இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை அவுஸ்ரேலிய அரசாங்கம் விரைவில் தெரிவிக்கும் என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் கெவின் ருட் அவர்களின் பேச்சாளர் AAP செய்திவலையத்துக்கு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அரசாங்கம் இரு பக்கத்தினாலும் இழைக்கப்பட்ட போற்குற்ற முறைப்பாடுகளை விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை எப்போதும் கேட்டு வந்துள்ளது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் கெவின் ருட் அவர்கள் இதுவரை கருத்தினை வெளியிடாத நிலைகுறித்து அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் மேற்சபை உறுப்பினர் லீ ரியான்னன் அவர்கள் விமர்சித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் அகதிகளை தடுப்பதற்காக இலங்கையுடன் ஒத்துழைப்பது இதற்கு ஒரு காரணம் எனவும் மேற் சபை உறுப்பினர் லீ ரியான்னன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் செய்தி வலையம் இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
அதனை இங்கு முழுமையாக தருகின்றோம்:
அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் கெவின் ருட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து கருத்து வெளியிடப்படும் என்று பல தடவைகள் உறுதியளித்த போதும் இதுவரை காலமும் மௌனமாக இருப்பதால் நெருக்கடியைச் சந்தித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மே 2010 இல் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுமிகவும் காலம் தாழ்த்தி இரண்டு மாதங்களுக்கு முன் 26 வருட பிரச்சினை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கை போரில் இரு பக்கங்களினாலும் நிகழ்த்தியதாக கூறப்படும் போற்குற்றங்களை சரியாகக் கவனத்தில் எடுக்கவில்லை என்று கனடாவும் பிரித்தானியவும் விமர்சனம் தெரிவித்துள்ளன.
மனித உரிமை அமைப்புக்கள் இந்த அறிக்கை ஒரு கண் துடைப்பு என்றும் குறிப்பாக புலிகளுக்குஎதிரான 2009 இல் நடத்திய இறுதித் தாக்குதல் பற்றி சுயாதீனமான தனிப்பட்ட விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வாசித்த பின்னர் தான் விசாரணைக்கான தேவை பற்றி மதிப்பீடு செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் கடந்த வருடம் கூறியிருந்தார்.
ஆனால் அறிக்கை வெளியாகிய நாளிலிருந்து அவர் மௌனமாக இருந்து வருகின்றார்.
அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சி வியாழன் அன்று இந்த தாமதத்தை விமர்சித்துள்ளது.
‘வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் ஆணைக்குழுவின் அறிக்கையைக்காக பல மாதங்களாககாத்திருந்ததின் மூலம் இலங்கையின் போற்குற்றங்கள் மீது பன்னாடுகளுக்கு இருக்கும் கரிசனயை புறந்தள்ளியுள்ளார்’ என்று கிறீன் கட்சியின் மேற் சபை உறுப்பினர் லீ ரியான்னன் கன்பராவில் பத்திரிகையளர்களுக்கு தெரிவித்தார்.
அறிக்கை வெளிவந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் திரு. கெவின் ருட் வாய்திறக்காமல் இருக்கிறார்.
படகுகளில் வரும் அகதிகளை தடுப்பதற்காக இலங்கையுடன் ஒத்துழைப்பது இதற்கு ஒரு காரணம் என்று மேற் சபை உறுப்பினர் லீ ரியான்னன் நம்புகிறார். ஆனாலும் மென்மையான நடவடிக்கைக்கான காலம் கடந்து விட்டது என்று மேலும் கூறினார்.
‘எங்களுடைய பிரதேசத்தில் போற்குற்றங்களும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதும் குற்றங்கள் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் எமது கடமையாகும்’
அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிக்கை பற்றி இன்னும் மதிப்பீடு செய்து கொண்டிருப்பதாக அண்மையில் கூறியது.
திரு. ருட்டின் பேச்சாளர் அவுஸ்திரேலியா அரசாங்கம் ‘விரைவில் கருத்தை தெரிவிக்கும்’ என்றார்.
‘ அவுஸ்திரேலியா அரசாங்கம் இரு பக்கத்தினாலும் இழைக்கப்பட்ட போற்குற்ற முறைப்பாடுகளை விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை எப்போதும் கேட்டு வந்துள்ளது’ என்று பேச்சாளர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten