இலங்கையின் நிலைமை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க கொழும்பு சென்ற இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு சிறிலங்காவின் அரச புலனாய்வுச்சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து குற்றப்புலனாய்வு காவல்துறையினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமைக்கு அறிவித்தனர்.
இதை அடுத்து, இவர்கள் இருவரையும் கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் தடுத்து வைக்குமாறும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் இவர்களின் நுழைவிசைவை ரத்துச் செய்யுமாறும் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, தனக்கு அறிவிக்காமல் தனது கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகள் செயற்பட்டமை குறித்து ஆத்திரமடைந்த பாதுகாப்புச் செயலர், அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரைக் கண்டித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகள் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
இதன்பின்னர், அந்த இரண்டு ஊடகவியலாளர்களும் கோத்தாபய ராஜபக்சவின் அனுமதியுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று தமது ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பை மேற்கொண்டதாகவும் அந்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten