தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 augustus 2011

பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! பொதுவுடமைக் கட்சி பெ.மணியரசன் கண்டனம்!

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 09:06.13 AM GMT ]
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் செய்ததை உலகின் பலநாடுகள் கண்டிக்கும் இவ்வேளையில், இந்திய நாடாளுமன்றம் இலங்கை அரசுப் பிரதிநிதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பாராட்டு செய்ததற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்தியா நடத்தி வருகின்றது.
2009 மே மாதம் குவியல் குவியலாக ஈழத்தமிழ் பொது மக்களை கொன்றழித்த ராசபக்சவை திரும்பத் திரும்ப டில்லிக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, சிறப்பித்து வருகிறது.
இப்பொழுது, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்து சிறப்பித்திருக்கிறது.
01.08.2011 அன்று மக்களவையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க., ம.தி.மு.க., தமிழக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கண்டனக் குரல் எழுப்பினார்கள்.
அதனை மக்களைவைத் தலைவர் திருமதி. மீரா குமார் கண்டித்துள்ளார். அத்துடன் இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தமிழினத்தை அழித்த சிங்கள இனவெறி நாட்டின் நாடாளுமன்றக் குழுவை சிறப்பு விருந்தினர்களாக மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்ததற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், மக்களவைத் தலைவர் மீராக் குமாரியும் தமிழக மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.
தமிழினத்தை அழித்தது போல, ஏதாவது ஒரு வெளிநாட்டில் ஹிந்திக்காரர்களையோ, மலையாளிகளையோ அல்லது மற்ற இனத்தவரையோ, ஓர் அரசு அழித்திருந்தால் அந்த அரசின் பிரதிநிதிகளை மக்களவைக்கு அழைத்து கௌரவிப்பார்களா?
சிங்கள இனவெறி அரசு தமிழினத்தை பகை இனமாகக் கருதுவதைப் போலவே இந்திய அரசும் தமிழினத்தை பகையினமாகக் கருதுகின்றது என்பது மேலும் மேலும் உறுதியாகின்றது.
இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போருக்கு ஆயுத உதவி, நிதி உதவி, அரசியல் உதவி என அனைத்து உதவிகளையும் செய்து அப்போரில் பங்கு கொண்ட இந்தியா, தமிழினத்தை அழித்த தனது சகோதரர்களான சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து இந்திய அரசு பாராட்டுகிறது.
இச்செயல் தமிழர்களை தனது சகோதரர்களாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.
2009 இன அழிப்புப் போரில் இலங்கை அரசு அப்பாவி தமிழ் பொதுமக்களைக் கொன்று போர் குற்றம் புரிந்ததை கண்டித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை அரசின் போர் குற்றங்களை கடுமையாக சாடி பேசினர். அந்நாட்டு பிரதமர் கமரூன், இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கை அரசின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் வகையில் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்ததை உலகின் பலநாடுகள் கண்டிக்கும் இவ்வேளையில், இந்திய நாடாளுமன்றம் இலங்கை அரசுப் பிரதிநிதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பாராட்டு செய்ததற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இலங்கை பிரதிநிதிகளைக் கண்டித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்த போது, அதற்கு ஆதரவாக இதர மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒருவர் கூட குரல் எழுப்பாதது, இந்தியத் தேசியம் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழர்கள் தங்கள் இனத்தை சூழ்ந்துள்ள பேராபத்தை முறியடிக்க ஈழத்தமிழ் இனத்தைக் காப்பாற்ற தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இது தவிர இப்பொழுது இந்தியாவில் தமிழ் இனத் தற்காப்புக்கு வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
02.08.2011

Geen opmerkingen:

Een reactie posten