இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
இது தொடர்பில், கண்காணிப்பகம் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் செயலாளரும் மனித உரிமைகள் பேரவையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரின்போது, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை உரிய முறையில் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கண்காணிப்பகத்தின் ஜெனீவா அலுவலக பதில் ஆலோசகர் பிலிப் டேம்( Philip Dam) கோரியுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிபுணர் குழு இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்று பரிந்துரைத்திருந்தமையையும் பிலிப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் நல்லிணக்கம் தொடர்பான சில பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்த பயன்கள் கிடைக்கும். எனினும், போரின் போது இடம்பெற்ற பாரிய மனித அவலங்கள் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்தவில்லை.
இந்த நிலையில் ஆணைக்குழு அறிக்கையை ஏற்கனவே உறுதியளித்தப்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கும் இலங்கை தற்போது மறுத்து வருகிறது. இது இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை கொண்டு வரும் என்று பிலிப் டேம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten