இலங்கை இராணுவத்தில் முக்கிய பதவியிலிருந்த இராணுவத் தளபதி ஒருவர் போர்க்குற்றங்கள் நடந்தன என்ற உண்மையை இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளார். அமெரிக்கா வசம் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளனவா? இவ்வாறு www.truth-out.org இணையத்தளத்தில் ஆய்வாளர் இமானுவேல் ஸ்டோக்ஸ் கட்டுரையொன்றினை வரைந்துள்ளார்.
இதனை முழுமையாக இங்கு தருகின்றோம் :
இலங்கை இராணுவத்தில் முக்கிய பதவியிலிருந்த இராணுவத் தளபதி ஒருவர் இப்பொழுது போர்க்குற்றங்கள் நடந்தன என்ற உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.
பொது மக்கள், சரணடைந்த போராளிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலவகையினரும் அரசாங்கத்தின் கட்டளைப்படி நீதிக்குப் புறம்பான முறையில் கொலை செய்யப்பட்டார்கள் என இந்த அதிகாரி கூறுகின்றார்.
சத்தியப் பிரமாணம் செய்து இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ள இராணுவத் தளபதியின் பெயர் பாதுகாப்புக்கருதி இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கிலுள்ள சட்டத்தரணி ஒருவருக்கு, சட்ட முறைமைகளுக்கு அமைய வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நபர் மூலம் வெளிவந்துள்ள விடயங்கள் மிக முக்கியம் வாய்ந்தவையாகும்.
ஏனெனில், மனித உரிமை அமைப்புக்களும், அனைத்துலக ஊடகங்களும், 2011ல் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் இதுவரை கூறி வந்த குற்றச்சாட்டுக்களை இந்த தளபதியின் வாக்கு மூலமானது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த இராணுவ அதிகாரி வழங்கியுள்ள தகவல்கள் பலவும் ஏற்கனவே வேறு சில இலங்கை இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுடன் ஒத்ததாக காணப்படுவதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் வலுவான பல சான்றுகளும் ஆதாரங்களும் இவரின் வாக்குமூலத்தினால் கிடைத்துள்ளது என அறிய முடிகின்றது.
இந்த நபருடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளார்கள். அதனால், போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் வலுவான பல சான்றுகளும் ஆதாரங்களும் இவரின் வாக்குமூலத்தினால் கிடைத்துள்ளது என அறிய முடிகின்றது.
இப்பொழுது இந்த நபரிடமிருந்து கிடைத்துள்ள தகவல்கள் யாவும் அனைத்துலக சட்ட விதிகளின்படி மிகவும் வலுவானவை. ஏனெனில், இலங்கை அரசியலில் மிகவும் உயர்மட்டத்தில் உள்ள தலைவர்களை, அதாவது இராணுவத்தினருக்கு அப்பால் உள்ள ஆளும் தரப்பினரின் தலைவர்களைப் போர்க்குற்றவாளிகளாக்கும் சான்றுகளாக இவை நோக்கப்படுகின்றன.
இங்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல் ஒன்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைப் பற்றியதாகும். அதாவது, அவரின் கட்டளையில் பொதுமக்களைக் கொலை புரிவதற்கான ‘வெள்ளை வான் குழுக்கள்’ இயங்கி வந்துள்ளன என்பதே அந்த தகவலாகும்.
இத்தகைய கொலை வெறிக் குழுக்களை கோத்தபாய ராஜபக்ச உருவாக்கி, அதற்குரிய அடியாட்களை தானே நேரடியாகத் தெரிவு செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கி வந்துள்ளமை பற்றி நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கப்படல் வேண்டும்.
சிறப்பு அதிரடிப் படையின் கீழ் சக்தி வாய்ந்த அடியாட்கள் குழுக்கள் இயங்கி வந்துள்ளன என ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழுவினர் பொது மக்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று, இரகசிய இடங்களில் தடுத்து வைத்து, சித்திரவதைக்குள்ளாக்கி கொடுமை புரிந்துள்ளனர். பலர் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் எவருக்கும் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன எனவும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்புப் படையின் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர், கோத்தபாயவின் கட்டளைகளை நடைமுறைப்படுதுவதற்குப் பொறுப்பாக இயங்கி வந்துள்ளதையும் மேற்குறித்த இராணுவத் தளபதி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொலீஸ் அதிகாரி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து கட்டளைகளை நேரடியாகப் பெற்று வந்துள்ளதுடன், வெள்ளை வான் கொலைகளையும் மேற்பார்வை செய்து வந்துள்ளார்.
'விக்கிலீக்ஸ்’ மூலம் கிடைத்துள்ள அமெரிக்க தூதுவராலய உள்ளக செய்திகளின் படியும், இத் தூதரக அதிகாரிகளுக்கும் வெள்ளை வான்கள் பற்றி தெரிந்திருக்கின்றது. இலங்கையின் அமெரிக்க உயர் தூதுவர் திருமதி பற்றீசியா புடீன்ஸ் 2010 பிப்ரவரி 02 திகதியிட்டு அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு:
தலைப்பு- ‘தேர்தலுக்குப் பின்னர் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்கள்’:
பிரகீத் எக்னாலிகொட எனும் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு, இலங்கையில் மாற்றுக் கருத்துள்ள ஊடகங்களை மௌனிக்கச் செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு சம்பவங்களில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னை நாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான மங்கள சமரவீரவும் வெள்ளை வான்கள், குண்டர் குழுக்கள் பற்றி தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிரித்தானிய ‘டெயிலி டெலிக்ராப்’ பத்திரிகைக்கு 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் திகதி வழங்கிய பேட்டியில்,’ இலங்கையில் கொலைக்குழுக்கள் அரசின் ஆசியுடன் நீதிக்குப் புறம்பான கொலைகளைச் செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்துள்ள இரகசியம்’ எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கொலைக்குழுக்கள் வௌ;வேறு பெயர்களில் இயங்கி வந்தாலும் பொதுவாக இராணுவ வட்டாரங்களில் இவை ‘கோத்தபாய சிங்க மாபியா’ என அழைக்கப்படுகின்றன என்று சமரவீர மேலும் கூறினார்.
மனித உரிமைக் குழுக்கள் பலவும், குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைக் காப்பகம், ஆசிய மனித உரிமை ஆணைக்குழு என்பனவும் இந்த கொலைக் குழுக்கள் பற்றியும் ஆட்கடத்தலில் வெள்ளை வான்கள் ஈடுபட்டதைக் கண்டவர்களை ஆதாரம் காட்டி கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் 2010இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையிலும் வெள்ளை வான்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதை தெரிவித்துள்ளதுடன், ஒரே வகையான வான்கள் மீண்டும் மீண்டும் பாவிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகின்றது.
இத்தகைய கொலைகள் அக்காலத்தில் ‘ஏற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ செயற்பாடாக’ இருந்தன என மேற்குறித்த இராணுவத் தளபதி தனது வாக்குமூலத்தில் மேலும் ஆங்காங்கே கூறியுள்ளார்.
அவர் மேலும் ஒரு தகவலை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, சரணடைகின்ற விடுதலைப் புலிகள் அனைவரையும் தீர்த்துக் கட்டும்படி போர்க்களத்தில் செயற்பட்டுகொண்டிருந்த ஒரு தளபதிக்கு சில அறிவுறுத்தல்களை கோத்தபாய விடுத்துள்ளார் என்பதே அந்தத் தகவலாகும்.
இந்த போர்க்குற்றங்கள் பற்றி அமெரிக்க நாடு எந்தளவுக்குத் தெரிந்து வைத்துள்ளது?
அமெரிக்கா இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்துள்ள குற்றங்கள் பற்றிய கோவை ஒன்றினை, இன்றும் பயன்படுத்தப்படும் கோவை ஒன்றினை, தயாரித்து வைத்துள்ளது. இந்தக் கோவையில் மேலே குறிப்பிடப்படுகின்ற வாக்குமூலமும், பிற இராணுவத் தகவல்களும் பொது மக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களும் உள்ளன.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 2009ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வருகை தந்த பொழுது, உள்துறை பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், தான் ஏற்கனவே தெரிவித்த நீதிக்குப் புறம்பான கொலை நடவடிக்கைகள் பற்றி மேலும் ஆதாரங்களை கொடுத்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2011ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் பலத்த மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளதாக கூறியுள்ளது.
இந்தக் குற்றங்களில் எதேச்சையான, சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், தடுப்புக் காவலில் உள்ள கைதிகளுக்கு எதிரான கொடுமைகள், ஆட்கடத்தல்கள், தமிழினத்துக்கு எதிரான பாகுபாடுகள் என்பன அடங்கும்.
பத்திரிகைச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை மறுப்பு என்பனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி, அரச மட்டத்திலான ஊழல்கள், தண்டனையிலிருந்து பாதுகாப்பு, குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறாமை என்பனவும் மிகப் பாரதூரமான விடயங்களாக இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மற்றுமொரு விடயத்தையும் இங்கு கவனித்தல் வேண்டும். இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களில் பலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். அதாவது அவர்கள் அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்.
எனவே, யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது விசாரணைகளையும் நீதிமன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடிய கேந்திர நிலையில் அமெரிக்க அதிகாரிகள் உள்ளனர் எனும் நிலைப்பாடு இங்கு முதன்மை பெறுகின்றது.
மேலும், இலங்கையைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகள் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளுக்கு போர்க்குற்றங்கள் தொடர்பான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளார்கள். தங்களுக்குப் போதிய பாதுகாப்பு உத்தரவாதத்தினை உறுதி செய்து கொண்டே அவர்கள் இந்த வாக்கு மூலங்களை வழங்கியுள்ளார்கள் என’ அலைவரிசை4′ தொலைக்காட்சி’ நிறுவனத்தின் மூத்த பணிப்பாளர் ஒருவர் ‘ருத் அவுட்’ (truth-out) செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச அமெரிக்காவின் ‘கிரீன் காட்’ அந்தஸ்துப் பெற்றவர். அவர் தனிப்பட்ட முறையில், யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் சட்டத்திற்கு மாறானவை; அவை தவிர்க்க முடியாதவை எனக் கூறி, ஒத்துக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
‘நாங்கள் முற்றும் புனிதமானவர்கள் அல்லர். அனைத்துலக சட்ட நியமங்களை எங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நாங்கள் இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகள், குறைந்தது அடுத்த 60 வருடங்களாவது யுத்தம் செய்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்’ என அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச சனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர்களில் ஒருவர். அத்துடன், அவர் சனாதிபதியின் சகோதரருமாவார்.
பசில் ராஜபக்ச இவ்வாறு குற்றங்கள் நடந்ததாக ஒத்துக் கொண்டதனால் அவரது சகோதரரும், பாதுகாப்புச் செயலருமாகிய கோத்தபாய மீது, அவர் அமரிக்கப் பிரஜை என்றவகையில் அமெரிக்காவில் வழக்குத் தொடர் முடியும். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
யுத்த காலத்தில் செய்மதிகளினூடாக அமெரிக்கா வன்னிப் பிரதேசத்தில் நடந்தவற்றை நன்கு அவதானித்து வந்தது. அமரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினுடாகப் பெறப்பட்ட போர்க்களப் பிரதிமைகள் அரச சார்பற்ற நிறுவனங்களதும் பிற நிறுவனங்களதும் அறிக்கைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இன்னும் வெளியிடப்படாத ஆதாரங்கள் பல அமெரிக்க அரசிடம் இருக்கக் கூடும் என்ற அனுமானங்கள் தோன்றியுள்ளதும் இங்கு நோக்கற்பாலது.
கடந்த ஆண்டு ஆவணித் திங்களில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ‘விக்டோரியா நியுலான்ட்’ என்பவரிடம் செய்தி நிருபர் ஒருவர், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மஹிந்த ராஜபக்சவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என வினவினார். அதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு:
இலங்கை அரசாங்கம் நீதி வழங்கல், பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக தனது பொறுப்பினை நிறைவேற்றும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது நடைபெறாதவிடத்து, குறிப்பாக அது விரைவாக நிகழாத போனால் அனைத்துலக பொறி முறை பற்றி ஆலோசிப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.’
‘நியு லான்ட்’ அவர்கள் மார்கழித் திங்களில் வெளிவந்த ‘படிப்பினைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின்’ அறிக்கையை வரவேற்கின்றார். அந்த அறிக்கையில் மனித உரிமைகள், மற்றும் விடயங்கள் தொடர்பாக காத்திரமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்பது அவரின் கருத்தாகும். ‘ஆயினும், இறுதி யுத்தத்தின் போது அங்கு நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றி இந்த ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடாகும்’ என அவர் மேலும் விளக்கியுள்ளார்.
நீதிக்குப் புறம்பான கொலைகளும், அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்களும்:
இந்த வாக்குமூலத்தை வழங்கிய மேற்குறித்த நபர் குறிப்பிட்டுள்ளவாறு, சரணடைந்த விடுதலிப் புலிப் போராளிகளை கொலை செய்யுமாறு கட்டளை வழங்கப்பட்டிருந்தால் அது யுத்தம் தொடர்பான ‘ஜெனீவா மகாநாட்டு’ விதிகளுக்கு முரணானதாகும். ஜெனீவா பிரகடனத்தில் இலங்கையும் ஒப்பமிட்டுள்ளதனால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
இக்குற்றச்சாட்டு மிக வலுவானதொன்றாகும். ஏனெனில், சரத் பொன்சேகா உள்ளடங்கலாக இராணுவத்தின் முக்கிய புள்ளிகளின் கூற்றுக்களும் இதனுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றன. பொன்சேகா யுத்தத்தின் இறுதிக் காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் என்பது இங்கு முக்கியமாகும். இவர் 2009 கார்த்திகைத் திங்களில் ‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், கோத்தபாயவின் கட்டளையின் பேரிலேயே நீதிக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பொன்சேகாவின் கூற்று வருமாறு:’ முதலில் பசில் ராஜபக்சே கோத்தபாயவுக்கு சில தகவல்களை வழங்கியுள்ளார். அதனடிப் படையில் கோத்தபாய 58வது படைப் பிரிவுத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வாவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். சரணடையும் விடுதலைப் புலிப் போராளிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும், அவர்களைக் கொலை செய்யும் படியும் சவேந்திர சில்வாவுக்கு அவர்கட்டளை பிறப்பித்துள்ளார்.’
சரத் பொன்சேகா ‘சண்டேலீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய இந்தக் கருத்துக்களுக்காக அவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பலத்த கண்டனங்களின் மத்தியில் அவர் இந்த கருத்துக்களைப் பின்னர் மீளப் பெற்றுக் கொண்டுள்ள நிலையிலும் அவருக்குத் தண்டனை வழங்கப்படுள்ளது. எனினும், அவர் பின்பு ‘பீபீ சீ’ நிருபர் ‘ஸ்டீபன் சக்கருக்கு’ வழங்கிய பேட்டியில், அரசாங்க ஆணையின் கீழ் நடைபெற்ற குற்றங்கள் பற்றி தான் அனைத்துலக நடுநிலையான அதிகாரி ஒருவரிடம் வாக்குமூலம் வழங்குவதற்குத் தயாராக விருப்பதாகக் கூறியுள்ளார்.
பொன்சேகாவின் இந்த விடயம் பற்றிய தகவல்களை ‘அலைவரிசை 4′ தொலைக்காட்சியானது இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் பெற்ற செய்தியின் அடிப்படையில் 2011 ல் வெளியிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த இராணுவ அதிகாரி சர்வேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய 58ஆம் படைப் பிரிவில் பணிபுரிந்தவர். அவர், ‘ சரணடைபவர்களில் சிலரைக் கொலை செய்யும்படி எங்களுக்கு மேலிடத்திலிருந்து கட்டளை வந்தது. இந்தக் கட்டளை உத்தியோகப் பற்றற்ற முறையில் எல்லாப் படைப் பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது’ என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘இந்தக்கட்டளைகளைப் பிறப்பித்தவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் தான் எனத் தன்னால் திடமாகக் கூற முடியும்’ எனக் கூறினார். கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இதனை மறுத்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், பன்னிரண்டு வயது மட்டும் உடைய பிள்ளையும் ஏனைய போராளிகளைப் போன்று விசாரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த வாக்குமூலத்தை கொடுத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
‘மகன் மூலமே அவர்கள் பிரபாகரனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டார்கள் என நான் பின்னர் அறிந்தேன். மகனும் பின்னர் கொல்லப்பட்டார் எனவும் அறிந்தேன்’ எனக் கூறியுள்ளார்.
இவரின் வாக்கு மூலத்தில் ‘லசந்த விக்கிரமசிங்கா’வின் கொலை பற்றியும் அரசாங்கத்துக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த லசந்த என்பவர் தான் ராஜபக்சவின் ஆட்சியாளரால் தான் கொலை செய்யப்படுவேன் என முன்கூட்டியே தனது ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் 2009 தைத் திங்களில் ஆசிரிய தலையங்கம் தீட்டியவர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.
அவர் தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: ‘ ஈற்றில் நான் கொல்லப்படும் போது அரசாங்கமே அதைச் செய்யும்.’ அவர் தொடர்ந்து ஜனாதிபதியை விளித்து எழுதுகையில், ‘ எனது இறப்புக்கு யார் காரணம் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிட வேண்டாம். என் உயிர் மட்டுமல்ல உங்கள் உயிரும் அதில் தங்கியுள்ளது’ என எழுதினார்.
அரசின் ஒரு முக்கிய அமைச்சராகிய ‘மேர்வின் டி சில்வா’ தான் இந்தக் கொலையைச் செய்தவர் என இந்த தகவலைத் தந்த நபர் நம்புகின்றார். ஆனால், ஜனாதிபதி அந்தக் கொலைக்கு அனுமதி வழங்கியுள்ளார் எனவும் இவர் நம்புகின்றார். இவர் மேலும் தனது சட்டத்தரணிக்கு பின்வருமாறு கூறியுள்ளார்: ‘ இத்தகைய விடயங்கள் மேலிடத்திலிருந்து தான்…அதாவது ஜனாதிபதியிடமிருந்து தான் வருகின்றன. அவரே பொறுப்பாளியாகின்றார்’
மற்றுமோர் பார்வையில் : இலங்கை அரசும் அதன் பிரதிநிதிகளும் எதுவித போர்க் குற்றங்களும் நிகழவில்லை எனவும், இராணுவத்தினர் இறுதிக் கட்டப் போரின் போது வேண்டுமென்றே பொது மக்கள் எவரையும் கொலை செய்யவில்லை எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள்.
மகிந்த ராஜபக்சவும் இதனையே 2009 ஜூலையில் ‘டைம்’ சஞ்சிகைக்குக் கூறியுள்ளார். ‘இறுதிக் கட்டத்தில் இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் எதுவும் இடம் பெறவில்லை….பொது மக்கள் கொல்லப்படவில்லை.இவை யாவும் பொய்ப் பிரச்சாரமே’ என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கப் பேச்சாளர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றார்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், தமது படைகள் மனிதாபிமானத்துடன் இயங்கி ஆயிரம் ஆயிரம் பொது மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றார்கள்.
இது தொடர்பாக இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜாலியா விக்கிரமசூரியாவும் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்காகத் தாம் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகள் எதனையும் மேற்கத்திய ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை என இவர் குறைப்படுகின்றார்.
‘ நாங்கள் செய்தது என்னவென்றால் விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழ் மக்களை அவர்களிடமிருந்து மீட்டெடுத்ததேயாகும். இதற்காக நாங்கள் பாதைகள் அமைத்து அப்பாவி மக்களை வெளியே கொண்டு வந்தோம். இந்த முயற்சியில் நாங்கள் 6000 வரையில் எமது இராணுவத்தினரைப் பலி கொடுத்தோம்’ என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னை நாள் விடுதலைப் புலிப் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பாகவும், இடம் பெயர்ந்த மக்களைக் அவர்களது சொந்த இடங்களில் அல்லது புதிய இடங்களில் மீள்குடியமர்த்தல் பற்றிய அரசாங்க முயற்சிகள் யாவும் ஏறத்தாழ 96 விழுக்காடு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளன. இலங்கை செய்திகளின்படி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னை நாள் புலி உறுப்பினர்கள் சமுதாயத்தில் நல்ல முறையில் ஒருங்கிணைந்துள்ளார்கள்.
இலங்கையானது கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக தனிநாடு வேண்டி நின்ற புலிகளுடன் மிகவும் கடினமான போர் ஒன்றை நடாத்தி வந்துள்ளது. இந்தக் காலத்தில் ‘தமிழ்ப் புலிகள்’ எனும் பெயருடன் புலிகள் தற்கொலைப் படை ஒன்றை உருவாக்கி தாக்குதல்களை நடாத்தினார்கள். பெருந்தொகையான பொதுமக்களைக் கொலை செய்தார்கள். பல்வேறு கொடுமைகளைப் புரிந்தார்கள்.
நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்த உள்நாட்டுப் போரினால் நாட்டுக்கு ஏற்பட்ட மனித இழப்பு ஒரு இலட்சம் வரையிலிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்பட்ட இழப்புக்களின் பணப் பெறுமதி 200 பில்லியன் அமரிக்க டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது இலங்கையின் 2009ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போன்று ஐந்து மடங்காகும்.
சரணடைந்த போராளிகளையோ பொது மக்களையோ இராணுவத்தினர் வேண்டுமென்றே கொலை செய்தார்கள் என்பதை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன், நடந்ததாகக் சொல்லப்படும் கொடுமைகளுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் உயர்தரமானவை எனக் கூறப்படும் புகைப்படங்களும் காணொளிகளும் உண்மையானவை எனக் கண்டறிய முடியாதிருப்பதுடன், அவை புலிகளுக்கு ஆதரவானவர்களால் புனையப்பட்டவை என அரசாங்கம் கூறுகின்றது.
பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4′ செய்தியில் காட்டப் பட்ட நீதிக்குப் புறம்பான கொலைகள் எனும் ஆவணப் படத்துக்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் ‘நிபுணத்துவம் அற்ற தன்மை பற்றிய ஆய்வு’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘அலைவரிசை 4′ இல் சில சாட்சிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
‘அலைவரிசை 4′ இல் காட்டப்பட்ட பல விடயங்கள் புனையப்பட்டவையாகவும், பெயர் கூறப்படாத சாட்சிகளினால் சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்களாகவும், பிறர் மூலம் அறிந்தவைகளாகவும் உள்ளன என அந்த அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலும் அவை கற்பனை செய்யப்பட்டவையே. அன்றி, பிற காரணிகளின் அடிப்படையிலானவை அல்ல என்பதே அரசின் நிலைப்பாடாகும்.
‘அலைவரிசை4′ இல் வெளிவந்த சில காட்சிகளைப் பற்றி, குறிப்பாக இராணுவத்தினர் தமிழர்களைக் கொலை செய்யும் காட்சிகளைப் பற்றி ‘அல்ஜசீரா’ தொலைக்காட்சியினர் கேள்வி எழுப்பிய பொழுது ரஞ்சித் விஜயசேகரா எனும் அரச பிரதிநிதி அதனை மறுத்து, அவை உண்மைத் தன்மை அற்றவை எனவும், அந்தக் காட்சிகள் தேவைக்கு ஏற்ப கையாடல்களுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன என்றும், அவற்றில் சில (கொலைக் காட்சிகள்) புலிகளினால் கூட தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தார்.
இந்த ஆவணப் படத்தை ஆராய்வதற்காக 2010ல் இலங்கை அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவானது, இந்தக் காட்சிகளின் பதிவுகள் நம்பகத் தன்மை அற்றவை என்றும், அவை புனையப்பட்டவை என்பதற்கு அந்தக் காணொளியில் பல ஆதாரங்கள் உள்ளன எனவும் முடிவெடுத்தது.
எனினும், ஐநாவின் நீதிக்குப் புறம்பான கொலைகள் பற்றிய சிறப்பு ஒருங்கிணைப்பாளராகிய ‘பிலிப் அல்ஸ்டன்’ என்பவர், ‘அலைவரிசை 4′ ன் காட்சிகள் மிகவும் ஆதார பூர்வமானவை எனக் கருத்து வெளியிட்டு, இலங்கை அரசாங்கக் குழு கூறியுள்ளவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அதன் தார்ப்பரியத்தை முற்றாக மறுத்து, அவை தவறான முடிவுகள் என விளக்கியுள்ளார்.
அதே தன்மையில், அரசாங்கத்திற்கு எதிரான போக்குள்ள சக்திகள் தவறான தகவல்களை மேலைத்தேச ஊடகங்களுக்கு வழங்கி வருகின்றார்கள் என உயர்மட்ட அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். திட்டமிட்ட முறையில் தவறான செய்திகளை வழங்குவதே அவர்களின் நோக்கமாகும். இதற்கு நல்லதொரு உதாரணமாக, 2010 நவம்பரில் ‘அல்ஜஸீரா’ வெளியிட்ட செய்தி ஒன்றினைக் குறிப்பிடலாம். புகைப் படங்களின் துணையுடன் கொடுமைகள் நடப்பதாகக் காட்டிய அந்த தகவலை தாங்கள் பெற்ற மூலம் தமிழ் எனக் கூறி, அதனை உறுதி செய்ய முடியவில்லை எனவும் அது கூறியது.
இலங்கை அரசாங்கமும் ஐநாவினால் 2011 ஏப்பிரலில் வெளியிடப் பட்ட அறிக்கையினை ஏற்கவில்லை. அதற்கு ஆதாரமாக அவர்கள் இந்தப் பத்திரிகையில் வெளிவந்த விடயங்களில் உள்ள தவறுகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்று, ஐநாவின் அறிக்கையினைப் பின்வருமாறு விபரிக்கின்றது: ‘ அது பல விடயங்களில் அடிப்படைத் தவறுகளைக் கொண்டுள்ளது. பாரபட்சமான தகவல்கள் உள்ளன் அவை நன்கு உறுதிப்படுத்தப்படாமல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.’
பொதுவாக இலங்கையில் உள்ள நாட்டுப்பற்றாளர்கள் மத்தியில் மேலைநாடுகளில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்களின் நடுநிலைமை பற்றி, குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை போன்றவை பற்றி பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அது தனது விளக்கத்தைக் கொடுக்கும் போது, அவை பற்றி இந்த நிறுவனங்கள் விமர்ச்சிக்கின்றார்கள் என இவர்கள் குறைப்படுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவை அல்லது ஆதரவானவை என சிலரால் கருதப்படுகின்ற அனைத்துலக மன்னிப்புச் சபைக்கு உலகத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை என்பவற்றுடன் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்ச சாட்டப்படுகின்றது. அது மட்டுமன்றி இலாப நோக்கற்ற இந்த அமைப்பு கனேடியத் தமிழர் பேரவையிடமிருந்து அரசியல் நோக்குடன் கூடிய நிதி உதவி பெறுவதாகவும் குறை கூறப்படுகின்றது.
இலங்கை அரசானது தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகின்ற போதிலும், அதன் அமைச்சர்களும் பிரமுகர்களும் இந்த ஆதராங்கள் பற்றி அவ்வப்போது முரணான கருத்துக்களைக் கூறி வருவதையும் காணலாம்.
வெளிவிவகார அமைச்சர் பாலித கோகன 2009 மே 1ஆம் திகதி அல் ஜஸீராவுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் யுத்த சூனியப் பிரதேசம் என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றின் மீது அரசாங்கம் செல் தாக்குதல்களை நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இதே தாக்குதலை அவர் முன்னர் மறுத்திருந்தார்.
செல் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளையும், ஆயுத பிரயோகம் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கொண்ட செய்மதிப் படங்களையும் காட்டி அவரிடம் மீண்டும் வினா தொடுக்கப்பட்டபோது தான் அவர் அத் தாக்குதலை ஒத்துக் கொண்டார். எனினும், மக்கள் அந்த பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல முன்னர் தான் தாக்குதல் நடந்ததெனக் கூறினார். ஆனால், அல் ஜஸீரா நிருபரும் விட்டுக் கொடுக்காமல் ஏப்பிரல் 19 ஆம் திகதியன்று பாலித கோகன அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியை எடுத்துக் காட்டி, அவர் சொன்ன செய்தியையும் அவருக்கு நினைவுபடுத்தி, அதன் முரண்பாட்டை வெளிக் கொணர்ந்தது.
அந்த முன்னைய பேட்டியில், அன்று(ஏப்பிரல் 19) எடுக்கப்பட்ட செய்மதி பிம்பங்களை இவரிடம் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் வருமாறு: ‘அரச படைகள் பாதுகாப்பு வலயங்களை தாக்குவதில்லை; ..ஏனெனில் அங்கு பெருந்தொகையான பொது மக்கள் இருக்கின்றார்கள்.’
போரின் இறுதிக் கட்டத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், அரச படைகளின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக அரசாங்கம் தனது குழுவை, அதாவது படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை 2010 இல் நியமித்தது.
இக் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது. அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும், அரசாங்கம் செய்த பல குற்றங்கள் பற்றியும் கூறப் பட்டுள்ளது. ஆனால் ராஜபக்சவின் நிர்வாகம் அனைத்துலக சட்ட விதிகளை மீறும் வகையில் எதுவித பாரிய குற்றங்களையும் இழைக்கவில்லைஎன கூறி அவர்களைக் காத்துள்ளது.
இனப்டுகொலை:
அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாட்டிற்கு மிகவும் முரணான வகையில், இலங்கையில் 2009ல் வன்னியில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்தவற்றை, நவீன இலங்கை உருவாகிய காலம் தொட்டு திட்டமிட்டு நடாத்தப்படும் மிகப் பாரதூரமான வன்செயல்களின் ஒருபகுதியாகவே நோக்க வேண்டியுள்ளது என தமிழர்களுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளை, கொள்கைகளை திறனாய்வு செய்பவர்கள் கருதுகின்றார்கள்.
அருந்ததி ராய் எனும் இந்திய எழுத்தாளர், வடகிழக்கில் நிகழ்ந்த இறுதிப் போரைப் பற்றி விபரிக்கையில் ‘ அது தமிழர்களுக்கு எதிரானதோர் இனத்துவேச யுத்தம்’ எனக் வர்ணிக்கின்றார். அவர் தொடர்ந்து விளக்குகையில், ‘….அது சமூக ஒதுக்கல், பொருளாதாரத் தடைகள், இனக்கலவரங்கள், சித்திரவதைகள் என்பவற்றை உள்ளடக்கிய நீண்ட வரலாறு கொண்ட இனத்துவேசம் ஆகும்’ எனக் கூறுகின்றார்.
அத்துடன், இவர் இதுபற்றி மற்றுமொரு இடத்தில் கூறும் பொழுது, ‘யுத்தத்தின் போது தமிழர்களுக்கு நிகழ்ந்தவை அனைத்தும் இன அழிப்பு எனும் வரைவிலக்கணத்தின் பால் படுமேயன்றி, எந்த வகையிலும் அதை விட குறைந்ததல்ல’ என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
‘வாசிங்க்டன்’ நகரிலிருந்து செயற்படும் மனித உரிமைகளுக்கான பிரபல சட்டத்தரணி ‘புரூஸ் பெயின்’ என்பவர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவுக்கு எதிராக, சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்ட விதிகளின் கீழ் வழக்குத் தொடுப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றார்.
இந்த சட்டத்தின் கீழ் சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான கொலைகள் என்பவற்றுக்குப் பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு அரசியல் வாதிகளை விசாரணைக்கு உட்படுத்த முடியும். ‘பெயின்’ அவர்கள் பிரித்தானிய ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் போரின் இறுதிக் காலங்களில் நடந்தவை பற்றிக் குறிப்பிடுகையில், ‘தமிழ் மக்களை மொத்தமாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ கொன்றொழிக்கும் நோக்கம் இருக்கவில்லை என்று என்ற முடிவுக்கு வருதல் மிகக் கடினம்’ எனக் கூறியுள்ளார்.
தமிழர்களின் உரிமைகளைப் பாதுக்காப்பதற்கும், ஜெனீவா பிரகடனத்திற்கமைய, இனப்படுகொலை அடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகவும் இயங்கி வரும் இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு (வுயுபு) பெருந் தொகையான ஆதாரங்களை சேகரித்துத் தொகுத்துள்ளார்கள்.
இந்த அமைப்பானது, இலங்கையில் மாறி மாறி ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் யாவும் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் வாழ்வை சிதைப்பதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ செயற்பட்டு வந்துள்ளன என நம்புகின்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் பற்றி ‘பெயின்’ அவர்கள் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரம் ஒன்றினை அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இனப் படுகொலை நடந்துள்ளதென இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும்,பிரபல இசை வல்லுநர் ‘மாயா’(ஆ.ஐ.யு.) அவர்களும் 2009ஆம் ஆண்டு தைத் திங்களில், தொலைக்காட்சி பேட்டி நடாத்தும் ‘தவிஸ் சிமிலி’ என்பவருக்கு வழங்கிய ஒரு பேட்டியில், கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடைபெற்று வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புஷ் ஜனாதிபதியாக இருந்த நாட்களில் இவ்வாறு செய்து விட்டுத் தப்பிவிடலாம். ஆனால் ஒபாமாவின் ஆட்சியில் அது சாத்தியமல்ல எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
துணிவுடன் செயற்படும் திறன் குறைவடைகின்றது:
2008ல் இடம்பெற்ற ஜனாதிபதிக்கான தேர்தல் விவாதத்தில் ஒபாமா இவ்வாறு கூறினார் :’ இனப் படுகொலை நடைபெறுகின்றபோது, உலகின் எங்கோ ஒரு பகுதியில் இன அழிப்பு இடம் பெறுகின்ற போது, நாம் அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருந்தால் அது எம்மை சிறுமைப்படுத்தி விடும்.’
பேராசிரியர் ‘நோம் சொம்ஸ்கி’ என்பவர் மேற்கத்தைய நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையினை வெகுவாக சாடுபவர்களில் முக்கியமான ஒருவர். பதவிக்கு வந்த ஒபாமா நிர்வாகம் 2009ல் இலங்கையில் நடந்தவை தொடர்பாக, ஒபாமாவின் மேற்படி கூற்றுக்கு அமைய இப்படியான இழிநிலை ஒன்றையே எடுத்துள்ளது என தனது வெறுப்பைக் காட்டியுள்ளார்.
‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ எனும் தலைப்பில் ஐநாவில் இடம் பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர், 1994இல் ருவாண்டாவில் இடம்பெற்ற இனக் கொலையில் நடந்து கொண்டது போல் இலங்கையிலும் 2009ல் நிகழ்ந்த இன அழிப்பின் போதும் மேலை நாடுகள் தவறிளைத்துள்ளன எனும் கருத்தை முன்வைத்தார்.
யுத்தத்தின் முடிவில் விடுதலைப் புலி அமைப்பும், அதன் தலைமையும் இலங்கைப் படைகளால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் பெரும் பாலானவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது கைப்பற்றப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றங்களுக்காக வழங்கப்படக்கூடிய பொருத்தமான தண்டனையாக இதனை ஏற்றுக் கொள்வது கடினம்.
அதேவேளையில், யுத்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த அரசின் முகவர்கள், அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றங்களுக்காக அனைத்துலக மட்டத்தில் ஐநாவின் ஊடாக விசாரணைகளுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை.
இதுவரை எந்தவொரு இராணுவ அதிகாரியோ அரசியல் தலைவரோ யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்காக நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten