ஊர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை கொண்டிருக்கும் கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும்? ஈ.பி.டி.பி கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டதனாலாயே வடக்கில் அரச கட்சி மண் கவ்வ வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர் யாழ். மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள்.

யாழ். மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளில் சுமார் 300 பேர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று யாழ். நகரில் உள்ள அவரது அலுவலக முன்றிலில் சந்தித்தனர்.கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் அரசை வெற்றி பெறச் செய்திருந்தால் உங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருமாறு கேட்க முடியும். அப்படி வெற்றி பெறுவதற்கு வாக்களிக்காத உங்களுக்கு வேலை பெற்றுத் தரவேண்டும் என எப்படி வற்புறுத்த முடியும் எனப் பட்டதாரிகளைப் பார்த்து அமைச்சர் டக்ளஸ் கேட்டுள்ளார்.அதன்போதே பட்டதாரிகள் தரப்பில் இருந்து ஒருவர் அமைச்சருக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். பெருமாள் கோயிலடியில் நேற்றுக் கூடிய வேலையற்ற பட்டதாரிகள் அங்கு கலந்துரையாடலை மேற்கொண்டுவிட்டு அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்துக்குச் சென்றனர்.

அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள மர நிழலில் பட்டதாரிகள் அமைச்சரைச் சந்திக்கக் காத்திருந்தனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி சகிதம் எங்கிருந்தோ வாகனத்தில் வந்து இறங்கினார் அமைச்சர். வேலையற்ற பட்டதாரிகள் 15000 பேருக்கு அரச நியமனம் வழங்கப்படவுள்ளது.அதில் 3000 பேருக்கு யாழ்ப்பாணத்தில் வழங்க வேண்டும். அதனைக் கேட்பதற்காக யாழ். வரும் இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பட்டதாரிகள் அமைச்சரிடமும் ஆளுநரிடமும் கேட்டனர்.நாடு முழுவதும் 85 ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்றிருக்க 3000 பேருக்கு யாழ்ப்பாணத்தில் நியமனம்  வழங்குமாறு கேட்பது நியாயமற்றது. நீங்கள் வடக்கில் அரசை வெற்றியடையச் செய்திருந்தால் அப்படிக் கேட்பதை ஏற்க முடியும். என அமைச்சர் பதிலளித்துள்ளார்.

குடிகாரர்கள், மக்களால் அருவருக்கக்தக்கவர்களை கொண்டுள்ள உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும். அரசு தோற்றதற்கு நாம் காரணம் அல்ல. உங்கள் கட்சியே காரணம் எனப் பட்டதாரிகள் தரப்பில் இருந்து அமைச்சருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஆளுநர் பட்டதாரிகளைச் சமாளித்தார்.