந்தியா ஆகிய மூன்று உலக வல்லரசுகளின் பிடிக்குள் தமிழ் மக்கள் சிக்குண்டுள்ளதாகவும் கரன் பார்க்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீளிணக்கப்பாட்டிற்கான எந்தவொரு பிரதான தேவைப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கமும் இன்னமும் பூர்த்தியாக்கவில்லை. இந்த அடிப்படையில் தற்போதும் சிறிலங்காவில் பிரச்சினைகள் தீர்ந்து விடவில்லை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற இழப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனும் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் ஆணையாளருடனும் ‘சொற் போரில்’ ஈடுபடுகின்றது.
சிறிலங்காவில் மனிதப் படுகொலை அரங்கேற்றப்பட்ட போது அது தொடர்பில் உலக நாடுகள் பாராமுகமாக நடந்துள்ளன. அதாவது இப்படுகொலைகளுக்கு உலகம் தனது அனுமதியை வழங்கியிருந்தது. இது இப்படுகொலை தொடர்பாக அப்போது எந்தவொரு விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. இவ்வாறுதான் உலக அரசியல் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமது தீவிரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்ட பல உலக நாடுகள், சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதமுடியும். ஏனெனில், யுத்தம் நடந்து கொண்டிருந்த போது உண்மையில் அங்கு என்ன நடக்கப் போகின்றது என்பதும் தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆயுதப் போரின் போது பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையானது, மனிதாபிமானச் சட்டம், ஆயுதப் போர்ச் சட்டம் போன்ற ஜெனீவா உடன்பாடுகளை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளதானது வெளிப்படை உண்மையாகும்.
ஆகவே, மனிதப் படுகொலை, பாரிய சித்திரவதைகள், இனவெறிச் செயற்பாடுகள், துன்புறுத்தல்கள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பாக மக்கள் தமது எதிர்ப்பைக் காட்ட முயற்சித்த போது, யுத்தம் நடந்த போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த அனைத்துலக சமூகமானது இக்குற்றச் செயல்களிற்கு உடந்தையாக இருந்ததற்காகத் தனக்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பலாம் எனக் கருதிக் கொண்டது.
இவ்வாறானதொரு சூழலில், விசாரணை ஒன்றை மேற்கொள்வதென்பது தந்திரோபாய ரீதியில் மிகக் கடினமானதாகும். ஏனெனில், சிறிலங்காவில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய காலப்பகுதி 1983 தொடக்கம் 2009 வரையும், அதற்கு அப்பாலும் ஆகும். ஏனெனில் அதுவரை சிறிலங்காவில் ஆயுதப் போர் தொடர்ந்தும் நடந்துகொண்டேயிருந்தது. இக்காலப்பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகளை வழங்கிய அனைத்துலக நாடுகள் இக்காலப்பகுதிக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில் தயக்கத்தைக் காட்டிநிற்கின்றன.
எனது பார்வையில், மனிதாபிமானச் சட்டம் மற்றும் ஏனைய அனைத்துலகச் சட்டங்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதப் போர் முழு அளவில் மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். 10 ஆண்டுகளிற்கு முன்பே சிறிலங்காவில் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. இப்போர்க் குற்றங்கள் 2009 ன் ஆரம்பப் பகுதியில் தொடங்கப்பட்டதல்ல.
எவ்வாறிருப்பினும், அனைத்துலக சமூகமானது சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களிற்கு அனுமதி அளித்தமையானது தமிழ் மக்கள் உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை, பாதிப்புக்களைச் சந்திப்பதற்கு வழிகோலியுள்ளது. இப்பாதிப்புக்கள் வெல்லப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
ஆகவே குறுகிய காலப்பகுதியில் இக்குற்றங்கள் தொடர்பில் பழிதீர்க்கப்பட வேண்டும் என மக்கள் நினைத்தால் அது கடினமான விடயமாகும். முதலில் நாங்கள் எங்களுக்குள் இருக்கும் அதிருப்திகளை, அவநம்பிக்கைகளைப் போக்கி ஒரே திசையில் பயணிப்பதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும்.
2009ல் அனைத்துலக சமூகம் விட்ட தவறு மற்றும் இது தற்போது ஐ.நாவில் எவ்வாறானதொரு சூடான பேசுபொருளாக உள்ளமை, இந்நிலையில் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்புக்கள் போன்றன தொடர்பாகவும் கரன் பார்க்கர் விளக்கியுள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டவாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான கரன் பார்க்கரிடம், ‘தமிழ் மிரர்’ ஊடகத்திற்கு கடந்த 18.12.2011 அன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten